தண்டையார்பேட்டை, வரதராஜ பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை தண்டையார்பேட்டையில் உள்ளது.
சுவாமி :வரதராஜ பெருமாள்
தலச் சிறப்புகள் : இக்கோவிலில், பெருமாள் சிலை வடக்கு நோக்கி இருப்பது சிறப்பம்சம் என்கின்றனர்.300 ஆண்டுகள் பழமையான கோவிலில் வீற்றிருக்கும் இந்த பெருமாள் இப்பகுதியிலுள்ள பல ஆயிரம் மீனவ மக்களின் குல தெய்வம்.
தல வரலாறு : அரசர்கள் காலத்தில், செல்வந்தர் ஒருவர், தான் கொடுத்த கடனுக்கு ஈடாக, அவர் வீட்டில் இருந்த பெருமாள் சிலையை, கட்டை வண்டியில் எடுத்து வந்து, தண்டையார்பேட்டை காட்டில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், மக்களால் கண்டெடுக்கப்பட்டு, அதே இடத்தில் சிறிய அளவிலான கோவிலை மக்கள் எழுப்பியதாக செவிவழி வரலாறு கூறுகிறது. பெருமாளை குல தெய்வமாக வழிபடும் மீனவ மக்கள், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், விரதம் இருந்து, தங்கள் வேண்டுதல்களை அவரது பாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். இவ்வழக்கம். பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. தங்கள் வாழ்வின் மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு வரதராஜ பெருமாள் தரும் வரமே காரணமென்பது, இம்மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.கொடுத்து... வாங்குவது!இக்கோவிலின் முக்கிய சிறப்பு, பெருமாளுக்கு குழந்தையை தத்து கொடுப்பது. இதை ஒரு பரிகார நிகழ்ச்சியாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர். ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், தம் குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுப்பர்; பின் பெருமாளிடம் இருந்து தத்தெடுக்கின்றனர்.
இதுவரை, 5,000க்கும் மேற்பட்டோர், குழந்தைகளை பெருமாளிடம் இருந்து தத்தெடுத்துள்ளனர். மலேஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்களும், குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுக்கின்றனர். பெருமாளுக்கு குழந்தைகளை தத்து கொடுத்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து, எல்லா வித சொத்துக்களும் சேரும் ஐதீகமாக இருக்கிறது. ஆண்டாள், காயத்ரி, ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் உள்ளிட்ட சன்னிதிகளும் இக்கோவிலில் உள்ளன. ஒவ்வொரு வைகாசியிலும் இங்கு பிரம்மோற்சவம் நடக்கும். புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு வாரமும், புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு என, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் நடக்கும்.
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, விசேஷ நாட்களில்மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு