கொழுமம், தாண்டேசுவரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டத்தில் கொழுமம் என்னுமிடத்தில், அமராவதி ஆற்றின் தென்கரையில், அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் சங்கர ராமநல்லூர் என்றழைக்கப்பட்டது.
இறைவன் : தாண்டேஸ்வரர், சோழீஸ்வரர்
உற்சவர் : தாண்டேஸ்வரர்
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : அமராவதி
தல சிறப்புகள் : மூர்த்தி, தலம், தீர்த்த சிறப்புடன், பெரிய கோயில் எனப்படும் இத்தலம் அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சிதம்பரத்தில் உள்ளது போல நடராசர் ஆனந்தத் தாண்டவத்தில் இடது காலை தூக்கிய நிலையில் உள்ளார். அவர் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் காணப்படுகிறார். இந்த அமைப்பின் காரணமாக இத்தலம் தென் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது. இரட்டை சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: தெட்சிணாமூர்த்திக்கு நான்கு சீடர்கள் உண்டு. ஆனால், இங்கு கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் இரண்டுசீடர்கள் தனியே தவக்கோலத்தில் அமர்ந்துள்ளனர்.
கோவில் அமைப்பு : சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் தனிச்சன்னதியிலும், அவளுக்கு முன்பகுதியில் ஜேஷ்டாதேவி, பிரகாரத்தில் சுந்தரவிநாயகர், பாலமுருகன், சூரியன், ஐயப்பன், மகாவிஷ்ணு, துர்க்கை, பைரவர், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மேற்கு நோக்கியபடி சனீஸ்வரன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். கல்மண்டபம் போல் உள்ள இங்கு கருவறைக்கு பின்புறம் உள்ள அக்னீஸ்வரர் சன்னதியும், 32 தத்துவங்களை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட தூண்களும் கலையம்சத்துடன் உள்ளன.
தல வரலாறு : பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும் செழிப்பின்றி இருந்தது. அச்சம்கொண்ட மன்னர் தனது குருவிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யும்படி கூறினார். அதன்படி, வில்வ வனமாக இருந்த பகுதியை சீரமைத்து கோயில் எழுப்பினார். இப்பகுதியை குமண மன்னர் ஆட்சி செய்ததால் “குமணன் நகர்’ எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் “குழுமூர்’ எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி “கொழுமம்’ எனப்படுகிறது. ஜமன்னர், இங்கு நடராஜரை உற்சவராக வைக்க விரும்பி, அவரை சிலையாக வடித்த போது இரண்டு முறை சரியாக அமையவில்லை. கோபமடைந்த அவர், அடுத்த சிலை சரியாக அமையவில்லை எனில் சிற்பிக்கு மரணதண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார். வருந்திய சிற்பி இறைவனிடம், “மன்னர் கையால் உயிர் போவதை விட நீயே எனது உயிரை எடுத்துக் கொள்’ என முறையிட்டார். மன மிரங்கிய நடராஜர், அவருக்கு அருட்காட்சி தந்து, அழகிய அம்சத்துடன் தானாகவே சிலைவடிவில் அமைந்தார்.
திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம், மகாசிவராத்திரி பௌர்ணமி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. திருமணத்தடை, சனிதோஷங்கள் நீங்க, கலைகளில் சிறக்க வேண்டலாம். வஸ்திரங்கங்கள் சாத்தி, விசேஷ அபிஷேகங்கள் செய்யலாம்.
காலை 7.00 மணிமுதல் பகல் 11.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : மேட்டுப்பாளையம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை