கடத்தூர், அர்ச்சுனேசுவரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது.
இறைவன் : அர்ச்சுனேஸ்வரர், மருதவனஈஸ்வரர், திருமருதுடையூர், மருதீசர்
இறைவி : கோமதி அம்மன்
தல விருட்சம் : அமராவதி
தல சிறப்புகள் : இத்தல இறைவன் மிகப்பெரிய சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அமராவதி நதிக்கரையில் உள்ள 11 சிவன் கோயில்களில் இங்குள்ள மூலவர் சுயம்புவாக உள்ளார். மேலும் ஆற்று நீரில் படும் சூரிய ஒளி ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை கோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம் வசந்த மண்டபம் கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும்.
கோவில் அமைப்பு : இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. கிழக்கு வாசல் பகுதியில் 36 அடி உயர ராஜ கோபுரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மிகப் பெரிய கருவறை விமானத்தைக் கொண்டுள்ள கோயில் என்ற சிறப்பைப் பெறுகிறது. இறைவன் சன்னதியிலிருந்து இறைவி சன்னதி தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி கோயில்களாக, தனித்தனி முற்றம், தனித்தனி வாசல் என்ற நிலையில் அமைந்துள்ளன. கன்னி மூலையில் வலம்புரி விநாயகரும், வாயு மூலையில் சுப்பிரமணியரும் அவரருகே சண்டிகேசுவரரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவர் கருவறையின் தெற்கு புறம் தட்சிணாமூர்த்தி உள்ளார். மேற்கில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் உள்ளார். சிவ சன்னதிக்கு முன் நந்தி அழகிய திருமேனியுடன் விமானத்துடன் கூடிய மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.
அமராவதி ஆறு மேற்கிலிருந்து வடக்கு பாகமாக வலம் வந்து கிழக்கு நோக்கி செல்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக்கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி ஆகும். சிவன் கோயிலிலிருந்து அம்மன் கோயில் வலது பாகம் தனியாக பிரிக்கப்பட்டு மதில் சுவரும் எழுப்பப்பட்டு தனித்தனி ஆலயங்களாக அமையப் பெற்றுள்ளது. அம்மன் சன்னதிக்கு அருகில் இடது பக்கம் அரளிச்செடியைப்பற்றி பெரிய புற்று லிங்கம் வளர்ந்து வருகிறது.சைவ வைணவ பேதமின்றி கருவறையின் மேற்கு பக்கம் விஷ்ணுவிற்கும் ஒரு தனி சன்னதி உள்ளது. மதுரை மீனாட்சி கோயிலைப்போல் இத்தலத்தில் சுவாமிக்கு வலது பக்கம் அம்மனின் ஆலயம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
சைவம், வைணவம் பேதம் இன்றி கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் இறைவனின் முதுகுப்பகுதியில் விஷ்ணு சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்புறம் 4½ அடி உயர பலிபீடமும், 3½ அடி நீளம் 3 அடி உயரம் கொண்ட நந்திதேவர் சிலையும் அமைந்துள்ளது.
பொதுவாக சுயம்புலிங்கம் உள்ள கோவில்களில் நவக் கிரக சன்னிதி இருப்பதில்லை. இருப்பினும் இந்த திருக்கோவிலில் கோமதியம்மனின் தவத்தினை கண்ட சனிபகவான் தானும் தவமியற்றி வழிபட்டு வந்ததாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பக்தர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்கள் மற்றும் ராகு, கேதுகளின் தோஷ காலங்கள் உள்ளிட்ட இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் இங்கு தவமியற்றி நிற்கும் சனிபகவான், கால பைரவர் ஆகியோரை வணங்கி, பின் கோமதியம்மனை வணங்கி அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.
தல வரலாறு : கடத்தூர் என்ற பெயருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் முக்கியமாக பஞ்ச பாண்டவர்கள் தங்களது வன வாச காலத்தில் இங்கு வந்து மறைந்து வாழ்ந்ததாகவும், அவர்களைக் கண்டு பிடிக்க இந்த ஊரில் உள்ள மாடுகளை கடத்திச்சென்று ஆற்றின் மறுகரையில் அடைத்து வைத்ததாகவும் அதனாலேயே இந்த இடம் காரைத் தொழுவு என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கடத்தூர் ஆனது என கூறுகிறார்கள்
விக்கிரமசோழன் என்பவனது காலத்தில் காரத்தொழுவு எனும் கிராமத்திலிருந்து கொங்கேல சங்கு எனும் கிராமத்திற்கு நாள்தோறும் 60 குடம் பால் சென்று கொண்டிருந்தது. இதில் ஒவ்வொருநாளும் ஒரு குடம் பால் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிந்திக்கொண் டிருந்தது. அந்த இடத்தை தோண்டிப் பார்க்கையில் ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து ரத்த ஆறாக ஓடியது. காரணம் அங்கிருந்த சிவலிங்கத்தின் தலையில் வெட்டப்பட்டிருந்தது தான்.இந்த வெட்டப்பட்ட பகுதியை நாம் இன்றும் கூட காணலாம். உடனே தான் இந்த சுயம்பு லிங்கத்தினை வழிபடும் வழக்கம் ஏற்பட்டு, பத்தாம் நூற்றாண்டில் விக்கிரமசோழ தேவன் காலத்தில் கோயில்கட்டப்பட்டது
பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர். பல ஆண்டுகளுக்கு பிறகு காரைத்தொழுவில் இருந்து இந்தப் பகுதி வழியாக இடையர் ஒருவர் பால் கொண்டு சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கால் இடறி ஒரு குடம்பால் சிந்தியது. தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்ததால் மன்னன் விக்கிரம சோழனின் உத்தரவுப்படி அங்கிருந்த மூங்கில் புதர்கள், மருத மரம் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது வெட்டுப்பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அது அருகில் இருந்த அமராவதி ஆற்றில் கலந்து ஓடியது. செய்தியறிந்து மன்னர் விக்கிரம சோழன் வந்து, தன் கைவிரல் மோதிரத்தால் ரத்தம் வடியும் இடத்தில் அழுத்த ரத்தம் நின்றதாம். இதையடுத்து அந்த இடத்தில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்தை விக்கிரம சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் இங்குள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் வெட்டுப்பட்ட காயத்தின் தழும்பு போன்ற அமைப்பை காண முடியும்.
சோழர் படைத்தளபதி நாகதோஷத்தால் பாம்பு கடித்து அவதிப்பட்ட போது, இங்குள்ள அம்மன் புற்றாக தோன்றி அருள்புரிந்ததாகவும், குலோத்துங்க சோழன் மகளுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்ட போது, அர்ச்சுனேஸ்வரர் தோஷம் நீக்கி அருள்புரிந்ததாகவும். கர்ண பரம்பரை மற்றும் தல வரலாற்று செய்திகள் கூறுகின்றன. கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில், திரிபுவன சிங்கன் என்பவருக்கு ‘பிரமேகம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் கடத்தூர் மருந்தீஸ்வரரை வணங்கி வேண்டியதால் சர்க்கரை நோய் நீங்கி நலம் அடைந்தார். எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் தானமாக வழங்கியதாகவும் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வளர்பிறை, பஞ்சமிதிதி மற்றும் பவுர்ணமி திதியன்றும் திருமணத்தடை நீங்க இத்திருக்கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. இதில் மாங்கல்ய தோஷம் நீங்க வேண்டி பெண்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இத்திருத்தலம் திருமணத்தடைகள் நீக்கும் ‘தென் திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களால் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்த பூர்த்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சூரிய பகவான் தன்கிரகணங்களை அர்ச்சுனேஸ்வரர் மீது செலுத்தி வழிபடுவதால் இவ்விறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.
காலை 8.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 6.00 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும். பிரதோஷ காலங்களில் இரவு 7.30 வரை நடை திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை