சௌரிராஜ பெருமாள், திருக்கண்ணபுரம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து கோயில் வாசல் வரை பேருந்து செல்கிறது.
மூலவர் : நீலமேகப் பெருமாள், சௌரிராஜன்
உத்ஸவர் : சௌரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுரநாயகி, ஆண்டாள் பத்மினி
தீர்த்தம் : நித்ய புஷ்கரிணி
விமானம் : உத்பலாவதக் விமானம்
மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 1பாசுரம், ஆண்டாள் - 1 , குலசேகரப்பெருமாள் - 11 ,நம்மாழ்வார் - 11 , திருமங்கையாழ்வார் - 104
தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். இத்தலம் கிருஷ்ணாரண்யம் பஞ்ச கிருஷ்ண சேத்திரம் ஸப்த புண்ணிய சேத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. அபயஹஸ்தத்துக்குப் பதிலாக வரதஹஸ்தம் விளங்குகின்றது. ப்ரயோக சக்ரம் உபயநாச்சியாருக்கு அப்பால் இடதுபுறம் கிரீடத்துடன் ஆண்டாளும் வலதுபுறம் பெருமாள் மணந்துகொண்ட பத்மாவதியின் தாயார் என்ற செம்படவ அரசகுமாரியும் உள்ளனர்.
தலம் வனம் நதி கடல் நகரம் தீர்த்தம் விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள தலமாகும். இந்த அமைப்பில் உள்ள இடத்தில் அஷ்டாட்சர மந்திரம் சித்திக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் பெருமாள் திருவஷ்டாட்சர எழுத்துக்களின் மொத்தச் சொரூபமாக இருக்கின்றார். விபீடணன் பெருமாளிடம் நீ கிடந்த பேரழகைத் திருவரங்கத்திலே கண்டு மகிழந்தேன். நின் நடையழகைக் காணவேண்டும் என்று கேட்க கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென விபீடணனுக்கு நடையழகு இங்கு காட்டியதாக ஐதீகம். 108 திவ்ய தேசங்களில் "கீழை வீடு" என்று குறிக்கப்படுவது இத்தலம்தான். திருமங்கை ஆழ்வார் திருமந்திர உபதேசம் பெற்றது இங்குதான். கோயில் முன் உள்ள பெரிய அழகிய புஷ்கரிணி மண்டபத்தின் அருகில் உள்ளது. ஆஞ்சநேயர் சந்நிதியும் தசாவதார வண்ண சித்திரங்களும் விஷேசமாகும். இதிலிருந்து 'சௌரிராஜன்' என்று இப்பெருமாள் அழைக்கப்படுகிறார். ஸ்ரீமந்நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்த க்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இது ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹா மந்த்ரஸித்தி க்ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது. இங்கு ஊரே வைகுந்தமாக இருப்பதால் பரமபதவாசல் கிடையாது. எட்டெழுத்து மந்திரத்தின் எழுத்துக்களின் உருவமாக கோலம் தரும்பெருமாள் உறையும் தலம்.
இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி" என்ற சொல்லுக்கு "முடி" என்றும், "அழகு" என்றும் பொருள்கள் உண்டு. இக்கோவிலில் ப்ரயோக சக்ரம், உபநாச்சிமாருக்கு அப்பால், இடதுபுறம் கிரீடத்துடன் ஆண்டாளும், வலதுபுறம் பெருமாள் மணந்து கொண்ட பத்மாவதி தாயர் என்ற செம்பவாடா அரசகுமாரியும் உள்ளனர். உத்சவபெருமாள் கண்யகாதனம் வாங்க கையேந்திய நிலையில் சேவையளிகிறார். திருமங்கையாழ்வாற்கு திருமந்திர உபதேசம் செய்பட்ட தலம். விபீஷ்ண ஆழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் அருளியபடி அம்மாவாசை தினத்தன்று பகவான் நடைஅழகை சேவைசாதித்த தலம்.
தல வரலாறு : ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு, பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததை காப்பற்ற, பெருமாள் திருமுடியில் திருக்குழற்கற்றையை வளர்த்து கேசத்தை காட்டி அருளியதால் செளரிராஜன் என்ற பெயர் உண்டாயிற்று. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தாமுடைய பத்தினி சமைத்த பொங்கலை நடு இரவிற்கு பிறகு கோவிலுக்குல் செல்ல முடியாமல் மானசீகமாக பக்தியுடன் சமர்ப்பித்ததை பகவான் திருஉள்ளம் பற்றியதால், மூடிய கோவிலில் மணியோசை கேட்டு வெண்பொங்கல் வாசனை நிரம்பியதால் அது முதல் இரவில் தரும் பொங்கலுக்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர் ஏற்ப்பட்டது. இன்றளவும் வெண்ணெய் உருக்கி பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது வீசேசம்.
முனியதரையன் என்பவர் சோழ மன்னனது அபிமானம் பெற்று இருபது நாடுகளுக்கு தலைவராக மன்னனுக்கு கப்பம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்தார். அவர் சவுரிராஜப்பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். திருக்கண்ணபுரத்திலேயே வாழ்ந்து பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தார். அவருக்கு விரகாதிபோகம் என்ற காதற்கணிகை ஒருத்தி அவரிடம் பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தாள். ஒரு வருடம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும் கோவிலில் திருவாராதனத் துக்கும் அடியார்க்கும் அன்னம் வழங்குவதிலும் செலவிட்டார். இதுகேட்ட சோழ மன்னன் , தனக்குரிய பொருளை அவர் தமது கணிகைக்கு கொடுத்து விட்டார் என்று சிறையில் அடைத்தார். அந்த கணிகை, சவுரிராஜப் பெருமாளை வணங்கி 5 நாட்களுக்குள் தன் அன்பன் சிறையில் இருந்து மீளாவிடில் தீயில் பாய்ந்து உயிர்விடுவதாக சபதம் செய்தாள்.
ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் மன்னன் கனவில் தோன்றி, முனையதரையரை விடுவிக்குமாறு கூறினார். சிறையில் இருந்து விடுதலை பெற்ற முனையதரையர் திருக்கண்ண புரத்துக்கு சென்றார். தமது கணிகை தீயில் புகுந்தருவாயில் அவளை அணைத்து வாழ்த்தினார். அன்றிரவு அவள் சமைத்த பொங்கல் அவருக்கு அ-மு-தமாயிருந்தது. இத்தகைய அடிசில் பெருமானுக்கு உரியது என்று பேரார்வத்துடன் மானசீகமாக அதை நிவேதனம் செய்து பின்பு உண்டார். மறுநாள் காலையில் பெருமாள் திருமேனியில் பொங்கலுடன் நெய் வடிந்தொழுவதை கண்டு அர்ச்சகர்கள் திடுக்கிட்டனர். பின்பு நடந்த பெருமாளின் பொருளை போற்றினர். அன்று முதல் பெருமாள் நாள்தோறும் அர்த்தசாமத்தில் (இரவு 9 மணி) பொங்கல் வைத்து செய்ய கட்டளையை முனையதரையர் நிறுவினார்.
உற்சவமூர்த்தி எப்போதும் தலையில் சவுரி அணிந்திருக்கிறார். ஒருநாள் பெருமாளை சேவிக்க வந்த சோழ மன்னனுக்கு பிரசாதமாக கொடுக்க பூமாலை இல்லாமல் தவித்த அர்ச்சகர் தாம் சற்று முன்பு தேவதாசிக்கு அனுப்பியிருந்த புஷ்பத்தை கொண்டு வரச்செய்து அதனை மன்னனுக்கு அளித்தார். அதில் கருப்பான முடி இருக்க கண்ட மன்னன் அர்ச்சகரை கடிந்தான். அர்ச்சகரும் பெருமானுக்கு எப்போதும் கழற்கற்றை உண்டு. அதில் அணிவித்த மாலை இது என்றார். இதனால் கோபம் கொண்ட மன்னன் மறுநாள் காலை வரும்போது முடி இருப்பதை காட்ட வேண்டும் என்று கூறி சென்று விடுகிறார். அர்ச்சகரை சோழமன்னனது கடுந்தண்டனையில் இருந்து விடுவிக்க பெருமாள் கருத்த மயிர்கற்றையுடன் காட்சியளித்தார். உற்சவமூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்துக்கு மேல் சிறு தழும்பு இன்றும் காணலாம். முன்காலத்தில் அன்னியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர் மனம்புழுங்கி பெருமானே.. பொருவரை முன்போர் கையிலிருந்த பொன்னாழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ என்று கையில் இருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானின் நெற்றியில் பட்டது. அந்த தழும்பு இன்றும் காணலாம்.
இக்கோவிலுக்கு எதிரில் உள்ள நித்யபுஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல்புறம் தீர்த்தக்கரை ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பதால் இவரின் சக்தி அளவிட முடியாது. தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இவர் வரப்பிரசாதி என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
மாதந்தோறும் தமிழ் மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, ஹஸதம் இவற்றில் பஞ்சவர்வ புறப்பாடு பிரகாரத்தில் நிகழும். இந்த ஐந்து நாட்களிலே தான் பெரிய பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யக்கூடும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடு உண்டு. திவ்ய தேசங்களில் ஓன்றாக கருதப்படும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம் தான். இதில் புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக சனியினால் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர். திருக்கண்ணப்புரத்து சவுரிராஜப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். அதுமட்டுமின்றி ஞாயிறு அன்றும் பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். இந்த வைணவ தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை