அப்பாலரங்கம் - அப்பால ரங்கநாதர் கோவில், திருப்பேர்நகர் (கோவிலடி)
திருக்கோயில் இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.
சுவாமி : அப்பால ரெங்கநாதர் (அப்பக் குடத்தான்)
தாயார் : இந்திராதேவி எனும் ஸ்ரீகமல வல்லி
தல தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி
தல விருட்சம் : புரஷ மரம்
மங்களாசாசனம் : நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்
பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவு அல்லது நதித்திட்டு ஆகும்.
சிறப்புகள் : 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்றும் போற்றப்படுகிறது, திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரங்கநாதர் கோவில். இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.
உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.
தல வரலாறு : ஒரு காலத்தில் இந்த ஊர் பலாச மரங்கள் நிறைந்த புரசமரக் காடாக இருந்தது. இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்டு வந்த உபரி சர்வசு என்ற மன்னன், வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது யானை ஒன்றை அம்பு கொண்டு தாக்கினான். அந்த யானையோ பயத்தில் வேதம் ஓதும் அந்தணர் ஒருவரை மிதித்துக் கொன்றுவிட்டது. அதனால் மன்னனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்திக்காக பெற துர்வாச முனிவரிடம் சென்று வேண்டினான்.
அவரோ, ‘பலாச வனத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று ‘ஓம் பத்மநாபாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து அன்னதானம் செய்தால் தோஷ நிவர்த்தியாகும்’ என்று அருளாசி கூறினார். அதன்படியே மன்னன் இந்த ஊரில் அரண்மனைக் கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான். அப்போது பெருமாள் அசரீரியாக, ‘மன்னா நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்’ என்றார். உபரிசர்வசுவும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தான். அப்போது பெருமாள், வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவுக்கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் மன்னன். உடனடியாக உணவு தயார் செய்து தருவதாக கூறினான். ஆனால் அந்தணர் உருவில் இருந்த பெருமாளோ, ‘சமையல் செய்ய அதிக நேரம் ஆகும். எனக்கு பசி அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு’ என்றார்.
மன்னன் பக்தி சிரத்தையுடன் நெய்யினால் வெந்ததும், வெல்லம் கலந்ததும், அதிக ருசியுடன் தயாரித்த அப்பங்களை ஓர் குடம் நிறைய நிரப்பிக் கொண்டு அந்தணரிடம் கொடுத்தான். பேரானந்தம் அடைந்த பெருமாள், அப்பக் குடத்தில் வலது கரம் வைத்து ஆசி கூறிவிட்டு, மன்னனுக்கு திவ்ய தரிசனம் கொடுத்தார். இதையடுத்து மன்னனின் சாபமும் நீங்கியது. இந்த நிகழ்வின் காரணமாகவே இத்தல பெருமாளுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்ற சிறப்பு பெயரும் வந்தது. இத்தல இறைவனுக்கு அப்பமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
இத்தலத்திற்கு பெருமாள் எழுந்தருளுவதற்கு முன்பே திருமகள் எழுந்தருளினார். வைகுண்டத்தில் ஒருநாள் காரசாரமான பட்டிமன்றம் நடந்தது. விவாதத்தின் தலைப்பு "இரு தாயார்களில் பெருமை மிக்கவர் யார்? ஸ்ரீதேவியா? பூமி தேவியா?" என்பதே! அதன் முடிவு பூமி தேவிக்கு சாதகமாக அமைய, ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு திருப்பேர் நகர் என்னும் கோயிலடிக்கு வந்து தவம் மேற்கொண்டார். அதனால் இவ்வூருக்கு "ஸ்ரீ நகர்" என்ற பெயர் ஏற்பட்டது. ஆழ்வார்கள் அதனை அழகு தமிழில் "திருப்பேர் நகர்" என்று அழைத்தனர். கோயிலடிக்கு பெருமாள் எழுந்தருளுவதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவிக்குக் காட்சியளித்த பெருமாள், "பூதேவியைவிட நீயே உயர்ந்தவள்'' என்று ஆறுதல் கூறி, பிராட்டியை தன் திருமார்பில் சேர்த்துக் கொண்டார். பெருமாள் தன் மார்பில் ஸ்ரீதேவியை சூடிய தலம் இது. இங்கு வந்து வழிபட்டால் எல்லாச் செல்வங்களும் சேரும் என்பது ஐதீகம்.
உபரிசிரவசு என்பவன் பாண்டிய மன்னன். பெரும் பலசாலி, ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது மதம் பிடித்த யானை ஒன்று கௌதமரின் ஆஸ்ரமத்தில் நுழைவதைப் பார்த்து, அதன் மீது அம்பெய்தான். மேலும் சீற்றமடைந்த அந்த யானை, வேதமோதிய வேதியன் ஒருவனைக் கொன்றது. இதனால் மன்னனுக்கு "பிரம்மஹத்தி தோஷம்” பிடித்தது. தன் பலமெல்லாம் இழந்து உடல் நலக்குறைவால் துன்பப்பட்டான்.
இதனால் தன் அரசைத் துறந்து புண்ணியத் தலங்களில் புனித நீராடச் சென்றான் பாண்டியன். "பலாச வனம்” என்று அழைக்கப்பட்ட புரசங்காடுகள் நிறைந்த கோயிலடிக்கு வந்தவுடன் தெய்வ அனுக்கிரஹம் கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டதால் இத்தலத்தின் விசேஷத்தைத் தனது குலகுருவிடம் கேட்டான் மன்னன். அதற்கு அவர், துர்வாசரின் சாபத்தால் அசுரர்களால் துரத்தப்பட்டு பதவியிழந்த இந்திரனை மீண்டும் தேவலோக அதிபதி ஆக்கப் பெருமாள் இங்கு அருளினார் என்று எடுத்துக் கூறினார், "சிறப்புமிக்க இத்தலத்தில் நீ தவம் செய்தால் உன் தோஷமும் விரைவில் நீங்கும்" என்று வழி காட்டினார்.
கோயில் அமைப்பு : பெருமாள் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம்.
பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். திருக்கடையூரில் சிவபெருமானால் என்றும் 16 வயதுடன் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேயன் இந்த யுகம் முடிந்ததும் மீண்டும் பிறவாமல், மோட்சநிலை அடைய வேண்டி இக்கோவிலுக்கு வந்து தவம் இருந்தார்.
பெருமாள் அவருக்கு மோட்ச நிலையை வழங்கினார். எனவே எமபயம் போக்கும் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் சிறிய பிள்ளையார் சன்னிதி உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை வழிகாட்டி விநாயகர் என்றும் அழைக்கிறார்கள். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார். இத்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம் பெறலாம்.
இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் 8 வது திருத்தலம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள் வாசம் செய்யும் திருத்தலங்கள் "திவ்ய தேசங்கள்" என்றும், "திருப்பதிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது.
திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள். தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் பங்குனிமாதம் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். மேலும் அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடக்கிறது. தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து தங்கள் பெயரில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்து 10 அப்பம் வாங்கி அதை நைவேத்திய தானம் செய்தால் உரிய பலன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை. நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கமலவள்ளி தாயார் கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். இக்கோவிலில் அப்பம் நைவேத்யமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தஞ்சாவூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவிலடி கிராமம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்லவேண்டும். திருச்சியில் இருந்து 23 கி.மீட்டர் தூரம் பயணித்தால் கல்லணை வழியாக கோவிலடியை சென்றடையலாம்.
தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள இரயில் நிலையம் : தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி, சென்னை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு