சிங்காநல்லூர், உலகளந்தப்பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் உள்ளது.
சுவாமி : உலகளந்தப்பெருமாள்
உற்சவர் : உலகளந்தப்பெருமாள்
தாயார் : ஸ்ரீதேவி பூதேவி
தல விருட்சம் : வன்னி மரம்
தலச் சிறப்புகள் : உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி, இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கு மிக சிறப்பாக உள்ளது. மேலும், தனது எட்டு கைகளில் சங்கு, சக்கரம், கதை, வில், அம்பு, கத்தி, கேடயம் போன்ற எட்டு ஆயுதங்களை ஏந்திய நிலையில் உள்ளார். இது வாமனன் அவதாரத்தின் போது மகாபலி சக்ரவர்த்திக்கு அளிக்கப்பட்ட விஸ்வரூப காட்சியாகும்.
தல வரலாறு : 900 ஆண்டு பழமை வாய்ந்த உலகளந்த பெருமாள் கோயில் ஒரு காலத்தில் கரூர் பகுதியில் இருந்து கரிகால் சோழன் போரின் போது இப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வெள்ளலூர் பகுதியில் பிராமணர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். அப்பகுதியில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அவர்கள் சிங்காநல்லூர் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த கரிகால் சோழன் பிராமணர்களுக்கு அப்பகுதியை மானியமாக வழங்கி, ஒரு கோயிலையும் கட்டிக்கொடுத்தார். அப்படி கட்டப்பட்ட கோயில் தான் உலகளந்த பெருமாள் கோயில். இக்கோயிலில் உள்ள மூலவர் விக்கிரகத்தை பல்லவர்கள் வைத்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் அந்த விக்கிரகத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாம். இந்த விக்கிரகம் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. மூலவர் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கோவில் வடக்கு திசை நோக்கி உள்ளது. பிரசன்ன விநாயகர் கிழக்கு நோக்கி உள்ளார்.
ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும் இக்கோயிலில் உற்சவம் நடைபெறும். அந்த பத்து நாட்களிலும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவதுடன் சந்திர பிரபை, சூரிய பிரபை, அம்சவாகனம், சேஷ வாகனம், யாழ் வாகனம், யானை மற்றும் குதிரை வாகனம் என பத்து நாட்களும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா நடத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அன்று ரா பத்து, பகல் பத்து பூஜைகள் நடக்கும். நவராத்திரியின் போது ஒன்பது நாள் உற்சவம் நடத்தப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையிலும் சிறப்புவழிபாடு நடக்கிறது. பங்குனி உத்திரத்தின் போது தாயார் கல்யாண உற்சவம் நடக்கிறது. இதில், கலந்துகொள்வதால் திருமணமாகாத பெண்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது ஐதிகம். பெரும்பாலான கோயில்களில் கிழக்கு பார்த்தபடியாக பெருமாள் அமர்ந்திருப்பார். ஆனால், இக்கோயிலில் வடக்கு பார்த்து அமர்ந்துள்ளதால் பக்தர்கள் வேண்டிய காரியங்கள் நடக்கிறது. இக்கோயிலின் வெளியில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் விநாயகர், தாயார் சன்னதிகள் உள்ளது.
காலை 5.30 மணி முதல் 10.00 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : இருகூர், பீளமேடு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை