ஆதிகேசவப்பெருமாள், திருவட்டாறு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவனந்தபுரம் - நாகர்கோயில் ரயில் பாதையில் அமைந்திருக்கிறது. இத்தலம் தொட்டிபட்டணத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் சென்று தொடுவெட்டி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து வேறு பஸ்ஸில் 9 கி.மீ சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் : ஆதிகேசவப்பெருமாள்
தாயார் : மரகத நாச்சியார்
தீர்த்தம் : கடல்வாய்த் தீர்த்தம், வட்டாறு, ராம தீர்த்தம்
விமானம் : அஷ்டாங்க விமானம், அஷ்டார விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் புஜங்க சயனத்தில் இடது கை தொங்கவிட்ட நிலையிலும், வலது கை யோக முத்திரை காட்டி மேற்கே சிரம், கிழக்கே திருவடியும் புஜங்க சயனமாக மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். யோக முறையில் உருவானதால் அவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. மூலவரின் திருமுகத்தில் சூரியனின் கதிர்கள் இயற்கையாகவே சில குறிப்பிட்ட நாட்களில் விழும் என்றும் கூறுவர். உற்சவருக்கு அருகில் கருடன் மேல் வீதி வலம் வருவது கண் கொள்ளாக் காட்சி.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில், அளவில் மிகப்பெரியவர். இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். 108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு.
இக்கோயில் திருவனந்தபுரம் கோயிலைப் போன்றே கட்டப்பட்டுள்ளது. இப்பெருமாளையும் மூன்று வாசல்கள் வழியே சேவிக்க வேண்டும். ஆனால் இரு கோயில்களுக்கும் வேறுபாடுகள் சில உண்டு. அவை: இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்க இதில் ஒரு தலையைத் தான் காணமுடியும். பெருமாளின் கிரீடமும் பாதிதான் தெரியும். அவர் நாபிக் கமலத்தில் பிரம்மன் இல்லை, சிவலிங்கம் பெருமாளின் திருவடிகளுக்கு அருகில் உள்ளது. இது மேற்கு நோக்கிய சந்நிதி ஸ்ரீஆதி அனந்தபுரம் என்று இக்கோயில் வழங்கப்படுகின்நது. சந்திரனும் பரசுராமனும் இத்தலத்து பெருமாளை வழிபட்டு தவஞ்செய்து அருள்பெற்றனர்.
கேசி என்ற அசுரன் தேவர்களை இம்சிக்க தேவர்கள் பகவானிடம் முறையிட, பகவான் கேசியுடன் மல்யுத்தம் செய்து கேசியைத் தள்ளி மேலே படுத்துக்கொள்ள, கேசியின் பத்னி, ஆஸ_ரி, கங்கையை வேண்ட கங்கை தாமிரபரணியுடன் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிவர பகவான் உத்திரவுப்படி பூமிதேவி பகவான் இருக்கும் இடத்தை மலைபோல் மேடாக்க, கங்கையும் தாமிரபரணியும் பகவானை வணங்கி மாலை சமர்ப்பித்தாற்போல் இரண்டாகப் பிரிந்து வட்டமாக சென்றபடியால் இந்த ஸ்தலம் திருவட்டாறு என்று திருநாமம் பெற்றதாக வரலாறு. ஆதிகேஸியை பகவான் நிக்ரஹம் செய்தபடியால் பகவானுக்கு ஆதிகேஸர் என்ற பெயர் உண்டாயிற்று. நதிகள் பிரியும் இடம் ‘மூவாத்து முகம்’ என்றும், “தோதைபிரளி” என்றும் வழங்கப்படுகிறது. நதிகளை அநுக்கிரகிக்க இங்கே தீர்த்தவாரி நடக்கிறது.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளைப் பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி, இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் “வட்டாறு” என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்” எனப் பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப்பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன.(இது வைணவர்களின்கூற்று. சைவர்களின் கதையோ வேறு). மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகர்கோவில்
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு