கைலாசநாதர் திருக்கோவில, தென் திருப்பேரை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரியிலிருந்து 5 கி.மீ தொலைவில், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள் : ஸ்ரீஅழகிய பொன்னம்மை, சிவகாமி
நட்சத்திரம் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
தீர்த்தம் : தாமிரபரணி
சிறப்புகள்: நவகயிலாயத்தில் ஏழாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் புதன் பகவான் அம்சமாக விளங்குகிறார். இறைவன் சிறிய லிங்க வடிவில், தாமரை மலரில் காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதி முன் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. இது புதன் பகவான் ஆட்சி பெற்று விளங்கும் தலமாகும். நவதிருப்பதிகளில் சுக்கிரன் வழிபட்ட மகரநெடுங்குழைக்காதர் என்ற பெயருடைய திருமால் திருக்கோவில் இவ்வூரில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்றும், நவகைலாயத்தில் ஒன்றும் ஒரேயிடத்தில் அமைந்துள்ள மற்றொரு திருத்தலம் இதுவாகும். தென்னாட்டு திருப்பேரை என்று முன்னர் அழைக்கப்பட்டு பின்னர் தென்திருப்பேரை என்று ஆயிற்று என்பர்.
இக்கோவிலில் இறைவன் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். தெற்குக் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் அம்பாளை தரிசிக்கிறோம். கருவறை முன்பு வெள்ளைக்கல் நான்கு தூண்களுடன் கூடிய அர்த்த மண்டபத்திலிருந்து அம்பாளையும், ஸ்வாமியையும் தரிசிக்கிறோம். சுவாமி சந்நிதியில் ஸ்ரீ கைலாயநாதர், சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு முன்பு துவார பாலகர்கள் உள்ளனர். ஸ்வாமிக்கும் , அம்பாளுக்கும் தனித்தனி விமானங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. சுவாமி சந்நிதிக்குத் தெற்குச் சுற்றில் தட்சிணாமூர்த்தியையும் , கன்னி கணபதியும் , வடமேற்கில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடனும் அருள்பாலிக்கின்றனர்.
தலவரலாறு : அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின்உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய இடம் இத்தலமாகும். நவக்கிரகங்கள் சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் உள்ளனர். அம்மன் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் உள்ளது. கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தியும், நாய் வாகனம் இல்லாமலும் காட்சி தருகிறார். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர்.
ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒருசமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர், ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி, இந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தரமுடியாது என சொல்லிவிட்டார். கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம்,இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சுப் போடு என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்டமுடியாமல் ஒரு இளநீரை பறித்துப்போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்துவிட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்தத் தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்துவிட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.
இங்குள்ள நந்திக்கு, தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்வது விசேஷம். இவ்வூரில் உள்ள மகரநெடுங்குழைக்காதர் கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோயில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்கும் ஊர் என்பதால் இங்கு வந்து பெருமாளையும், கைலாசநாதரையும் வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும். இக்கோயிலில் கால பைரவர், ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இவர் வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால், இவருடன் நாய் வாகனம் இல்லை. பவுர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இங்கு வல்லப விநாயகர், சக்தி விநாயகர், கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்களைத் தரிசிக்கலாம்.பெரிய கோட்டையை உடைய ஊரை “பேரை” என சொல்வார்கள். இவ்வூர் தமிழகத்தின் தெற்கே இருப்பதால், தென்திருப்பேரை என்று பெயர் பெற்றது. பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர், திருச்செந்தூர் முருகனைப்போல வலது கையில் தாமரை மலருடன் காட்சி தருவது விசேஷம். இவருடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.
இந்த ஊருக்கு பேரெயில் என்ற பெயரும், திருப்பேர் என்ற பெயரும் உள்ளது. இந்த கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூணில் முதலாம் குலோத்துங்கனின் (கி.பி 1109) கல்வெட்டு உள்ளது. இது பெருமாள் கோயிலைச் சார்ந்த கல்வெட்டு. இதில் ராஜராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டுத் திருவழுதி வளநாட்டு தென்திருப்பேர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வீரகேரளவர்மன் கல்வெட்டில் திருவழுதி வளநாட்டு திருப்பேரான சுந்தரபாண்டியச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகைலாசமுடையார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளும் உள்ளன. இவை சிவன் கோயிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஆகும்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை
அருகில் உள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவைகுண்டம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை