திரு ஆதனூர், ஆண்டளக்கும்மையன்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் குடந்தையிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தத் திவ்யதேசத்தை பார்கவ சேத்திரம் என்பார்கள். கும்பகோணம்- திருவைகாவூர் வழித்தடத்தில், கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து வடக்கே 4 கி.மீ தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.
சுவாமிமலையிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது.
மூலவர் : ஆண்டளக்கும்மையன்
உற்சவர் : அழகிய மணவாளன் (ஸ்ரீரங்கநாதர்)
தாயார் : ரங்கநாயகி
விமானம் : ப்ரணவ விமானம்
தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி
தல விருட்சம் : பாடலி, புன்னை
தலச் சிறப்புகள் : தலையின் கீழ்மரக்காலும் இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். நாபியில் பிரம்மா திருவடிவில் திருமங்கைஆழ்வாரும் கன்றுடன் காமதேனுவும் உள்ளனர். காமதேனு தவமிருந்த தலமாதலால் இத்தலம் ஆதன் ஊர் ஆதனூர் எனப் பெயர் பெற்றது.
ஆதனூரிலும் எம்பெருமானின் கர்ப்பக்கிருகத்திற்குள் இருதூண்கள் உண்டு. அவற்றை நாம் தழுவிக் கொள்வோமாயின் நாம் சொர்க்கம் செல்லலாம். இத்தலத்தின் கோபுரத்தில் மகாவிஷ்ணு சிலை உள்ளது. ஒங்கார பகவான் விஷ்ணு என்ற திருப்பெயரில் பிரணவ விமானத்தில் வாசுதேவன் உள்ளார். இவர் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது முடிந்து பிரளயம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம். இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும்போது ஆஞ்சநேயர் இவ்வூரில் இரண்டு தினங்கள் தங்கி இளைப்பாறிச் சந்தியா வந்தனம் செய்துவிட்டுப் போனதாகவும் உடனே ஸ்ரீராமபிரான் இங்கே வந்து எனது பக்தன் இங்கு வந்தாரா என்று கேட்டுத் தனது திருவடியை வைத்து விட்டுச் சென்றதாகவும் வரலாறு. ஸ்ரீராமன் திருவடியும் ஸ்ரீஆஞ்சநேயரும் இங்கே பிரசித்தி பெற்று உள்ளனர்.
தல வரலாறு : திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. பணியாளர்களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ்வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், “உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்’ என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னி டம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி “இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்” என்றார்.
திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், “மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்‘ என்றார். திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் “நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?’ என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.
காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.
ரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்த மண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங்கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.
பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி “தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்” என்றார்.
அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார். ஆதிசேஷனுக்கு பெருமாளே ஆச்சாரியராக அருளிய தலம், பிருகு முனிவரின் மகளாகத் தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவை மணந்த இடம், இந்திரனின் சாபம் நீக்கிய பூமி, வைணவ ஆலயங்களில் அக்னி தலமாகவும், குரு தலமாகவும் விளங்கும் கோவில், திவ்ய தேசங்களில் பதினோராவது தலம், தம்பதியரின் மனக்கசப்பு நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்.
பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த பெருமாளை வந்து தரிசித்தார் பிருகு முனிவர். அவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றை வழங்கினாள். அந்த மாலையை, பெருமாளை வழிபட்டு திரும்பிச் செல்லும் வழியில் வந்த இந்திரனுக்கு பிருகு முனிவர் பரிசளித்தார். மாலையைப் பெற்றுக்கொண்ட இந்திரன், அதை ஐராவத யானையின் மீது வைத்தான். ஆனால் யானையோ, அதனை கீழே தள்ளி காலால் மிதித்தது. இதற்கு காரணமான இந்திரன் மீது கோபம் கொண்ட பிருகு முனிவர், அவனை மானிடனாகப் பூமியில் பிறக்க சாபமிட்டார்.
முனிவரின் சாபத்தால் கலங்கிய இந்திரன், மகாலட்சுமியிடம் சென்று வேண்டினான். அதற்கு மகாலட்சுமி, ‘நான் பிருகு முனிவரின் மகளாகப் பிறந்து, பெருமாளை மணம் புரியும் போது, உனது சாபம் நீங்கும்’ என்று அருளினாள். அதன்படியே, அனைத்தும் நடக்க, பெருமாள், மகாலட்சுமியின் திருமணக்கோலம் கண்டு, சாபவிமோசனம் பெற்றான் என புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. மகாலட்சுமி, மகாவிஷ்ணுவை மணம் புரிந்த தலம் இதுவாகும்.
இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னியாகவும், நவக்கிரக தலத்தில் குரு தலமாகவும் விளங்குகின்றது. மன முறிவு ஏற்பட்ட தம்பதியினர் இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், மன ஒற்றுமை ஏற்பட்டு மன மகிழ்வுடன் வாழ்வார்கள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தில் வைணவ விழாக்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. வைகாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம், விசாகத்தன்று தேர்த் திருவிழா போன்றவையும் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அருகே நரசிங்கபுரம் தலத்தில் அகோபில மடத்தின் சார்பான நரசிம்மர் சன்னிதியும், அதன் வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து ஜீயர்களின் பிருந்தாவனத்தையும் அனுமதி பெற்று தரிசிக்கலாம்.
தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்ல