சைதாப்பேட்டை, பிரசன்ன வெங்கடேசர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை சைதாபேட்டையில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. சைதாபேட்டைக்கு சென்னையின் அனைத்து இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன.
சுவாமி : பிரசன்ன வெங்கடேசர்
உற்சவர் : வெங்கடேச நரசிம்மர்
தாயார் : அலர்மேலுமங்கை
தல தீர்த்தம் : ரகு தீர்த்தம்
தலச் சிறப்புகள் : மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர் சிம்ம முகம் இல்லாமல் சுயரூபத்துடன் சாந்தமான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் அழகிய சிங்கர் என்று அழைக்கப்படுகிறார். வெங்கடேசருக்கு பூஜை செய்தபின்பு இவருக்கு பூஜை செய்யப்படுகிறது. இங்குள்ள ராமர் சன்னதியில் ஒரே நேரத்தில் ராமபிரானை திருமண கோலத்திலும் பட்டாபிஷேக கோலத்திலும் தரிசிப்பது சிறப்பாகும்.
கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் ரகுகுல திலகனான ஶ்ரீராமச்சந்திர மூா்த்தி தன் தேவி சீதா மற்றும் இளவல் இலக்ஷ்மணனுடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா். இந்த மூலவா் திருமணக் கோலத்திலும் உற்சவ மூா்த்திகள் பட்டாபிஷேக திருக்கோலத்திலும் திருக்காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். புராதனமான இந்த ரகுகுல திலகனின் சந்நிதி இப்பகுதியில் முதலில் தோன்றியதால் இப்பகுதிக்கு “ரகுநாதபுரம்” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. புனா்பூச நாட்களில் இத்திருக் கோயிலில் ஶ்ரீராமருக்கு சிறப்புத் திருமஞ்சனமும் சுவாமி உள் புறப்பாடும் நடைபெறுகின்றது.
தல வரலாறு : ஒரு காலத்தில் இக்கோயிலில் கோதண்டராமர் சன்னதி மட்டுமே இருந்தது. ஒரு சமயம் ராமரை வழிபட்டு வந்த பக்தர் ஒருவரின் கனவில் பிரசன்னமாகிய வெங்கடேசப் பெருமாள், தனக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்பின், இங்கு வெங்கடேசருக்கு கோயில் எழுப்பப்பட்டது. பக்தரின் மனதில் பிரசன்னமாகி அதனால் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் சுவாமி பிரசன்ன வெங்கடேசர் என்று பெயர் பெற்றார். இங்கு வேங்கடேசரை பிரதிஷ்டை செய்தபோது கூடவே அழகிய சிங்கர் விக்ரகத்தையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். எனவே இக்கோயில் பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சுவாமி, முகத்தில் வடுக்களுடன் காட்சி தருகிறார். இதைப்போலவே இத்தலத்திலுள்ள தாயார் உற்சவரின் முகத்திலும் வடுக்கள் இருக்கிறது. இக்கோயிலில் பிரசன்ன வெங்கடேசருக்கு சன்னதி அமைத்தபோது, தற்போது தாயார் சன்னதி இருக்குமிடத்தில் ஒரு புற்று இருந்தது. அந்த புற்றின் உள்ளே தாயாரின் விக்ரகம் இருந்ததைக் கண்டறிந்த பக்தர்கள், அச்சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்து, சன்னதி எழுப்பி, தாயாருக்கு கல் விக்ரகமும் அமைத்தனர். மண்ணில் இருந்து கிடைக்கப்பெற்ற சிலை என்பதால், இவள் முகத்தில் வடுக்களுடன் காட்சி தருகிறாள். பங்குனி உத்திரத்தன்று, சுவாமி இவளது சன்னதிக்கு எழுந்தருளி திருமணம் செய்து கொள்கிறார்.
கோவில் அமைப்பு : கோயில் முன்மண்டபத்தில், இராமர் சன்னதி தெற்கு நோக்கியிருக்கிறது. மூலவர் இராமர் வலப்புறம் சீதை, இடப்புறத்தில் இலட்சுமணருடன் திருமணக்கோலத்திலும், உற்சவர் வலப்புறம் இலட்சுமணர், இடப்புறத்தில் சீதையுடன் பட்டாபிஷேக கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு ஒரே நேரத்தில் இங்கு இராமபிரானின் இரண்டு கோலங்களைத் தரிசிக்கலாம். புனர்பூச நட்சத்திர நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, உள் பிரகாரத்தில் புறப்பாடாகிறார். இராமநவமி விழா இவருக்கு 10 நாட்கள் எடுக்கப்படுகிறது. நவமியன்று சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கும். இவரது சன்னதி எதிரில், ஆஞ்சநேயர் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார். முன்பு இங்கு இராமர் மட்டும் இருந்ததால் தலம், “ரகுநாதபுரம்” என்று அழைக்கப்பெற்றது. தை மாதத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியும், ஆனி மாதத்தில் ஒருநாள் மயிலாப்பூர் ஆதிகேசவரும் இக்கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். சேனைமுதலியார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் முன்மண்டபத்தில் உள்ளனர். பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது.
இங்குள்ள விமானம் ஆனந்த விமானம். கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர், சிம்ம முகம் இல்லாமல், சுயரூபத்துடன் சாந்தமான முகத்துடன் இருக்கிறார். எனவே இவர், “அழகிய சிங்கர்” என்றழைக்கப்படுகிறார். வெங்கடேசருக்கு பூஜை செய்தபின்பு, இவருக்கு பூஜை நடக்கிறது. ஆவணி மாத திருவோணத்தன்று இங்கு, “அன்னகோடி” உற்சவம் நடக்கிறது. அன்று சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உற்சவரை எழுந்தருளச்செய்து, அவர் முன்பு அன்னத்தை மலைபோல குவித்து வைத்து படைக்கிறார்கள். பின்பு அதையே பிரசாதமாகத் தருகின்றனர். இந்த விழாவின்போது சுவாமிக்கு, கோவர்த்தனகிரியை கையில் பிடித்தபடி, கோவர்த்தனன் அலங்காரம் செய்யப்படும். கோயில்களில் பிரார்த்தனை செய்பவர்கள், சன்னதி முன்பாக தரையிலோ அல்லது அங்குள்ள பலகையிலோ நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் ஜாதகத்தில் கிரக தோஷம் உள்ளவர்கள், அலர்மேல்மங்கை தாயார் சன்னதி முன்பு நெல் பரப்பி அதில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இத்தலத்தில் தாயார் அலர்மேலுமங்கை வரப்பிரசாதியாக அருளுகிறார். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கின்றனர். தாயாரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் திருமஞ்சனம் செய்துவைத்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் “அன்னக்கோடி” உற்சவம் நடைபெறுகின்றது. அன்றைய நாளில் உற்சவ மூா்த்தங்களை திருக்கோயில் முன்மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சுவாமியின் திருமுன்பு அன்னத்தை மலைபோல் குவித்து நிவேதனம் செய்யப்படுகின்றது. பின்னா் எம்பெருமானுக்குப் படைத்த அன்னத்தையே பிரசாதமாக பக்தா்களுக்கு விநியோகம் செய்கின்றனா். இந் நன்னாளில் எம்பெருமானுக்கு குன்றமேந்திக் குளிா்மழையிலிருந்து ஆயா்பாடி மக்களைக் காத்தருளிய “கோவா்த்தனகிாிதாாி” அலங்காரம் செய்யப்படுகின்றது. அண்டா்கோன் அணியரங்கன் அமுதன் ஶ்ரீவேங்கடவனை பக்தா்கள் இந்த அலங்காரத்தில் கண்டு தாிசிக்க அவா்களது பிறவி வினைகள் நீங்கப்பெறும்.
மாதங்களில் நான் மாா்கழியாக இருக்கிறேன் என்று பகவானே போற்றிய மாா்கழி மாதத்தில் திருப்பாவை உபன்யாசமும் பகல்பத்து, இராப்பத்து உற்சவமும் மிக சிறப்பாக நடைபெறுகின்றது இத்தலத்தில். இந்த உற்சவங்களின் போது “கடல் நிறக் காந்தன்” ஒவ்வொரு நாளும் ஒரு திருக்கோலத்தில் பக்தா்களுக்குத் திருக்காட்சி தருவது கண் கொள்ளாக் காட்சியாகும். வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஶ்ரீவெங்கடேசப் பெருமான் பரமபத வாசலில் எழுந்தருளி பக்தா்களுக்குத் திருவருள் புாிவாா். அன்று மாலை “பரமபத நாதன்” தன் பக்தா்களின் இல்லம் தேடி திருவீதி உலா வருவதும் நடைபெறுகின்றது.சித்திரை மாதத்தில் 10 நாட்கள் “பிரம்மோற்சவம்” வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : எழும்பூர், சைதாபேட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு