மஞ்சநாயக்கனூர், அமணீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே பாலாற்று கரையில் மஞ்ச நாயக்கனுர் எனும் பகுதில் உள்ளது.
இறைவன் : அமணீஸ்வரர்
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : பாலாற்று நீர்
தல சிறப்புகள் : ஈசன், பிரம்மா, பெருமாள் மூவரும் ஒரே கருவறையில் இருப்பது மிக சிறப்பாகும். கருவறை பீடம் பிரம்ம ஸ்தானத்திலும், ஈசன் ஆட்சி பீட ஸ்தானத்திலும், விமானம் மகா விஷ்ணு ஸ்தானத்திலும் அமைந்த சிறப்புமிக்க தலமாகும்.இக்கோவிலை ஒருமுறை வலம் வந்தால் உலகை சுற்றி வந்த பலனை தருவதாக சான்றோர் கூறுகின்றனர்.
கோயில் அமைப்பு : கோவிலின் முன் அரசமரத்தடியில் விநாயகர் உள்ளார். நுழைவாயிலில் நந்தி மண்டபம் அடுத்து மகா மண்டபம், ருத்ர தாண்டவம், மயான தாண்டவம், பிட்டுக்கு மண் சுமந்தவர், சிவசக்தி தாண்டவம், பார்வதி சிவன் திருமண மற்றும் ஆனந்த தாண்டவம் என சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டப வாயிலின் முன் வல்லப விநாயகர், இடப்புறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அருள்பாலிக்கின்றனர். பிரம்மா நான்கு தலைகளுடனும், நான்கு கரங்களுடன் வலது கரத்தில் தபோ கட்டையும் ஏடும் தாங்கி காட்சி அளிக்கிறார். ஈசன் தியான நிலையில் பத்மாசனத்தில் ஜடா முடியுடன் நெற்றி கண் அமைப்புடன் அமர்ந்த நிலையில் உள்ளார். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தி அபய ஹஸ்த கோலத்தில் மகா விஷ்ணு உள்ளார்.பொதுவாக கோஷ்டத்தில் காணப்படும் எந்த மூர்த்திகள் இல்லை. கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் பகுதியில் வன்னி மரத்தடியில் ஆறு கரங்களுடன் நின்ற கோலத்தில் தனது வாகனமான காகத்துடன் சனி பகவான் அருள்பாலிப்பது மிக சிறப்பாகும்.
தல வரலாறு : சுமார் 500 ஆண்டுகள் முன்பு தோன்றிய திருத்தலம். திப்பு சுல்தான் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த போது பட்டது குதிரை ஒருநாள் காணாமல் போய்விட்டது. அதனால் மன்னன் மிகவும் வருத்தப்பட்டான். குதிரையை கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார். மஞ்ச நாயக்கனுர் கிராமத்தில் எர்ம நாயக்கர், எத்தலப்ப நாயக்கர் எனும் சகோதரர்கள் குதிரையை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். வெகு விரைவில் கண்டுபிடித்து மன்னரிடம் ஒப்படைத்தனர். மன்னரும் சன்மானமாக ஆழியாறு அணை பகுதியிலிருந்து திருமூர்த்தி மலை பகுதிவரை உள்ள நிலப்பரப்பை தனமாக அளித்ததுடன், இருவரையும் பாளையப்பட்டு மன்னர்களாக அறிவித்து கவுரவித்தார்.
திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள அமணீஸ்வரரை இருவரும் வழிபட்டு வந்தனர். இப்பகுதில் கறவை மாடுகள் அதிகளவில் வளர்க்க பட்டு வந்தனர். ஒரு சமயம் பாலாற்றுக்கரையில் மணல் திட்டில் ஒரு பசு மட்டும் தினமும் பாலை சொரிவதை கண்ட மக்கள் பாளையரிடம் தெரிவித்தனர். மன்னரே நேரில் கண்டு என்ன செய்வது தெரியாமல் அரண்மனை நோக்கி சென்றார். இந்த நிலையில் எரம்ம நாயக்கர் கனவில் ஒரு முதியவர் தோன்றி பசு பால் சொரிந்த இடத்தில் மும்மூர்த்திகள் ஒருசேர உள்ளனர். கோவில் கட்டி பூஜை செய்து வாருங்கள் என்று கூறினார். அடுத்த நாள் பாளையபட்டரின் முன்னிலையில் புற்றை அகற்றிய போது சிவன், விஷ்ணு, பிரம்ம சிலைகள் இருந்தன. நிலத்திலிருந்து தோன்றியதாலும், புற்றை சுற்றி இருந்ததாலும் இக்கோவில் நாதர் நிலப்புற்றீஸ்வரர் எனும் திருநாமத்தில் அழைக்கப்படுகின்றனர்.
மகா சிவராத்திரி, அன்னபிஷகம், ஆனி திருமஞ்சனம் , கார்த்திகை தீபம் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. சனி தோஷ பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. ஆயுள் விருத்தி, தொழிலில் ஏற்படும் தடை, புத்தி கோளாறு, செய்வினை அகற்ற இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிது. ஆதி நந்திகேஸ்வர பெருமானை 108 முறை வலம் வந்து சொம்பு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வேண்டி கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், பொள்ளாச்சி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை