திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரங்கநாத சுவாமி கோயில்
அமைந்துள்ளது.
சுவாமி : ரங்கநாதர்
தாயார்: அரங்கநாயகி
நவ தீர்த்தம் : சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம்,சம்பு தீர்த்தம்,பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம்
தல விருட்சம் : புன்னை மரம்
மங்களாசாசனம் : பெரியாழ்வார்,ஆண்டாள்,குலசேகரஆழ்வார்,திருமழிசையாழ்வார்,தொண்டரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்,பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார்
தமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும். இது ‘மத்தியரங்கம்’ என்று பெயர் பெறுகிறது. சிலர் இதை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
சிறப்புகள் : இத்தலத்தில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ள திருக்கோவிலே ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோவிலாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் இத்தலம் "பூலோக வைகுண்டம்" என்று அழைக்கப்படுகிறது. லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும். மதுரகவி ஆழ்வாரை தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனை போற்றி மங்களாசாசனம் செய்த ஸ்தலமாகும். கவிசக்கரவர்த்தி கம்பர், கம்பர் இராமாயனத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார். ஸ்ரீவைஷ்ணவத்தின் ஆதாரத் தூணாகிய உடையவர் எம்பெருமானார் ஸ்ரீராமானுசரும், இன்னும் பல அடியார்களும் இத்திருத்தலத்தினை மையமாகக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவத்தைப் பரப்பியுள்ளார்கள். முதன்மை பெற்ற இத்திருத்தலத்தை ஆழ்வார் பெருமக்களும், ஆச்சார்யார்கள், பகவத் பாகவதர்கள் மற்றும் சேர, சோழ, பாண்டிய, ஹொய்சாள மற்றும் விஜயநகர முதலான மன்னர் மரபினர், அடியவர்கள் என பல வகையினரும் பரவி போற்றியுள்ளனர்.
விஷ்ணு பெருமாள் தனது பக்தர்களுக்கு ஆதிசேஷ வடிவில் சுருண்ட பாம்பின் மீது படுத்துக்கொண்டு ரங்கநாதராக காட்சி தருகிறார். இந்த விஷ்ணு சிலையின் தனிச்சிறப்பு என்னவென்றால், வழக்கமாக பிரம்மாவின் தொப்புளில் இருந்து எழும் தாமரை காணவில்லை. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பிரம்மா விஷ்ணுவை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பெருமாள் பரலோகத்தில் இருந்து கொண்டு அண்டத்தில் உள்ள அனைத்தையும் பாதுகாக்கின்றார். மேலும் ஸ்ரீரங்கத்தில் துணை கோயில்களாக விஷ்வக்சேனா, ராமர், கிருஷ்ணர், நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருடன், அனுமான், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் மற்றும் வேதாந்த தேசிகர்கள் அருள்புரிகின்றனர். ஸ்ரீரங்கநாதரின் பெருமையை கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தை, ஸ்ரீரங்க மாகாத்மியம், ஸ்ரீ குண ரத்ன கோசம், ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் முதலிய நுல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கர் வருகைக்கு முன்னமே தோன்றிய சந்திர புஷ்கரணி என்னும் தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.
தல வரலாறு : முன்னொரு சமயம் படைப்பின் நாயகனான ஸ்ரீ பிரம்மதேவரின் கடுந்தவத்திற்கு அருள்புரிந்து, ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்ரீரங்க விமானத்தை பிரம்ம தேவருக்கு அளித்தார். விமானத்தினுள் ஸ்ரீ வைகுண்டமே அடங்கியிருந்தது. பலகாலம் பூஜித்த பிரம்ம தேவர் ஸ்ரீ ரங்க விமானத்தை இந்திரனுக்கு வழங்கினார். இந்திரனும் பலகாலம் பூஜித்து அதை சூரிய தேவனுக்கு வழங்கினார். சூரிய தேவனும் பலகாலம் பூஜித்து சூரிய குலமான இஷ்வாகு மன்னனுக்கு அளித்தார். இஷ்வாகு மன்னனும் அவரது குலத்தோன்றல்களும், இவ்விமானத்தை பூஜித்து வந்தனர். இக்குலத்தில் தோன்றிய தசரத மன்னனின் புதல்வனான ஸ்ரீ ராமபிரானும் பூஜித்து வந்தார். இராவணனின் வதம் முடிந்த பிறகு அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீ ராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த, ஸ்ரீ விபீஷ்ணனுக்கு இவ்விமானத்தை பரிசாக அளித்து பூஜிக்க கூறினார் ஸ்ரீராமர்.
விபீஷ்ணனும் மிக்க மகிழ்ச்சியோடு இவ்விமானத்தை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில், காவேரி நதிக்கரையில் சந்திர புஷகரணிக்கருகில் இவ்விமானத்தை கீழே இறக்கி மாலை வேலை சந்தி கடன்களை செய்ய சென்றார். மீண்டும் வந்து விமானத்தை தன்னுடன் எடுத்துச் செல்ல தூக்க முயன்ற போது, அவரால் அசைக்க முடியவில்லை. விபீஷ்ணன் மிகவும் மனம் வருந்தி ஸ்ரீ ரங்கநாதரை வேண்டினார். ரங்கநாதரோ அசரீரியாக யாம் காவேரி கரையிலேயே தங்க விரும்புவதாக கூறினார். யாம் எப்போதும் உனது இலங்கை நோக்கியே காட்சி தருவோம் என்று கூறினார். அதன் படியே அன்றிலிருந்து ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கியே அருள் பாலிக்கிறார். தர்மவர்மசோழன் முதன் முதலில் இப்பெருமாளுக்கு சிறு கோவிலை கட்டினார். அதன் பிறகு பல அரசர்களின் முயற்சியால், இப்பிரம்மண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத என்ற சித்தாந்தத்தை நாடு முழுக்க பரப்பினர். ஸ்ரீ ராமானுஜரின் திருமேனி வசந்த மண்டபத்தில் இப்பொழுதும் நாம் காணலாம். அவருடைய பூத உடல் கெடாதவாறு இருக்க மூலிகை சாந்து பூசி வைத்திருகிறார்கள்.
கோயில் அமைப்பு : 156 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே 7 பிரகாரங்களைக் கொண்டதும், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களையும் உள்ளடக்கிய புராதன ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று- பூலோகம்
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று - புவர்லோகம்
3.அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று- ஸுவர்லோகம்
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று- மஹர்லோகம்
5.குலசேகரன் திருச்சுற்று- ஜநோலோகம்
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று- தபோலோகம்
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று- ஸத்யலோகம்
108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாத சுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது. திருவரங்கம் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
முதலில் தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் "வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
கோயில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர். விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன. மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது. கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். ராமானுஜரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர்சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் முக்கிய கோபுரம் ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளை கோபுரம் ஆகும். விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் கோவிலின் பிரமாண்டமான மகா மண்டபம் அர்த்தமண்டபம் உட்பட ஒன்பது கலைநயம் மிக்க சிற்பங்கள் நிறைந்த மகா மண்டபங்கள் மற்றும் இராஜ கோபுரங்களை அமைத்தனர். பின்னர் கோவிலின் கிழக்கு புறம் கலைநயம் மிக்க சிற்பங்கள் நிறைந்த ஆயிரங்கால் மண்டபம் அதன் எதிரே சேஷராய மண்டபங்களை அமைத்தனர்.
ஸ்ரீரங்கம் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லீம் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டன. இந்துமதத்தின் சடங்குகளை ஏற்றுக்கொள்ள படையெடுப்பாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் அழகியமணவாள பெருமாள் விக்ரகம் ஒளித்துவைத்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான பொக்கிஷங்கள், நகைகள் மற்றும் ஆபரணங்களை கொள்ளையிட்டார்கள். அழகியமணவாள பெருமாள் கோவில் விக்கிரகம் தில்லிக்கு அனுப்பப்பட்டது. தில்லியில் அழகியமணவாள பெருமாளின் சிலையை கண்ட சுல்தான் மகள் அதை நேசிக்கத் தொடங்கினார். அவர் தனது நேரத்தை சிலைக்கு செலவழித்தார். சுல்தான் அழகியமணவாள பெருமாள் சிலையை மீண்டும் ராமானுஜாச்சாரியாவிடம் ஒப்படைத்தார். சுல்தான் மகளால் இதை தாங்க முடியவில்லை. அவள் மர்மமாக மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு ஸ்ரீரங்கநாத கோயிலுக்கு அருகே ஒரு தனி சன்னதி உள்ளது. அவர் "துளுக்க நாச்சியார்" என்று அழைக்கப்பட்டு மக்களால் வழிபடப்படுகிறார். இந்த சம்பவம் நடந்த பிறகும் கூட ஸ்ரீரங்கத்தை அடிக்கடி பல முகலாய கொள்ளை கும்பலால் தாக்கி கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் விஜயநகர பேரரசின் எழுச்சிக்குப் பிறகு முகலாய சுல்தான்களின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்தன. விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த புனித நகரத்தை பிரமாண்டமான கட்டிடங்கள் மண்டபங்கள் கட்டினார்.
காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை, மற்றும் 9.00 மணி முதல் 12.30 மணி வரை, நண்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள இரயில் நிலையம் : திருவரங்கம்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி, சென்னை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு