சதுரங்க பட்டினம், மலை மண்டல பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாமல்லபுரம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் உள்ளது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில், கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் அமைந்துள்ளது. மாமல்லபுரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
உள்ள சதுரங்கப்பட்டினம் பகுதியில்அமைந்துள்ளது.
சுவாமி : மலை மண்டல பெருமாள், கிரி வரதராஜபெருமாள்
தாயார் : பெருந்தேவி
தலச் சிறப்புகள் : இது பதினெட்டு சித்தர்கள் வழிபட்ட தலமாகும். மாமல்லபுரம் பூதத்தாழ்வார் மற்றும் மகான் ராகவேந்திரர் வழிபட்ட ஸ்தலமாகவும் போக சித்தருக்கு பறக்கும் ரகசியத்தை கற்றுக் கொடுத்த கருட தலமாக விளங்கி வருகிறது. மற்ற கோயில்களில் ஸ்ரீதேவிதான் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஆனால், இங்கு பூதேவிதான் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.
தல வரலாறு : சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள் கோயில் தென் பத்ரி என்று அழைக்கப்படுகிறது. பத்ரி நாராயண பெருமாள், விஷ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோர் பூமிக்கடியில் புதைந்து உள்ளனர். பெருமாளின் பாதமும் கருடனின் தலையும் ஒரே அளவு உள்ளது. தலையில் ஒரு பாம்பு, காதில் இரண்டு பாம்பு, தோளில் இரண்டு பாம்பு, மார்பில் இரண்டு பாம்பு, இடுப்பில் ஒரு பாம்பு என அஷ்ட நாக கருடனாக காட்சி அளிக்கிறார். ஆகவே நாகதோஷம் உள்ள பக்தர்கள் இவரை தரிசித்தால் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாது பெருமாளின் சக்கரம் கீழாகவும், சங்கு மேல் பகுதியிலும் உள்ளது.
சர்ப்பதோஷ நிவர்த்தி தலமான சதுரங்கப்பட்டினம் டச்சுக்காரர்களின் துறைமுகப் பட்டினமாக அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாகும். ராமேஸ்வரம் கடலில் குளித்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் அர்த்த சேது என்னும் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் குளித்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம். மலை மண்டல பெருமாள் சமுத்திர ராஜனின் மகளை திருமணம் செய்ததால் இங்கே சதுரங்கப்பட்டினம் மீனவ மக்கள் இந்த மாசி மக பெருவிழாவை விமரிசையாக நடத்துகின்றனர். பெருமாள் மாமனார் வீட்டுக்குச் செல்லும் வைபவம் ஆகவும், அப்போது வரும் வழியில் மீனவ மக்களுக்கு காட்சி தரும் வைபவம் ஆகவும், அதேபோல் கடலில் உள்ள ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுப்பது மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களுக்கும் நேரில் வந்து காட்சி கொடுத்து அருள்பாலிப்பார். அம்பாளின் அண்ணனாகிய பெருமாள் கடலில் குளிக்க வரும் போது அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் அருள்மிகு ஸ்ரீ சியாமளா தேவி, ஊத்துக்காடு அம்மன், ஸ்ரீ செல்லி அம்மன் ஆகிய அம்மன்கள் பெருமாளுக்கு சீர்வரிசை வைத்து மலை மண்டல பெருமாளை கடற்கரைக்கு அழைத்து வந்து கடலில் புனித நீராடுதல் நிகழ்ச்சி கடந்த 22 ஆண்டுகளாக சிறப்பாக நடந்து வருகிறது. இதேபோல இதைச் சுற்றியுள்ள கல்பாக்கம் உட்பட பல்வேறு கிராமத்திலுள்ள கோயில்களின் அனைத்து மூர்த்தங்களும் இங்குள்ள கடற்கரைக்கு வந்து தீர்த்தவாரி எடுத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டுச் செல்வர்.
அப்போதைய சதுரங்கப்பட்டினம் பகுதி கடற்கரை பகுதியாக இருந்ததால் துறைமுகப் பட்டினமாக இயங்கி வந்தது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகராக இயங்கியது. அப்போது சீனப் பயணி யுவான் சுவாங் இந்தத் துறைமுகம் வழியாக வந்து இறங்கி காஞ்சிபுரம் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைப் பட்டினம் முதல் சதுரங்கப்பட்டினம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் மிக முக்கியமானது திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள். கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவில் அதன் அருகிலுள்ள சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள் ஆகிய பெருமாள் கோவில் குளம் விஜயநகரப் பேரரசின் கீழ் ஒரு குடையின்கீழ் இருந்த நகரங்களாகும். இந்த மூன்று பகுதிகளுக்கும் முன் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் அவதரித்து திருவிடந்தையில் பாடல் பாடியுள்ளார்.
கோவில் அமைப்பு : இக்கோயிலிலுள்ள கருடன் திருவுருவம், எட்டு நாகங்களைக் கொண்டுள்ளதால் அஷ்டநாக கருடன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் முற்கால கல்வெட்டு உள்ளது. இத்தலம் சற்று மேடானப் பகுதியில் அமைந்துள்ளதால் இத்தலத்து பெருமாள் மலைமண்டலப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கருட பகவான் மிகவும் விசேஷமானவர். இந்த கருடன் தலையில் ஒன்று, இரு காதுகளில் ஒவ்வொன்று, மார்பினில் மாலையாக இரண்டு, இரு தோள்களிலும் ஒவ்வொன்று, இடுப்பில் அரைஞாண் கயிறாக ஒன்று என எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சி தருவதால் இவர் அஷ்டநாக கருடன் என்றழைக்கப்படுகிறார். இவரைத் தரிசிப்பவர்களுக்கு சகலவித சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலில் அமைந்துள்ள ஒரு விளக்கு மிகவும் மகிமை வாய்ந்ததாகவும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. விளக்கின் மேற்பாகத்தில் கருடன்களும் நாகங்களும் தாங்குமாறு ஓர் அமைப்பு உள்ளது. கீழ் பாகத்திலோ கிளிகள் தாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. இவ்விளக்கில் நெய் ஊற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டால் நம் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது ஐதீகம்.
நித்திய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் தலசயன பெருமாள், சதுரங்க பட்டினம் மலைமண்டல பெருமாள் ஆகிய மூன்றிலும் உள்ள தாயார்களை வழிபட்டால் சகல பிரச்னைகளும் தீரும். திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், பல காரணங்களால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் இங்குள்ள கருடனை வழிபட்டு பலனடையலாம்.
காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு