பாலமலை, அரங்கநாதர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய நாயக்கன்பாளையம் இருந்து மேற்கே 11 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
சுவாமி : அரங்கநாதர்
உற்சவர் : அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி
தாயார் : பூங்கோதை, செங்கோதை
தல தீர்த்தம் : பால் சுனை, பத்ம தீர்த்தம்
தல விருட்சம் : காரை மரம்
தலச் சிறப்புகள் : சுமார் 4½ அடி உயரம் கொண்ட திருவுருவம், அலங்கார பிரியர் என்பதால் மலர் மாலைகள் சூழ காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்களுடன், நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு மூர்த்தியாய் வெளிப்பட்ட அரங்கநாதருக்கு முதலில் பூஜை நடைபெற்ற பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது. மூலவருக்கு வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தென் பகுதியில் செங்கோதையம்மன் தாயாரும் தனித்தனி சன்னிதியில் நின்றபடி அருள்புரிகின்றனர். கோவிலின் தென்புறத்தில் தேவியரோடு பரமவாசுதேவன் தனி சன்னிதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.
கோவில் அமைப்பு : மலைமேல் ஒரு பெரிய சமதளப்பகுதியில், நான்கு புறமும் மதில் சூழ்ந்து, மூன்று நிலை கொண்ட கோபுரத்துடன் கோயில் உள்ளது. கோயிலின் முன்புறம் கொங்குப்பகுதிக்கே உரிய கருட கம்பம் என்னும் விளக்குத்தூணுடன் விளங்கும் சிறு மண்டபம். கோயில் மிகப் பழமையானதாகக் கருதப்பட்டாலும், கோயில் கட்டுமானம் அதன் பழமையை ஒரு முந்நூறு ஆண்டுகள் பின்னோக்கிக் காட்டுகிறது எனலாம். கோயிலினுள் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளில் கல்வெட்டுகள் எவையும் இல்லை. கருடகம்பம் கலகட்டுமானம் கொண்டது. சிறிய மேடை மண்டபத்தின் நடுவில் கல்லாலான விளக்குத்தூண். நான்கு மண்டபத் தூண்கள். அவற்றில் இரு தூண்களில் ஆண் சிற்பம் ஒன்றும், பெண் சிற்பம் ஒன்றும் காணப்பட்டன. அவை, இந்த கருடகம்ப மண்டபத்தை நிறுவியவர்களாக இருக்கவேண்டும். கருட கம்பக் கட்டுமானத்தில் இவ்வாறு சிற்பங்களை வடிப்பது பெரும்பாலான வழக்கம். இந்தப் புடைப்புச் சிற்பங்களின் வடிவமைப்பு, இந்தக் கட்டுமானம் நாயக்கர் காலத்துக்கும் சற்றே பிற்பட்டது என்பதைக் காட்டியது. விளக்குத் தூணின் அடிப்பகுதிச் சதுரங்களில் சங்கு, சக்கரம் ஆகியன புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. சங்குருவம் செதுக்கப்பட்ட சதுரப்பகுதியில் இரண்டு வரிகளில் எழுத்துகள் காணப்பட்டன.
கோயில் அமைந்துள்ள சமதளத்தை அடுத்து, பள்ளமான ஒரு பாதை கீழிறங்கிச் செல்கிறது. அவ்வழியே இருபது நிமிடப்பயணமாக இறங்கிச் சென்றால் ஓர் அழகான தெப்பக்குளம் உள்ளது. வழியில் பாதையெங்கும் துண்டுக் கற்களைப் பாவியுள்ளனர். கற்கள் பாவப்பட்ட பாதையும், அதன் இருமருங்கிலும் இருக்கும் காட்டுச் செடிகளும் காண அழகானவை. தெப்பக்குளம் பழங்காலக் கட்டுமானத்துடன் தோற்றமளிக்கிறது. குளத்தின் நீர் தேக்கப்படுகின்ற அடிப்பகுதி ஒரு நீண்ட சதுர வடிவில் அமைக்கப்பட்டு அதன் தென்பகுதி மட்டும் வட்டத்தின் வில் வடிவத்தில் வளைவாகக் கட்டப்பட்டு அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளது. வடபகுதிக்கு மிக அருகில் நீராழி மண்டபம் உள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து கிளம்பி நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டு மேலே நிலப்பரப்பில் சுற்றுச் சுவர்களுடன் குளத்தின் கட்டுமானம் நேர்த்தியாக உள்ளது. சுற்றுச் சுவர்களின் மூன்று பக்கங்களில் மூன்று திறப்புகள், கீழே இறங்குவதற்காக. குளத்தின் உட்பகுதியில் வடமேற்கு மூலையில் ஆறு தூண்களோடு ஒரு மண்டபம். அதில் ஏழு கன்னிகளின் சிலைத்தொகுப்பு ஒன்று காணப்படுகின்றது. குளத்துக்கு வெளியே வட கரையில், பன்னிரண்டு தூண்களுடன் சற்றுப் பெரிதாக ஒரு மண்டபம் உள்ளது. மண்டபங்கள் இரண்டும் மக்கள் புழக்கமின்றிப் பாழடைந்துள்ளன. மொத்தத்தில், தெப்பக்குளம் அதன் பழந்தோற்றத்துடன், நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுப்பழமையை நினைவூட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில், குளத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்திருக்கும்.
கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள மேல்முடியைப் பாலமலை அடிவாரத்திலிருந்து நான்கு மணி நேர நடைப்பயணம் மூலம் அடையலாம். கோயிலுக்கருகே உள்ள "மல்லாண்டைப் பாறை"யினைப் பழங்குடிகளும் மற்றவரும் வணங்குகின்றனர். வேளாண்மைப் பணி தொடங்கும் முன் இந்த "மல்லாண்டைப்பாறை"யை வழிபடுவது மரபு.
அர்த்தமண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் ஒரே சன்னிதியில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், அதே பீடத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் ஊஞ்சலில் பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாதர் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கிறார். அவருடன் செங்கோதை, பூங்கோதை தாயார் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் நின்று கருவறையில் எழுந்தருளிய அரங்கநாதரை வழிபடலாம்.
கோவிலின் பின்புறம் தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளிஅண்ணன் சுவாமி ஆகியோர் தனிசன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். மகா மண்டபத்தை ஒட்டி ராமதூதனான ஆஞ்சநேயர், கோரிக்கை மாலைகளை சுமந்து வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கோவிலின் பின்புறத்தில் தல விருட்சமாக காரை மரம் விளங்குகிறது. தும்பிக்கை ஆழ்வார் சன்னிதிக்கு பின்புறம் உள்ள பூவரச மரத்தில், பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
தல வரலாறு : கொங்குப்பகுதியில், பல இடங்களில், கால்நடை மேய்ப்பின் பின்னணியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆநிரைகள் எங்கோ ஓரிடத்தில் தாமாகவே பாலைச் சுரந்து திரும்பியபின் பட்டியில் பால் கறக்க இயலாத நிலையைக் கண்ணுறுவதும், பின்னர், காரணத்தை ஆய்கையில் அந்த ஆநிரைகள் தான்தோன்றி இறையுருவங்களுக்குப் பாலைச் சொரிவதை அறிந்து அவ்விடங்களில் இறைவழிபாடு தொடங்குவதும் ஆன செவிவழிக் கதைகள் நிறைய வழங்குகின்றன. ஒன்றுபோல, எல்லாக்கோயில்களுக்கும் இவ்வகைப் புனைவுப் பழங்கதைகள் வழக்கில் இருப்பது எண்ணத்தக்கது. இதன் பின்னணியில், கால்நடை வளர்ப்பும், பழங்குடிகளும் இருப்பது, பழங்குடிகளின் இறைவழிபாட்டுத் தலங்களின் தொன்மையை எடுத்துக்காட்டும்.
முன் காலத்தில் காரை வனமாக இருந்த இப்பகுதியில் வசித்த மக்கள், பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு பசு தினமும் காரை வனத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு காரை மரத்துக்கு அடியில் பாலை சுரந்து வந்தது. இதனைப் பார்த்த பசுவின் உரிமையாளர் இதுபற்றி ஊர் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒலித்த அசரீரி, ‘நான் இங்கு அரங்கனாக எழுந்தருளி உள்ளேன்’ என்றது.
இதைத் தொடர்ந்து அங்கு சுயம்புவாக இருந்த பெருமாளை, சிறிய குடில் அமைத்து வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரங்கநாதருக்கு சிறிய கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று விரும்பினர். இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் வந்த இடத்திற்கு சென்று மக்கள் பார்த்தனர். அப்போது ஒலித்த அசரீரி, ‘வெடி சத்தம் கேட்ட ஈசானிய மூலையில் பாறைகளும், வாயு மூலையில் மண்ணும் கிடைக்கும். அதை கொண்டு கோவில் கட்டுங்கள்’ என்றது. அசரீரியின் வாக்குப்படியே அந்தப்பகுதியில் இருந்து கிடைத்த பாறாங்கற்களையும், மணலையும் கொண்டு கோவில் கட்டி எழுப்பப்பட்டது.
சோம வம்சத்தை சேர்ந்த நந்தபூபாலர் தர்மநெறியுடன் இந்த பூமியை ஆட்சி செய்து வந்தார். பின்னர் அவர் ஆட்சி பொறுப்பை தனது புத்திரன் தர்மகுப்தரிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தந்தையை போல் தனயனும் சிறப்பாக தர்மநெறியுடன் ஆட்சி செய்தார்.ஒரு முறை அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் போயிற்று. இதையடுத்து தர்மகுப்தரை, அவரது மந்திரிகள், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நந்தபூபாலரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் மகனை அழைத்து கொண்டு ஜைமினி மகரிஷியை சந்தித்து, தனது மகன் சாபவிமோசனம் பெற வழிகூறுமாறு வேண்டினார்.
அதை கேட்ட மகரிஷி, ‘தென்சமுத்திர கரையோரம் பாலமலை இருக்கிறது. அங்குள்ள பத்மதீர்த்தத்தில் புனித நீராடி நாராயணனை பிரார்த்தனை செய்து வந்தால் பலன் கிடைக்கும்’ என்றார். அதன்படி பாலமலை வந்த தர்மகுப்தன் தினமும் பத்மதீர்த்தத்தில் நீராடி அரங்கனை ஒரு ஆண்டு காலம் வழிபட்டு வந்தார். தர்மகுப்தனின் பக்தியில் மனம் இரங்கிய அரங்கன், புத்தி சுவாதீனம் தெளிந்து நீங்கி மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வரம் வழங்கினார்.
முன்னொரு காலத்தில் விஸ்வாமித்திரர் பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தார். அதைக் கண்டு பயந்த தேவர்கள், அவரது தவத்தைக் கலைக்க ரம்பையை அனுப்பினர். ரம்பை பூலோகம் வந்து விஸ்வாமித்திரரின் முன்பு நின்று தவத்தைக் கலைக்க முயன்றாள். இதனால் கோபமடைந்த விசுவாமித்திரர், ‘நீ கல்லாகப் போவாய்’ என்று சபித்தார். அதன்படி ரம்பை கல்லாக மாறி அவரது ஆசிரமத்தின் முன்பு பல ஆண்டுகளாக கிடந்தாள்.
இந்த நிலையில் முனிவர் ஒருவரான சபிக்கப்பட்ட கிருதாசீ என்ற தேவ கன்னிகை, ராட்சத உருவம் கொண்டாள். அவள் ஒரு முறை விசுவாமித்திரர் ஆசிரமம் வந்து அவரை தொந்தரவு செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், கல்லாக கிடந்த ரம்பையை எடுத்து ராட்சசியின் மீது வீசினார். இருவரும் அருகில் இருந்த பத்ம தீர்த்தத்தில் விழுந்தனர். அந்தத் தீர்த்தம் பெருமாளால் உருவாக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் தங்கள் சுயஉருவை அடைந்தனர். பின் இத்தல இறைவனை வழிபட்டு தேவலோகம் சென்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன்ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, பொங்கல் திருநாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது.
தனியார் ஜீப்புகள் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால மலைக்கு செல்லலாம். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. தனியே நடந்து செல்வதோ, மோட்டார் சைக்கிளில் செல்வதோ சவுகரியம் அல்ல.
காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரமடை, பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை