பக்தவத்சல பெருமாள் , திருக்கண்ணமங்கை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூரிலிருந்து வடமேற்கே கும்பகோணம் செல்லும் பாதையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர்: பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் (விஷ்ணு நின்றகோலம்,பிரமாண்ட திருவுருவம்)
உற்சவர்: பெரும் புறக் கடல்
தாயார்: கண்ணமங்கை நாயகி
உற்சவர் தாயார்: அபிஷேகவல்லி
தல விருட்சம்: மகிழம்
தல தீர்த்தம்: தர்சண புஷ்கரணி தீர்த்தம்
பிரத்யட்சம்: வருணபகவான், ரோமச மகரிஷி, முப்பத்து முக்கோடி தேவர்கள்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் -14 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,”ஸப்த புண்ய க்ஷேத்ரம்’,”ஸப்தாம்ருத க்ஷேத்ரம்’ என்ற பெயர் பெற்றது. தாயார் சந்நிதியில் ஒரு மேன்கூடு போன்ற அமைப்புக்கு தினந்தோறும் பூஜை நடக்கிறது. இங்குள்ள அருமையான சிற்பங்களில் வைகுண்டநாதன் சிலையும் மிக அழகானவை.
தல வரலாறு : நாதமுனிகளின் சீடரான திருக்கண்ணமங்கையாண்டான் இவ்வூரில்தான் ஆனித்திருவோணத்தன்று அவதரித்து துயசி புஷ்பாதி ஸமர்ப்பணத் தொண்டு செய்தார். ஸ்ரீயின் மூன்று திருநாமங்களோடும் கூடிய மந்திரம் இந்த சேத்திரத்தில் ஸித்தியை சீக்கிரத்தில் கொடுக்கும் என்பது புராண வரலாறு. லட்சுமி தவம் செய்ததால் லட்சுமவனம் என்ற பெயர் உண்டு. சிவபெருமான் இத்தலத்தில் நான்கு உருவங்கள் எடுத்துக் கொண்டு நான்கு பக்கங்களையும் காத்து வருகிறார்.
முன்காலத்தில் இந்த இடம் ‘கிருஷ்ணாரண்யம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வனத்தில் வசித்த பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள், லட்சுமி தேவி. இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய அந்த தேவியை தரிசிக்க, தேவர்கள் அனைவரும் கூடினார்கள். ஐராவதம் என்னும் வெள்ளை யானை, தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து லட்சுமிக்கு அபிஷேகம் செய்தது. அதானாலேயே இங்குள்ள தாயார், ‘அபிஷேகவல்லி’ என்று அழைக்கப்படுகிறாள். பிருகு முனிவரோ, தன் மகளை ‘கிருஷ்ண மங்கை’ என்று அழைத்தார். இதுவே பிற்காலத்தில் ‘திருக்கண்ணமங்கை’ என்று இத்தலம் பெயர் பெறக்காரணம். ‘மகளை, பகவான் கிருஷ்ணருக்கே மணம் முடிக்க வேண்டும்’ என்று காத்திருந்தார் பிருகு முனிவர். அதன்படியே பக்தவத்சலன் என்ற திருப்பெயரோடு வந்த இறைவன், லட்சுமிதேவியை மணந்துகொண்டார்.
இங்கு இறைவனும், இறைவியும் மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். கிருஷ்ணருக்கும், லட்சுமிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், அதைக் காண தேவர்கள் பலரும் குவிந்தனர். மேலும் இங்குள்ள இறைவனின் கல்யாண கோலத்தை அனுதினமும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, தேவர்கள் அனைவரும், தேனீக்களாக உருவெடுத்து கூடுகட்டி, அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்வதாக ஐதீகம். இன்றும் தாயார் சன்னிதியின் வடக்கு பக்கம் உள்ள சாளரத்தின் மீது தேன் கூடு இருப்பதை காண முடியும்.
மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை. பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு “பெரும்புறக்கடல்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு “லட்சுமி வனம்’ என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் “கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்’ என்ற பெயரும் ஏற்பட்டது.
மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, “பத்தராவி’ என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி என்ற பெயர் ஏற்பட்டது.
நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.
ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமித் திருவிழா, இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா. சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது. இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை