கைலாஷ் மலை
அமைவிடம் : இந்தியா- சீனா எல்லையான இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கைலாச (கைலாஷ்) மலை, கடல் மட்டத்திலிருந்து 6638மீ உயரத்தில் உள்ளது. இந்து, புத்த, சமண ஆகிய மூன்று மதத்தைச் சார்ந்தவர்களாலும் புனிதமாகக் கருதப்படுகின்றது. பத்ரிநாத்திலிருந்து கைலாஷ் 305கி.மீ தொலைவிலும், அல்மோராவிலிருந்து 405கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுற்றளவிலே 40 கி.மீலிருந்து 50 கி.மீ இருக்கும் கோபுரம் போல் தோற்றமளிக்கும் கைலாஷ் மலை 23000 அடி உயரத்தில் எப்போதும் பனியால் மூடப்பட்டு சூரிய ஒளியில் கண்கூசும் வண்ணம் பளபளவென ஜொலிக்கிறது. தற்போது அல்மோரா வழியாக செல்லும் பாதை நல்ல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இங்கிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள தோலிங்கமாட்டா, தாப்பா கிராமங்கள் உள்ளது. இங்கு புத்தருக்கு கோவில்கள் உள்ளது.
சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ள கைலாசமலை மற்றும் மானசரோவர் ஏரியை இந்தியாவிலிருந்து தரைவழியாகவே சென்று பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது மிகக் கடினமான பயணம் என்பது மட்டுமல்ல, அதற்கு சீன-இந்திய அரசுகளின் அனுமதியும் தேவை. சிவனும், பார்வதி குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர். கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. 12 ஆண்டு ஒருமுறை கொண்டபடும் விழாவிற்கு மலையின் பள்ளத்தாக்கில் மக்கள் கூடுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். 52கி.மீ நீளம் கொண்ட இப்பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
இறைவர் : கைலாயநாதர்
இறைவி : கயிலைநாயகி
தீர்த்தம் : மானசரோவரம் ஏரி, சிந்து
தேவாரப் பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
தல வரலாறு : சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம். இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது. இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற மலையாகும்.
சிறப்புகள் : இறைவன் பனி மலையாக அதிகாலையில் பொன்னிறமாகவும் அதன்பின் வெள்ளி நிறமாகவும் காட்சி அளிக்கிறான். இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும், இத்திருமலையை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருகிறது என்பது இம்மலையின் அமைந்துள்ள அதிசயமாகும். இம்மலையின் சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது. 29 மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைபாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன. இந்தியாவில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் இக்கயிலை மலையில் காணக்கிடக்கின்றன. ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் தரிசித்தபின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடினார். அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் நெடிய யாத்திரையை மேற்கொண்டு இந்த யாத்திரையின் பயனாக அவர் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் காணப் பெற்றார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என்று போற்றப்படுகின்றன.
கயிலாய யாத்திரைக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. இன்று திருக்கயிலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகிறது. நேபாள நாட்டின் தலைநகரான காட்மண்டு அங்கிருந்து கார் மூலம் 800கி.மீ. பயணம் செய்து டார்ச்சன் என்னும் இடம் வந்து அங்கிருந்து 150 கி.மீ. பயணம் செய்தால் கண்கொள்ளாக் காட்சியான அந்த கயிலை நாதனைக் காணலாம். கிரிவலம் என்பது கால் நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ செல்லலாம்.
கைலாஷ், மானசரோவர் யாத்திரை செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நேபாளத் தலைநகர் காட்மாண்டு வரை விமானத்தில் சென்று விட்டு அங்கிருந்து தரைமார்க்கமாக சீன எல்லையைக் கடந்து கைலாய மலையை அடைவது. இது சற்று எளிதானப் பயணம். மற்றொரு வழி, டெல்லியில் இருந்து சாலை வசதி உள்ளவரைக்கும் வாகனத்தில் காட்டிலும் மலையிலும் நடந்து திபெத் பகுதியை அடைந்து பிறகு மீண்டும் வாகனத்தில் சென்று பின்னர் மீண்டும் நடந்து கைலாசமலையை வலம் வருவது. யாத்திரைகளில் மிகக் கடினமானது கயிலாய யாத்திரையே.
பயணிக்க உகந்த காலம் : ஆண்டு முழுவதும் மே மாதம் முதல் அக்டோபர் வரை
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : லக்னோ, ராம்நகர், ரிஷிகேஷ்,கொத்வாரா, ஹரித்வார்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு