திருவிக்கிரமசுவாமி, திருக்கோவிலூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவலூர் என்னும் கோபால நகரம், விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதையில் 34 கி.மீ தொலைவில் உள்ளது. கடலூரில் இருந்து ரயில் வழி 80 கி..மீ தொலைவில் உள்ளது. திருவண்ணாமலை - விழுப்புரம் சாலை மார்க்கத்தில் 36 கி.மீ தொலைவில் உள்ளது. பஞ்ச கிருஷ்ணச் சேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.
மூலவர் : திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
உற்சவர் : ஆயனார், கோவலன்
தாயார் : பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம் : புன்னைமரம்
தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
விமானம் : ஸ்ரீகர விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 18 பாசுரங்கள், பொய்கையாழ்வார் - 2 பாசுரங்கள், பூதத்தாழ்வார் -1 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 42 வது திவ்ய தேசம். இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது.சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
இத்தலம் பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களுள் ஒன்று. பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும் முன்பே கிருஷணக்கோயில் என்று வழங்கப்பட்ட இத்தலம் தொன்மையானது. அந்த ஆயானான கோபாலன் எழுந்தருளியுள்ள தலமே திருக்கோவலூர் ஆயிற்று.
தல வரலாறு : மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
இந்தத் திவ்யதேசத்தில்தான் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இரவில் இடைகழியில் சந்தித்து, பெருமாளையும் பிராட்டியையும் நேரில் இருட்டில் நெருங்கிய படி சேவித்து மூன்று திருவந்தாதிகளைப் பாடியது. மூலவர் வலக்கையில் சங்கமும், இடக்கையில் கச்ரமுமாக வலக்காலால் வையமளந்து நிற்கிறார். கோயிலுக்குள் இருக்கும் துர்க்கை தேவாதந்திரமாகக் கருதப்படுவதில்லை எம்பெருமானார் ஜீயர் பரம்பரை மகான்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட ஸ்தலம்.
பெருமாள் ஸ்ரீ சக்கரம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.வேணுகோபாலர் க்ஷேத்திர பாலகராக அருளுகிறார்.கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர்.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.
பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.பெருமாளை மட்டுமே பாடும் திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து “விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்’ என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.
பங்குனி மாதம் பிரம்மோற்ஸவம் 15 நாட்கள் நடைபெறும். பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும்.இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும். இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து பெருமாளை வழிபடுவர். மாசி மக உற்சவம் இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு. புரட்டாசி பவித்திர உற்சவம் நவராத்திரி உற்சவம் சித்திரை ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை ஆனிபெரியாழ்வார் சாற்று முறை திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம் ஆவணி ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம் ஐப்பசி முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் கார்த்திகை கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம் மார்கழி பகல் பத்து , இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.
நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள் ) தொல்லை நீங்கும். பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தலாம். துளசி மாலை சாத்தலாம். நெய்விளக்கு ஏற்றலாம். தாயாருக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்யலாம். துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செலுத்தலாம்.
காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு