பத்ரிநாத்
அமைவிடம் : இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் பத்ரிநாத் உள்ள இந்துக்களின் மிகவும் பிரபலமான பத்ரிநாராயணன் கோவில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
மூலவர் : பத்ரி நாராயணன்
தாயார் : அரவிந்தவல்லி / மஹாலக்ஷ்மி
தல விருட்சம் : இலந்தை மரம்
தீர்த்தம் : தப்த குண்டம், நாரத குண்டம் ,கூர்மதாரா, பிரகலாததாரா,ரிஷிகங்கர்
விமானம் : தப்த காஞ்சன விமானம்
பாடியவர் : பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்
தல சிறப்பு : வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் 99 வது திவ்யதேசம். மூலவர் பத்ரிநாராயணர், விஷ்ணுவின் 3.3 அடி உயரமான கருப்பு சாளகிராமத்தினால் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கரத்தில் சக்கரமும் மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.
மகாலட்சுமிக்கு பிடித்த இருப்பிடமான பத்ரி, இலந்தை மரத்தின் கீழேதான் நாராயணன் அமர்ந்து இருப்பதாக ஐதிகம். உலகில் தோன்றிய ஞானம் அனைத்திற்கும் ஆரம்ப இடமே இது. தப்த குண்டத்தில் நீராடிய பிறகே கோவிலுக்குள் செல்ல வேண்டும். கூர்மதாரா தீர்த்தம் அன்னதானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இங்கு பூஜைகள் கேரள முறைப்படி நடைபெறுகிறது.
பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி, நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. குளிர்காலத்தில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் 6 மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும்.
பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். மஹா லக்ஷ்மித்தாயார் சன்னதியின் உள்ளே இருப்பார். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட அகண்ட தீபம் ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.
கடல் மட்டத்திலிருந்து 3110 மீ உயரத்தில், 400 அடி உயர வஸுதரா என்ற அருவியிலிருந்து இறங்கி வரும் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பத்ரிநாத், நீல்காந்தா போன்ற மலைகளுக்கு பயணங்கள் செய்ய நுழைவாயிலாக உள்ளது.
கந்தமாதன மலைத் தொடரில், நாராயணர் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம் மலை என்றும் விளங்குகிறது. கோயிலுக்கு நாற்புறமும் பனிமலைகளும், எதிரே நாராயண மலையும், வலப்புறத்தில் நீலகண்ட மலையும் உள்ளன. இந்தப் பத்ரி வனத்தில், மணிபத்ரபூர் மாணாகிராமத்தில் ஒரு குகையில் அமர்ந்து பகவான் பாதராயண வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார். இது வியாச குகைக்கு எதிரில் உள்ளது. பத்ரிநாத்தில் தவம் புரிந்த பல தவசிகளின் பெயரில் அனேக குகைகளும், அருவிகளும், ஆறுகளும், புஷ்கரிணிகளும் உள்ளன. இலக்குமி சொரூபமான இலந்தை மரத்தின் கீழ் அமைந்த ஆசிரமத்தில் நாராயணன் எழுந்தருளியிருந்ததால் பத்ரிநாத் என்று வணங்கப்படுகிறார்.
கோயிலின் பின்புறம் இலட்சுமி நரசிம்ம மந்திரில் (தனிக் கோயில்), ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத் ராமானுஜர் மேலும் இலட்சுமி நரசிம்மன் சந்நிதிகள் உள்ளன.
பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் :
1. தப்த குண்டம் : இது வஹ்நி தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இது அக்னியின் வாசஸ்தானம்.
2. பிரகலாத குண்டம் : தப்த குண்டம் பக்கத்தில் பிரகலாத குண்டம் அமைந்துள்ளது. இதில் ஒரு பகுதியில் மிக வெப்பமான நீர் உள்ளது.
3. நாரத குண்டம் : தப்த குண்டம் பக்கம் அலக்நந்தா நதிக் கரையில், நாரத குண்டம் உள்ளது. ஒரு பாறைப்பகுதியின் மறைவில், பாறையின் ஆதாரத்தைக் கொண்டு பக்தர்கள் வசதியாக பயமில்லாமல் ஸ்நானம் செய்யலாம்.
4. கூர்ம தாரா : ஒரு குளிர்ந்த அருவி பெயர் கூர்ம தாரா. கூர்மாவதார காலத்தில் நாரதர் இந்த நீர்த்தாரையில் ஸ்நானம் செய்து விஷ்ணு பகவானை ஆராதித்தாக வரலாறு.
5. ரிஷிகங்கா : இந்த தீர்த்தம் நீலகண்ட மலையின் பள்ளத்தாக்கில் பெருகிப் பாய்ந்து அலக் நந்தாவில் சங்கமம் ஆகிறது.
பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 25கி.மீ. தூரத்தில் ஸத்யபத் புஷ்கரிணி 14,440அடி உயரம் உள்ளது. இதற்கு அப்பால் சோம குண்டம், சூர்ய குண்டம்,விஷ்ணு குண்டம் உள்ளன. இவைகளில் உள்ள நீர் வெப்பமுடையது. இதைத்தவிர இந்தப் பகுதியில் பல புண்ய நீர்நிலைகள் உள்ளன.
ஐந்து சிலைகள்
1. நாரத சிலை : தப்த குண்டம் – நாரத குண்டத்திற்கு நடுவில் நாரத சிலை இருக்கிறது. குளிர்காலத்தில் நாரத மகரிஷி பத்ரி நாராயணனுக்கு ஆராதனை செய்கிறார் என்று நம்பப்படுகிறது.
2. வராக சிலை : வராக சிலை, நாரத சிலை பக்கத்தில் அலக்நந்தா நதிக் கரையில் உள்ளது. வராக பகவான் இந்த இடத்தில்தான் பத்ரிநாத் பகவானை ஆராதித்தார் என்று நம்பப்படுகிறது.
3. கருட சிலை : கருட சிலை ஆகியவை கேதாரீச்வர் மந்திரின் அருகாமையில் உள்ளது. கருடன் தனது மாதாவை, அடிமை வேலையிலிருந்து விடுவித்து, இங்கு விஷ்ணு பகவானின் வாகனமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
4. மார்கண்டேய சிலை : தப்தகுண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது. இரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, ரிஷிகளின் ப்ரார்த்தனையை ஏற்று பகவான் நரசிம்மன் இங்கு தரிசனம் அளித்தார்.
நந்தாதேவி மந்திர், சேஷ நேத்ரம், சேஷ தாரா, ப்ருகுதாரா, மாதா மூர்த்தி மந்திர், வஸோதாரா மேலும் லக்ஷ்மீ வனம், ப்ருஹ்ம நதி, ஸரஸ்வதி அலக்நந்தா புனித சங்கமம், கேசவ ப்ரயாக் முக்கியமானவை.
பத்ரிநாத் அருகில் ரிஷிகங்கையின் வலது பக்கத்தில், நந்தாதேவி கோயில், மேலும் நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் கல்லில் செதுக்கப்பட்ட பகவானின் சரணபாதுகையை தரிசனம் செய்யலாம்.
பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை முக்கியமான புனித இடங்கள்.
பத்ரிநாத்திலிருந்து சுமார் 10கி.மீ. தூரத்தில் வசோதாராவும், இதைத் தாண்டி லக்ஷ்மீ வனம் உள்ளது. இதற்கு அப்பால் சகஸ்ரதாரா, பஞ்சதாரா, துவாதசாதித்ய, சதுஸ்ரோத், தீர்த்தங்கள் தாண்டி, சக்ர தீர்த்தம் உள்ளது. சக்ர தீர்த்தத்தைக் கடந்து, பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 25கி.மீ. தூரத்தில் ஸத்யபத் மேலும் ஸதோபந்த் என்ற பெயருடைய தீர்த்தங்கள் உள்ளன.
சுமார் 3 கி.மீ. தொலைவில் மாணா கிராமம் பகுதியில் பத்ரி நாத்தினுடைய மாதாவின் கோயில் உள்ளது. மாணா கிராமத்திற்குப் பக்கத்தில் மாணா கணவாய் வழியாக திபத் செல்லும் வழி உள்ளது. மாணா கிராமத்திற்கு கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது.
அலக்நந்தா – சரஸ்வதி நதியின் சங்கம ஸ்தானம், கேசவ ப்ரயாக் என்று அழைக்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரும், விசுவாமித்ர முனிவரும் இந்த புனித இடத்தில் தவம் புரிந்ததாக கூறப்படுகிறது.
விருத்த பத்ரி: ஜோதிர்மட்டிலிருந்து 10கி.மீ. தொலைவில் அனீமடம் என்று கூறப்படும் புராதனமான தீர்த்த ஸ்தலம் உள்ளது.
அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில், இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இது பிரசித்தமான தீர்த்தம். நாரதர்தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராசாரியாரும் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
த்யான பத்ரி : ஜோஷிமடம் பஸ் மார்க்கத்தில் ஹைலாங் கிராமத்தின் பஸ் நிற்கும் இடத்தில் இருந்து 11கி.மீ. கால்நடையாகச் சென்று ஊர்கம் கிராமத்தை அடையலாம். அங்கு ஊர்வஷியின் தபோபூமி உள்ளது. இங்கு உள்ள விஷ்ணு மந்திரில் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.
யோகபத்ரி : ஜோஷிமட் பத்ரிநாத் பஸ் மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில் பாண்டுகேச்வரர் புண்ய க்ஷேத்ரத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான மந்திர் அமைந்துள்ளது. கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். குளிர்காலத்தில் பத்ரிநாத் பகவானின் கோயில் கதவுகள் மூடப்பட்டதும், சுமார் 6 மாத காலத்திற்கு பத்ரிநாத் பகவானின் உற்சவ மூர்த்தி இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
பவிஷ்யபத்ரி : ஜோஷிமட், மலாரி பஸ் தடத்தில் 15கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4கி.மீ. கால்நடையாகச் சென்று ஸுபாயீ கிராமத்தை அடையலாம். இங்கு சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில் பவிஷ்ய பத்ரி கோயில் உள்ளது. அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப்போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறது.
கி.பி 9 ம் நூற்றாண்டில் ஆதிசங்கர ஸ்வாமிகள் இங்கு வந்த போது இந்த மூர்த்தியை பிரதிஷடை செய்தார். 18 ம் நூற்றாண்டில் கார்வால் அரசர்களால் கட்டப்பட்டது. கற்பக்கிர மண்டபம், தரிசன மண்டபம்,சபா மண்டபம் ஆகிய உள்ளன. கருவறையில், உற்சவமூர்த்தி, நாரதர், தனாதிபதி குபேரர், மேலும் கருட பகவானின் விக்ரகங்களையும், சுதர்சன சக்கரம், சரணபாதுகை முதலியவைகளையும் உள்ளது. தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள மகாலக்ஷ்மி சந்நிதியில் தரிசனம் அளிக்கிறாள். வசிஷ்டர், காஷ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விசுவாமித்திரர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகள் தவம் செய்த புண்ணிய பூமி இந்த பத்ரிகாஸ்ரமம். கோயிலின் பின்புறம் இலட்சுமி நரசிம்ம மந்திரில் ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத் ராமானுஜர் மேலும் இலட்சுமி நரசிம்மன் சந்நிதிகள் உள்ளன. கோயிலின் ராஜகோபுரம் முன்பு இருக்கும் தப்த குண்டத்தில், நீராடி, சிம்ம துவாரத்தில் இருக்கும் கருட பகவானை தரிசித்துவிட்டு, கோவிலின் பிரகாரத்தை அடைகின்றனர். தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் இதமான சூடாக உள்ளது.
பத்ரிநாதர் ஆலயம் எப்போது நிறுவப்பட்டது என்பதற்கு வரலற்றுப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. புத்தர் காலத்தில் நாரத குண்டத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து அதை தப்த குண்டத்திற்கும் கருட சிலாவிற்கும் இடையில் பைரவி சக்கரத்தின் மேல் பிரதிஷ்டை செய்தார். 5ம் நூற்றாண்டில் குஷ்ட நோயால் அவதிப்பட்ட கர்வால் மஹாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற குருவின் யோசனைப்படி இந்த மூர்த்தியை தற்போது உள்ள இடத்தில் நிறுவினர். இதனால் அவரது அந்த நோய் நீங்கியது.
நீல்காந்த் : பத்ரிநாத் கோயிலுக்கு மேலே அமைந்த நீல்காந்த் சிகரம் சிவனின் பெயரால் அழைக்கப்படுகிறது. சிகரத்தின் உச்சம் சூரியனை நிறக் கதிர்களைப் பின்தொடரும் முதல் இடமாகும். நீலகாந்த் ஒரு பிரமிடு வடிவ வடிவிலான பனி சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 6,560 மீட்டர் உயரத்தில் நீல்காந்த் மலை உச்சியில் அமைந்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, ஜூன் 8 நாட்கள் நடைபெறும் பத்ரி கேதார் திருவிழா
தரிசன நேரம் : காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, 3.00 மணி முதல் 9.00 மணி வரை
ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, கொத்வார், டெஹ்ராடூன், ஹரித்வார் ஆகியவற்றுக்கு ரயில் வசதி உள்ளது. ரிஷிகேஷுக்கு சாலை வழியாக பயணிக்க விரும்புவோர் டெல்லி, டெஹ்ராடூன், ஹரித்வாரில் இருந்து தனியார் கார்கள் மற்றும் பேருந்து வழியாக இலக்கை அடையலாம். இந்த கோவிலுக்கு இலகுவான வழி பேருந்து மூலம் அடையலாம்.இரண்டு நாட்கள் பயணித்து ஜோஷிமத் என்ற இடத்தில பேருந்து நிறுத்தப்படும். மறுநாள் புறப்பட்டு 42 கி.மீ தொலைவில் பத்ரிநாத்யை அடையலாம்.
பயணிக்க உகந்த காலம் : ஏப்ரல் முதல் நவம்பர் வரை
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ் 298 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு