ஶ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், காக்களூர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், திருவள்ளூர் மாவட்டத்தின் காக்களூர் என்னும் சிறிய கிராமம் கூவம் நதிகரையில் அமைந்துள்ள இச்க்ஷேத்திரம் சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 2.8 கி.மீ. தொலைவில் ஶ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது.
இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் அமைக்கப்படுகின்றன. தனிக்கோயில்கள் பெருமளவு அனுமருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்தமையால், பல கோயில்கள் பெரிய சிலைகள் வைக்கப்படுகின்றன. அனுமர் உருவச் சிலைகள் பல்வேறு உருவங்களில் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
தல சிறப்புக்கள் : மூலவர் ஆஞ்சநேயரை வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். அவர் திருப்பதி திருத்தணி முதலிய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை வந்துள்ளார். விஜய நகர் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பல க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்துள்ளார். அப்படி யாத்திரை செய்யும் பொழுது பல தலங்களில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்துள்ளார். அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு தலம் காக்களூராகும். இராகவேந்திர சுவாமி அவர்களும் இத்தலத்திற்கு வந்து இம்மூலவரை பூஜை செய்துள்ளார்.
ஸ்ரீ வீர அஞ்சநேய சுவாமி மிகவும் கம்பீரமாகவும், உயரமாகவும் நிற்கிறார். உயரம் ஒன்பது முதல் பத்து அடி வரை நின்ற கோலத்தில், வலது திருக்கரத்தினால் அபயம் அளிக்கிறார். இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தை வைத்துள்ளார். இருகரங்களிலும் ’கேயூரமும், கங்கணமும் அணிந்துள்ளார். அவரது நீண்ட வால் தலைக்கு மேல் வளைந்து தெரிகிறது. அவரது கேசம் அழகாக முடியப்பட்டுள்ளது. மார்பினை மூன்று விதமான மாலைகள் அலங்கரிக்கின்றன. திருப்பாதங்கள் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு வருவதற்கு தயாராக இருக்கும் நிலையில் காணப்படுகிறது.
தொண்டைமண்டலத்தின் பகுதியான திருவள்ளூர் அருகில் இரண்டு பிரபலமான ஹனுமான் திருக்கோயில்கள் உள்ளன. முதலாவது 3 கி.மீ தொலைவில் உள்ள காக்களூர் என்னும் கிராமத்தில் உள்ளது. வியாசராஜா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இது என்பதால் பல பாரம்பரிய ஹனுமார் பக்தர்கள் இக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வருகிறார்கள். இரண்டாவது திருக்கோயில் மற்றொன்று அண்மையில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் மந்திர மூர்த்தி அவர்களின் சீடரான வெங்கடேச பட்டாசாரியார் என்னும் மகானால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. நாற்பது அடி உயரத்தில், மிகவும் அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் சிலாரூபமாக இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயரை இங்கு தரிசிக்கலாம்.
ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மிகவும் எளிமையாக இருக்கிறது. பக்தர்கள் மூலவரை சாலையிலிருந்தே தரிசிக்கலாம். திருக்கோயில் என்பது கர்ப்பகிரஹம் மற்றும் அதன் முன் பெரிய மண்டபம் அவ்வளவு தான். கோயிலை ஒட்டிய மாதரி சிறிய சமையலறை உள்ளது. கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. சென்னை பெரம்பூரில் உள்ள இராகவேந்திரா மடம் தங்களாலான உதவியை செய்து இக்கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். ஆஞ்சநேயர் கோயிலை ஒட்டியே ஒரு புறம் கணபதிக்கு கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் கணேசரையும் ஆஞ்சநேயரையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்து பலன் பல மடங்காக அடையலாம். இவ்விரு திருக்கோயிலுக்கும் முன் அரசமரமும், வேப்பைமரமும் சேர்ந்து வளர்ந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் இம்மரத்தின் கீழ் இருந்து தங்களது வழிபாட்டை செய்கிறார்கள்.
சென்னையிலிருந்து மின்ரயிலில் வருவது மிக சுலபம்.திருவள்ளூருக்கு முந்திய நிறுத்தமான புட்லூர் இரயில் நிறுத்ததில் இறங்கி "காக்களூர் ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு இறங்கவும்" என்னும் அறிவிப்பு பலகையும் இருக்கிறது. இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் ஆலயம் உள்ளது. ஆட்டோகளும் கிடைக்கும்.
இந்த கோவில் காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை சென்ட்ரல், திருவள்ளூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு