டாகோர் துவாரகை
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கெடா மாவட்டத்தில் நதியாத் என்ற ஊரின் அருகில் அமைந்துள்ள இரண்டாவது துவாரகை டாகோர். சோம் நாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
பஞ்ச துவாரகை : துவாரகை குஜராத் மாநிலத்தின் தேவபூமி. ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்தது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்று. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. கோமதி ஆற்றின் கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. துவாரகை என்றால், கோமதி, பேட் துவாரகையை குறிக்கும். எனினும், கிருஷ்ணர் பிறந்த இடம், வசித்த இடம், வளர்ந்த இடம், லீலைகள் புரிந்த இடம், ஆட்சி செய்த இடம் என்று பல இடங்கள் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன. துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட டாகோர் துவாரகை, கோமதி துவாரகை, பேட் துவாரகை, மூலத் துவாரகை, மோட்ச துவாரகை, சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றழைக்கப்படுகின்றது. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்களின் வம்சமே அழிவுற்றது. துவாரகாவின் பெரும் பகுதி கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது புனித யாத்ரீகத் தலமாக போற்றப்படும் ஆதி துவாரகையின் நிழலாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.
தலச் சிறப்புகள் : கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, தற்போது டாகோர் துவாரகையின் மூலவராகத் திகழ்கிறாராம். கடலுக்கு நடுவில், தீவு போன்ற விசாலமான இடத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் உள்ளது. முதலில், ப்ரத்யும் சந்நிதி. நடுவில் கண்ணனின் ஆலயம். தேவகி, மாதவன் ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. நரகாசுரனிடம் இருந்து 16,000 பெண்களை மீட்டு, அவர்களுடன் ஸ்ரீகண்ணன் வாழ்ந்தது இங்குதான். இங்கே ரணசோட்ஸாகர், ரத்ன குளம், கசாரி குளம் முதலான குளங்கள் உள்ளன. தவிர, ஸ்ரீமுரளிமனோகர் மற்றும் ஸ்ரீஅனுமனுக்கு ஆலயங்கள் உள்ளன. இங்கே தரிசித்துவிட்டு, ப்ரபாஸ தீர்த்தத்துக்குச் செல்வது அவசியம். இந்தத் தீர்த்தக்கரையில்தான், யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்ட னர். இதை அடுத்து, ப்ராசீ த்ரிவேணி. இங்கு செல்லும் வழியில், பிரம்ம குண்டம் எனும் குளமும், பிரம்ம கமண்டலு எனும் கிணறும் உள்ளன. இவற்றுக்கு முன்னே ஆதிப்ரபாஸம், ஜலப் பிரபாஸம் என இரண்டு குண்டங்கள் உண்டு. ப்ரபாஸ தீர்த்தத்தில் ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா எனும் நதிகள் கடலில் கலக்கின்றன. இதனால் 'ப்ராசி த்ரிவேணி’ எனப்படுகிறது.
தல வரலாறு : துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடானா, தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்குச் சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான். எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியில் அமர்ந்து இறைவன் வந்தாராம். வண்டியை ஓட்டிய போடானா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய பரந்தாமன், பக்தர் போடானாவுக்காக மாட்டுவண்டியை ஓட்டினான். டாகோர் சாலையில் ஒரு வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக இந்த மரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக் கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன.
இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போடானாவைப் பணித்தார். அந்தப் பக்தரோ, எங்கே நம் இறைவனைக் கண்டு அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்று பதறினார். அப்போது, 'உள்ளவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியுமவனான’ என கண்ணபிரான், தனது சோதிவாய்த் திறந்து போடானாவிடம் பேசினான். 'தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள் என்றார் பகவான்.
ஆனால், போடானாவோ எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் செல்வந்தன் இல்லை அவன் மனைவி, கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. வந்தவர்கள் குழம்பியபடி கிளம்பிச் சென்றனர். துவாரகை நாயகனே டாகோரில் தரிசனம் தருகிறார்.
கோமதி துவாரகையின் மூல மூர்த்தியை, டாகோருக்கு போடானா எடுத்து வந்த பிறகு, ருக்மிணிதேவி பூஜித்த மூர்த்தமானது, லாட்வா கிராமத்தின் குளத்தில் கிடைத்தது. துர்வாச முனிவர் ‘கண்ணனைப் பிரிவாய்’ என ருக்மிணிக்குச் சாபம் கொடுத்தாராம். அப்போது, ‘இந்த மூர்த்தத்தில் நான் உறைந்துள்ளேன். இதனை அனுதினமும் பூஜித்து வா’ என மூர்த்தம் ஒன்றைக் ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்தாராம். அந்த மூர்த்தமே, குளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனை, துவாரகையில் தரிசிக்கலாம். துர்வாசரின் சாபம் காரணமாக, துவாரகையில் இருந்து ஓகா செல்லும் வழியில், தனிக்கோயிலில் காட்சி தருகிறாள் ஸ்ரீருக்மிணிதேவி. இங்கு தண்ணீர் தானம் சிறப்பானது. இந்த ஆலயத்தை, கிருஷ்ணரின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன் அமைத்ததாகச் சொல்வர். ஒருகாலத்தில், குசஸ் தலீ என அழைக்கப்பட்ட இந்த ஊர், கண்ணனின் மோட்ச துவாரமாகச் சொல்லப்பட்டு, துவாரகை என்றானது.
அருகிலுள்ள விமான நிலையம் : ஜாம்நகர், அகமதாபாத், வதோதரா
அருகிலுள்ள ரயில் நிலையம் : டகோர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை