கோவில் அமைப்பு : பெருமாள் நின்ற கோலத்தில் அருளுகிறார். விமானம் ஆனந்த விமானம் எனப்படுகிறது. 3 நிலை இராஜகோபுரத்துடன் கூடிய கோவில் பிரகாரத்தில் இராமர், கண்ணன், ஆண்டாள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், இராமானுஜர் சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் சுவாமியை குழந்தைக்கண்ணனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது. மேற்கரம் இரண்டும் சங்கு, சக்கரத்துடன் உள்ளது. கீழ் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடக்கரம் ஆவாஹன ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது.
தாயார் அமிர்தவல்லி தனிச்சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். மேல் கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்கள் தாங்கி, கீழ்க்கரம் இரண்டும் வரத, அபய முத்திரைகளுடன் புன்னகை தவழும் முகத்துடன் தாயார் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமியின் அம்சமான இவள், பாற்டலில் தோன்றியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப் படுகிறாள். தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தைப் போக்க திருமால், மோகினி அவதாரம் எடுத்தார். இதன் அடிப்படையில் பெருமாள் தலங்களில் திருவிழாவின்போது சுவாமி, மோகினி அலங்காரத்தில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் தை மாதத்தில் நடக்கும் உற்சவத்தின் நான்காம் நாளில் தாயாருக்கு மோகினி அலங்காரம் செய்கின்றனர். இவ்விழாவின் போது இவள் கோவில் வளாகத்திலுள்ள நந்தவனத்திற்கு எழுந்தருளும் வைபவமும் நடக்கிறது. முதலாழ்வார்களின் ஜென்ம நட்சத்திர விழா 3 நாட்களும், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், தேசிகர் ஆகியோரின் திருநட்சத்திர விழா 10 நாட்கள் நடப்பது விசேஷம்.
கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என கிருஷ்ணருக்கு 12 திருநாமங்கள் உண்டு. இதில் 12வது திருநாமமான தாமோதரன் எனும் திருநாமத்துடன், சென்னை மாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள வில்லிவாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார் கிருஷ்ணர். தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்று அர்த்தம். 'தாமம்' என்றால் கயிறு; 'உதரம்' என்றால் வயிறு. ஸ்வாமியின் இடுப்பில் தாயார் யசோதை கட்டிய கயிற்றால் ஏற்பட்ட தழும்பை இப்போதும் பார்க்கலாம். ஆம்.. அந்த தாமோதரக் கண்ணன்தான் இங்கு கோயில் கொண்டு, வேண்டும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வதோடு, அந்தக் குழந்தையை தன்னைப்போலவே கூரிய புத்தியுடனும் நற்குணங்களுடனும் திகழ வைக்கிறார். கோயிலுக்கு வந்து, தாமோதர பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டு, சந்நிதிக்கு அருகில் அமர்ந்து, இந்த மந்திரத்தை சனிக்கிழமை தோறும் 108 முறை ஜபித்து வந்தால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் . வாராவாரம் வர இயலாதவர்கள், முதல் வாரம் நேரில் வணங்கி விட்டு, பிறகு வீட்டில் இருந்தபடியே இந்த மந்திரத்தைச் சொல்லி வரலாம்.
ஆண்டு தோறும் தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பெளர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி, திதி ஆகிய நாட்களில் பெருமாளும் தாயாரும் தோட்டத்தில் உலாவந்து, மாலை ஏழு மணிக்கு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், இங்கு அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று. வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அமிர்தவல்லித் தாயார் ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்து தரிசனம் தருகிறார். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி தினங்களில் தாயாரும் பெருமாளும் தோட்டத்தில் உலா வந்து, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.
அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை வழி படுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் குழந்தைகளுக்கு தானம் தருவது சிறப்பு. மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம் இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.