முட்டம், நாகேசுவரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மாநகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. கோவை பேருந்து நிலையத்திலிருந்து செம்மேடு வழியாக கோயிலை அடையலாம். கோட்டை காடு பேருந்து நிறுத்தத்தில் இறங்க, வேண்டும். அல்லது பேரூர் வழியாக பூண்டி செல்லும் பஸ்ஸில் செம்மேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி டாக்ஸி மூலம் கோயிலை அடையலாம்.
இறைவன் : நாகேசுவரர்
இறைவி : முத்துவாளி அம்மன்
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : காஞ்சிமாநதி தீர்த்தம்
தல சிறப்புகள் : இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் நாகேசுவரர் என்ற பெயருடன் முத்துவாளி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தால், இறைவன் அருள்மிகு நாகேசுவரர் என்ற திருப்பெயர் கொண்டார். இந்தத் தலத்து இறைவனை நாரத மகரிஷி, ராகு, கேது ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.
கோயில் அமைப்பு : கோவை மாவட்டத் திருத்தலங்களுள் மிகவும் சிறப்புப் பெற்றது, திருமுட்டம் நாகேஸ்வரர் ஆலயம். வீர ராசேந்திரச் சோழனின் காலமான 13 ம் நூற்றாண்டில் இந்தத் திருத்தலம் புதுப்பிக்கப்பட்டு வழிபடப்பட்டது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. ஆலயத்தில் இறைவன் லிங்கவடிவில் நாகாபரணம் அணிந்த கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார். முத்துகளால் ஆன காதணிகளை அணிந்திருப்பதன் காரணமாக அம்பிகைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். அம்பிகை திரிபுரை அம்சமாக இருக்கிறாள். மதுரை மீனாட்சி அம்மன் சிலையும், முத்துவாளி அம்மன் சிலையும் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அம்பிகையின் எழில் தோற்றமும் அதை மெய்ப்பிக்கிறது. அம்பிகை வலக்கரத்தில் நீலோத்பல மலரை ஏந்தி, முன் கையில் பரியகம் என்னும் ஆபரணம் தரித்து, இரு தோள்களையும் அடுக்கடுக்கான அரும்புகள் பொருந்திய கட்கங்களை அணிந்து, இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் மடித்து வைத்திருக்கும் இடக் காலை நந்தி வருடிக் கொடுப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபூர்வமான சிற்பமாகும். கோயிலில் கன்னிமூல விநாயகர், முருகப்பெருமான், திருமால், நவகிரகங்கள் ஆகியோரும் காட்சி தருகின்றனர். ஆதிசேஷன் வழிபட்ட இந்தத் தலத்தில் ஐந்து தலை நாக விளக்குத் தூண் உள்ளது. நான்கு கோபுரங்களுடன் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் பல கல்வெட்டுகளும், கவின் மிகுந்த சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன.
விநாயகப் பெருமான் சன்னிதி கன்னிமூலையில் அமைந்துள்ளது. நாகேஸ்வரருக்குரிய ஆவுடையார் முன்பு சதுர வடிவில் பீடமாக பழுதுற்ற நிலையில் இருந்தது. பழமையான திருக்கோயிலின் வட்ட வடிவமான ஆவுடையாரை பக்தர் ஒருவர் வழங்க, முன்பிருந்த சதுர வடிவ ஆவுடையார் கீழே பொருத்தப் பெற்று, மேலே வட்ட ஆவுடையாரில் உயரமாக நாகேஸ்வரரை லிங்க வடிவில் எழுந்தருளச் செய்யப் பெற்றது. நாகாபரணத்துடன் கூடிய அலங்காரத்தில் அருள் புரியும் நாகேஸ்வரரை துதித்து அருள் பெறலாம். இதையடுத்து சண்டிகேஸ்வரர், முருகன், திருமால் ஆகியோருக்குத் தனி சன்னிதிகள் உள்ளன. கோயிலின் வடகிழக்கு பகுதியில் பைரவர் தனிச் சன்னிதியும் நவக்கிரக சன்னிதியும் உள்ளன. ராகு, கேது நாகங்கள் சிவபெருமானை வழிபட்ட தலம் ஆதலால் ஐந்துதலை ஆதிசேஷன் விளக்கு தூண் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளன்று இத்தூணின் மீது தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். காஞ்சிமா நதிக்கரையில் இருந்து நாகம் ஒன்று. தினமும் நடு இரவில் வந்து வழிபட்டுச் சென்றுள்ளது. நாக கன்னிகள் காஞ்சிமா நதி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்ததாக ஐதீகம். ராகு--கேது தோஷத் தால் பாதிக்கப்பட்டவர்கள் கார்த்திகை தீபத்திருநாளன்று கோயிலிலுள்ள ஆதிசேஷன் விளக்கு தூண் மீது தீபம் ஏற்றி வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தல வரலாறு : தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது முட்டம். வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகும் காஞ்சி மாநதி இந்தத் தலத்தின் வழியாகச் சென்று, கூடுதுறையில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. முட்டத்தில் தொடங்கி கரூர் வரை 36 சிவாலயங்களை சோழ மன்னர்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் இந்த ஊர், `அமர புயங்க நல்லூர் சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
தினமும் இங்கு இறைவனுக்கு ராகுகால வேளையில் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. பசும்பால் மட்டுமே அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பாலபிஷேகம் செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு நன்மைகள் கைகூடும். பௌர்ணமி தினங்களில் அம்பிகைக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகை, அஷ்டமி, அமாவாசை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிவனே இங்கு மூலவர் என்பதால் ஆண்டுதோறும் மகாசிவராத்திரிப் பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை