காரமடை, அரங்கநாதசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ., தொலைவில் உள்ளது.
சுவாமி : அரங்கநாதர்
உற்சவர் : வெங்கடேசப்பெருமாள்
தாயார் : ரங்கநாயகி
தல விருட்சம் : காரைமரம்
தல தீர்த்தம் : பிரம்ம, கருட மற்றும் அஷ்டதீர்த்தம்
தலச் சிறப்புகள் : மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது, பெருமாள் கோயில்களில் பிரதானமாக கருதப்படுவது சடாரி சேவை. ஆனால், இங்குள்ள மூலவர் சன்னதியில் சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக, ராமபாணத்தால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. இந்த ராமபாணத்திற்குள் திருமாலின் பிரதான ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவம் இருப்பதாக கூறப்படுகிறது.
தல வரலாறு : ஒருசமயம் கருடாழ்வாருக்கு திருமால், மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண வேண்டுமென ஆசை எழுந்தது. அதனை சுவாமியிடம் தெரிவித்தார்.அவர் விருப்பத் திற்காக சுவாமி, பூலோகத்தில் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டியருளினார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.பிற்காலத்தில் இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். அதில் ஒரு பசு மட்டும் தொடர்ந்து பால் சுரக்காமல் இருக்கவே, அதனை கண்காணித்தான். ஓரிடத்தில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரிந்ததைக் கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்தபோது அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியது. அதன்பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். அதில் ஒரு பசுவுக்கு மட்டும் தொடர்ந்து பால் சுரக்காமல் இருக்கவே, அதை கண்காணித்தான். காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பசு பால் சொரிந்ததை கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்த போது சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருந்ததை பார்த்தனர். அதன் பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமானுஜர், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்ற போது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். திருப்பதியில் மலையப்பசுவாமி (வெங்கடாஜலபதி) மலையிலும், அலமேலுமங்கைத்தாயார் அடிவாரத்திலும் காட்சி தருகின்றனர். ஆனால் இத்தலத்தில் சுவாமி கீழேயும், அருகிலுள்ள மலையில் ரங்கநாயகித் தாயாரும் காட்சி தருகின்றனர். இவளை, ‘பெட்டத்தம்மன்’ என்று அழைக்கிறார்கள்.
கோவில் அமைப்பு : சுவாமி சன்னதி இடப்புறம் உள்ள ஆஞ்சநேயர், சுவாமியை பார்த்து காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயர் சிலை, பெரிய சதுரக்கல்லில் வித்தியாசமாக வடிக்கப்பட்டிருக்கிறது. கோயில் முன் மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலர் காட்சி தருகிறார். இவருடன் நம்மாழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோரும் உள்ளனர். பிரகாரத்தில் சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளது. சுவாமி கோஷ்டத்தில் உள்ள வேணுகோபால், ராமர் மற்றும் கோபிகை பெண் சிலைகள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். கோயில் வளாகத்திற்கு வெளியே கொடிமரம் உள்ளது. மூலவரின் விமானம் ஏகதளம் எனப்படுகிறது.
கோயில்களில் பெரும்பாலும் உற்சவமூர்த்தி, மூலவருக்கு அருகில்தான் காட்சி தருவார். விழாக்காலங்களில் மட்டும் இவர் வெளியில் சென்று புறப்பாடாகி மீண்டும் சன்னதிக்கு திரும்புவார். ஆனால், இக்கோயிலில் உற்சவர் மூலஸ்தானத்திற்கு செல்வது கிடையாது. இவர் எப்போதும் சன்னதி முன்மண்டபத்தில்தான் காட்சி தருகிறார். இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய ரங்கநாதர், சிறிய மூர்த்தியாக இருக்கிறார். இவருக்கான உற்சவர், பெரிய சிலை வடிவில் இருக்கிறார். எனவே இவரை மூலஸ்தானத்தில் வைத்தால், மூலவரை தரிசிக்க முடியாது என்பதன் அடிப்படையில் முன்மண்டபத்திலேயே வைத்திருக்கின்றனர்.இங்கு மூலவர் சன்னதியில், சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக, ராமபாணத்தால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. இந்த ராம பாணத்திற்குள் திருமாலின் பிரதான ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவம் இருப்பதாக சொல்கிறார்கள். உற்சவரிடம் மட்டுமே சடாரி ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. ஆயுதபூஜையன்று ஒருநாள் மட்டும் இந்த ராமபாணத்திற்கு பூஜை செய்யப்படுவது மற்றொரு விசேஷம்.
சுவாமி, இந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம். மாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில், இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக் கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து கோயிலுக்கு கொண்டுவருகிறார். அப்போது பெருமாள் சன்னதியில் இருந்து ராம பாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கும். அதன் பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜை செய்வார்கள். மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கும். ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனிச்சன்னதி கட்டப்பட்டது.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். கோயிலுக்கு பசு காணிக்கையாக செலுத்தும் வழக்கம் உள்ளது. வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி ஐந்து சனிக்கிழமை, நவராத்திரி உற்சவம், தேர்த்திருவிழா முக்கியமான திருவிழா நாட்கள். தற்போது புரட்டாசி சனிக்கிழமைகளை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. மாசி பிரம்மோற்சவத்தின் போது மக நட்சத்திரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். தேர்நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகிய பொருட்கள் கலந்த பிரசாதத்தை வைத்துக் கொண்டு, “ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,’ எனச்சொல்லி ஒருவருக்கொருவர் கொடுக்கிறார்கள். இதனை, ‘கவாளசேவை’ என்கிறார்கள். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர்விடும் ‘தண்ணீர்சேவை’, கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்குதல் போன்றவை நடைபெறுகிறது.
காலை 5.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரமடை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை