உய்யவந்த பெருமாள், திருவித்துவக்கோடு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள ஷோரனூக்கு 12 கி.மீ தொலைவில் இருக்கும் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பிலிருந்து, தெற்குத் திசையில் 2 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. ஷோரனூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் பட்டாம்பி சென்று அங்கிருந்து குருவாயூர் செல்லும் பேருந்தில் 4 கி.மீ தொலைவில் உள்ள திருமட்டுக்கோடு என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் ஆட்டோவில் சென்று இத்தலத்தை அடையலாம்.
மூலவர் : உய்யவந்த பெருமாள், அபயப்ரதன்,
தாயார் : வித்துவக்கோட்டுவல்லி, பத்மபணி நாச்சியார்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம்
விமானம் : தத்வகாஞ்சன விமானம்.
ப்ரத்யம் : அம்பரீஷன்
மங்களாசாசனம் : குலசேகராழ்வார் - 10பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவர் நின்றதிருக்கோலத்தில் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். கோயில் பாரதப்புழைக்கரை மேல் அமைந்துள்ளது. 'வித்துவக்கோட்மானே நீயே எனக்கு புகலிடம்' என்று நாட்டையும் அரசையும் துறந்து இப்பெருமாளை கேரள நாட்டு குலசேகர ஆழ்வார் சரணடைகிறார். ஆதலால் இப்பெருமாளை 'வித்துவக்கோட்டம்மான்' 'மிற்றுக்கோடு அமமான்' என்றும் அழைப்பர். பஞ்சபாண்டவர் தவம் செய்த தலம். அம்பரீஷன் முக்தியடைந்த தலம். அம்பரீஷ மகராஜவுக்கு தரிசனம் கொடுப்பதற்காக பெருமாள் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருப்பதாக தல புராணம் கூறுகிறது. காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் காசி விசுவநாதரை வழிபட்டு, அதற்கான பலன்களை அடையலாம். இக்கோவில் சைவம், வைணவம் என்று இரு பிரிவினரும் வழிபடும் கோவில்களில் ஒன்றாக இருக்கிறது.
காசிவிஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும், பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்திருப்பதாலும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் தத்வகாஞ்சன விமானம் ஆகும். அம்பரீஷன், பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் பெருமாளை தரிசித்துள்ளனர்.
தல வரலாறு : மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்திய பகுதிக்கு வந்தபோது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும், தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்படுகிறது. சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனி சன்னதி உள்ளது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தங்களது வன வாசத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கேயே தங்கி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. வெகு காலத்திற்கு பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது. நெடுங்காலமாகவே இக்கோயிலில் பெருமாள் வழிபாடு மட்டுமே இருந்து வந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்கு சென்று, அங்கேயே தங்கி வெகுகாலம் வாழ்ந்திருந்தார். அப்போது அவரது தாயாரின் உடல் நிலை மோசமாகி இறக்கும் நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. இதைக்கேள்விப்பட்ட அவர் காசியிலிருந்து தன் தாயை பார்க்க புறப்பட்டார். அவர் கிளம்பும் போது, இவரது பக்தியின் காரணமாக காசி விஸ்வநாதரும், முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறப்படுகிறது. முனிவர் வரும் வழியில் இந்த கோயிலை கண்டு, தனது குடையை இத்தலத்தில் வைத்து விட்டு குளிக்க சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்து சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதையும், குடை மறைந்து விட்டதையும் கண்டார். காசியிலிருந்த விஸ்வநாதரே, பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்தில் தங்குவதற்கு வந்து விட்டதாகவும், இதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறுவர். மூலவரை தரிசிக்கும் முன் இந்த சிவலிங்கத்தை தரிசித்து செல்லவேண்டும். கேரளாவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்ததை இப்பகுதி மக்கள் “ஐந்து தல மூர்த்தி தலம்’ என அழைக்கின்றனர். இ்ங்கு பஞ்சபாண்டவர்களால் நிறுவப்பட்ட நான்கு விஷ்ணு சிலைகளைக் கொண்ட நான்கு சன்னிதிகளுடன், சிவபெருமானுக்கும் ஒரு சன்னிதி சேர்ந்து அமைந்த ‘அஞ்சுமூர்த்திக் கோவில்’ இருக்கிறது.
நபாகணன் என்ற மன்னனின் மகனான அம்பரீஷன் முக்தி பெறுவதற்காக, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய விஷ்ணு, அவன் முன்பாகத் தேவேந்திரன் வடிவில் தோன்றினார். அதனைக் கண்ட அம்பரீஷன், “நான் தேவேந்திரனைக் காண இத்தவத்தைச் செய்யவில்லை, மகாவிஷ்ணுவைக் காணும் என் முயற்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம்” என்று பணிவோடு சொன்னான்.
அவனுடைய உண்மையான பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவனுக்குத் தனது உண்மையான தோற்றத்தைக் காண்பித்தருளினார். அம்பரீஷன் அவரிடம், தனக்கு எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் எனும் நான்கு தோற்றங்களில் தனது வியூகத் தோற்றத்தைக் காட்டியருளி, அவனுக்கு முக்தியும் அளித்தார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் வசித்து வந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று, அங்கேயேத் தங்கிச் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இந்நிலையில், அவரது தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர், தன் தாயைக் காண்பதற்காகக் காசியில் இருந்து திரும்பி வந்தார். அவர் பயணத்திற்காகக் கையில் எடுத்துக் கொண்டு வந்த தாழங்குடையில், அவர் வழிபட்டு வந்த காசி விசுவநாதரும் அவருக்குத் தெரியாமல் அமர்ந்து கொண்டு வந்தார்.
அந்த முனிவர், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட விஷ்ணு சிலைகள் அமைந்த கோவில் பகுதிக்கு வந்த போது, தான் கொண்டு வந்த குடையைக் கீழே வைத்துவிட்டு, அருகிலிருந்த ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார். அவர் குளித்துவிட்டு வந்த போது, அங்கிருந்த குடை வெடித்துச் சிதறியது. பின்னர், அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு, அம்முனிவர், அங்கு சிவபெருமானுக்கு தனிச் சன்னிதி ஒன்றை அமைத்தார் என்று சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு : இக்கோவிலில் அர்ச்சுனன் நிறுவிய விஷ்ணு மூலவராக இருக்கிறார். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த விஷ்ணுவை, சமஸ்கிருதத்தில் ‘அபயப்பிரதான்’ என்றும், தமிழில் ‘உய்ய வந்த பெருமாள்’ என்றும் அழைக்கின்றனர். இச்சன்னிதிக்கு வலதுபுறம், தருமர் நிறுவிய விஷ்ணு சிலையுடனான சன்னிதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரால் நிறுவப்பட்ட விஷ்ணு சிலையுடனான சன்னிதி என்று இரண்டு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இடதுபுறம் சிறிது பின்புறமாக, பீமன் நிறுவிய விஷ்ணு சிலையுடைய சன்னிதி இருக்கிறது.
பஞ்சபாண்டவர்கள் நிறுவிய நான்கு விஷ்ணு சிலைகளும் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையைக் கொண்ட நான்கு கைகளுடன் அமைந்திருக்கின்றன. இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதியோ, சிலையோ இல்லை. இங்குள்ள இறைவன் உய்யவந்த பெருமாள் மார்பில், தாயார் இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தாயார் நாச்சிவல்லி, பத்மபாணி நாச்சியார் என்று இரு பெயர்களால் அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பகவதி ஆகியோருக்கும் தனியாகச் சன்னிதிகள் இருக்கின்றன.
இக்கோவிலில் விஷ்ணுவுக்குரிய சிறப்பு நாட்களில் நான்கு விஷ்ணு சன்னிதிகளிலும், சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் சிவன் சன்னிதியிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் மலையாள நாட்காட்டியின்படி, மேடம் (சித்திரை) மாதம் ஆண்டுத் திருவிழா, இடவம் (வைகாசி) மாதம் மிருகசீருடம் நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் குரு பூர்ணிமா நாள், சிங்கம் (ஆவணி) மாதம் கிருஷ்ணர் தோற்றம் (கோகுலாஷ்டமி) நாள், கன்னி (புரட்டாசி) மாதம் வரும் நவராத்திரி நாட்கள், விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கார்த்திகை தீபத்திருநாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் மற்றும் கும்பம் (மாசி) மாதம் சிவராத்திரி நாளை ஒட்டி நான்கு நாட்கள் இக்கோவிலில் விழாநாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இங்குள்ள காசி விசுவநாதர் சன்னிதிக்குச் சென்று வழிபடுகின்றனர். அதன் பின்னர், மூலவரான உய்ய வந்த பெருமாள் மற்றும் பிற சன்னிதிகளில் உள்ள விஷ்ணுவையும் தீபம் ஏற்றித் துளசி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இங்கு வழி படுபவர்களுக்கு மனதில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர். திருமணத்தடை, வேலைத்தடை உடையவர்கள் இக் கோவிலில் சிறப்புக் கட்டணம் செலுத்தி, அர்ச்சகர் மூலம் ரிக் வேத சுலோகங்களைச் சொல்லச் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும், வேலை கிடைக்கும் என்று இங்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்து நதிகள் இணைந்த பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில் காசி விசுவநாதர் சன்னிதி அமைந்திருப்பதால், இக்கோவிலில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) செய்வது அதிக அளவில் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் அதிக அளவில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) நடைபெறுவது இங்குதான் என்று சொல்கின்றனர்.
காலை 5.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : எர்ணாகுளம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு