நன்மங்கலம், நீலவண்ண பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது நுங்கம்பாக்கம், அடையார், துரைப்பாக்கம் வழியாக நன்மங்கலத்தை அடையலாம். சேலையூர், தாம்பரம், வண்டலூர் செல்லும் பேருந்துகள் மூலம் இதனை அடையலாம்.
சுவாமி : நீலவண்ணப் பெருமாள்
தாயார் : வேதவல்லி
தலச் சிறப்புகள் : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய அபிமானத் தலமாகவும் இது விளங்குகிறது. காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோயிலுக்கருகில் பச்சைவண்ணர் பவளவண்ணர் திருக்கோயில்கள் அமைந்திருப்பதைப் போல, இங்கும் காமாட்சியம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கருகில் நீலவண்ணப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது சிறப்பாகும்.
கண்ணன் குழலினை நண்ணும் மனமுடையவரான நம்மாழ்வாருக்கு இத்திருக்கோயிலில் மூலவர் மற்றும் அர்ச்சா விக்ரகம் அமைந்துள்ளதும். 108 திவ்ய தேசங்களில் தொண்டைநாட்டுத் தலங்களில் புகழ்பெற்ற திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலின் ஓர் அங்கமாக இத்திருக்கோயில் விளங்குவதும் இத்தலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களாகும்.
தல வரலாறு : இவ்வாலயம் சுமார் 800 வருடங்கள் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. கோயிலின் தளத்தில் மீன் வடிவங்கள் அமைந்துள்ளதிலிருந்து இதை உணரலாம். சில கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. வைணவ சமுதாயத்தின் ஒரு பிரிவினரான அரசானி பாலையைச் சார்ந்த தாத்தாச்சாரியர் பரம்பரையினர் சிலர் இக்கோயிலுக்கருகில் சிறிது காலத்துக்குமுன் வசித்துவந்தார்கள் என்றும், இத்திருக்கோயிலுக்குக் கைங்கர்யம் செய்தார்கள் என்றும் அரசாங்கக் குறிப்பேடுகளில் நன்மங்கலம் நீர்வணப் பெருமாள் என்று இந்தப் பெருமாள் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
கோவில் அமைப்பு : கோயில் பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், சடகோபர், சுதர்சனர் அருள்பாலிக்கிறார்கள். 2010 ல் சத்யநாராயணஸ்வாமி, சக்கரத்தாழ்வார், வேதவல்லித் தாயார் சன்னிதிகள் அமைக்கப்பட்டன. தற்போது 2013 ஜூலை பக்த ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு சம்ப்ரோஷணம் நடந்தேறியது கேட்பாரற்றுக் கிடந்த கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
மிதுன ராசியுடையயோர் சென்று வேண்டிவர தோஷங்களும், எதிரிகளின் பார்வைகளும நீங்கி உடல் ஆரோக்கியம், தொழிலில் முன்னேற்றம் அடையலாம். அதுமட்டுமின்றி குடும்பத்தில் நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் விலகி அனைவரிடத்திலும் சகஜமான வாழ்க்கை உண்டாகும். பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம், வருடத்தின் முக்கிய விஷேசங்கள் நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் மற்றும் துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை