காளம்பாளையம், காளத்தீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப் பாளையம் வட்டத்தில், காளம்பாளையம் என்னும் கிராமத்தில் கோவை நகரிலிருந்து திருச்சி சாலையில் அமைந்துள்ளது.
இறைவன் : காளத்தீஸ்வரர்
இறைவி : ஞானப்பூங்கோதை
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இவ்வாலயத்தில் சிவராத்திரி அன்று சூரிய ஒளி நேராக லிங்கத்தின் மேல் விழுவது சிறப்பாகும். ராகு கேதுவினால், நடைபெறுகின்ற தோஷங்களுக்கு பரிகார தலமாக விளங்கும் இவ்வாலயம், ஆந்திர மாநிலம் காளகஸ்திக்கு ஒப்பானதாக கொங்கு நாட்டில் உள்ளது.
தல வரலாறு : கொங்கு நாடு முற்காலத்தில் 24 பகுதிகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அதில் ஒன்று வாயரைக்கால் நாடு. பல்லடம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி அமைந்த ஊர் சூலூர். ஞானப்பூங்கோதை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் ஆலயம் 1500 வருடங்களுக்கும் மேல் பழமைவாய்ந்த இத்தலத்து இறைவனையும், இறைவியையும், அகஸ்தியர், சித்தர்கள், சூரியன், கார் கோடகன் என்னும் நாகதேவதை, ராகு மற்றும் கேது பூஜித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
சிதிலமடைந்து இருக்கும் இக்கோவிலை புதுப்பிக்க எண்ணிய குருக்கள், ஒத்துழைப்பின்மை காரணமாக ஆலய பொறுப்பினை ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்ததாக கூறினார். சாவியை சிவப்பெருமானிடம் வைத்து, உத்தரவு கேட்டு மனமுருகி வேண்டி நின்ற போது வெள்ளை பூ கிடைக்கப் பெற்றதாகவும், மேலும் லிங்கத்தின் பின்புறம் இருந்து 10அடி நீளமுள்ள சர்பம் ஒன்று வெளியேறி சென்றதாகவும் கூறினார். இக்காட்சியைக் கண்டு, மெய் சிலிர்த்து நின்ற அவர், இத்தலத்தில் ஏதோ விசேடம் உள்ளதை உணர்ந்து பொறுப்பை ஒப்படைக்காமல் விட்டு விட்டதாக கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பின் ஊர்மக்களும் அரசாங்கமும் முன்வந்து திருப்பணிக்கு உதவி புரிய முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பின் கோவிலும் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் உள்ளதாக தெரிவித்தார்கள்.
கோயில் அமைப்பு : கிழக்கு முகமாக காட்சி தருகிறார் அருள்மிகு காளத்தீஸ்வரர். அம்பாள் ஞானப்பூங்கோதை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நிதியின் அந்த மண்டபத்தின் மேல் கற்கலரில், சூரிய சந்திரரை பாம்பு விழுங்கும் காட்சியை காணலாம். இங்கு நவகிரகங்களுக்கு சந்நிதி கிடையாது. தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் மற்றும் பைரவருக்கு சந்நிதிகள் உள்ளது. சிவபெருமானுக்கு முன்பு ஓர் புரம் விநாயகப் பெருமானும், மற்றொரு புரம் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். மைசூர் சமஸ்தானத்தவர்களால் கட்டப்பட்டது.
ஜாதக ரீதியாக நடைபெறுகின்ற தோஷத்தவர்கள், ராகு வேளையில், நாக நாத சுவாமியை வழிபட்டு பரிகாரம் செய்ய நிவர்த்தி உண்டாகும். அது போல் கார்கோடகனாலும் ராகு, கேதுவாலும் பூஜிக்கப்பட்ட இத்தலத்திலும் பலன் பரிகாரம் செய்து நற்பயன்களை பெறுகின்றனர்.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை