கிருபாசமுத்திரப்பெருமாள், திருச்சிறுபுலியூர
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அறந்தாங்கி மாயவரம் ரயில் பாதையில் அமைந்துள்ளது. மாயவரத்திலிருந்து பஸ்ஸில் கொல்லுமாங்குடி எனற இடத்தை அடைந்து அங்கிருநது 3 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : அருட்மாக்கடல் அமுதன்
உற்சவர் : கிருபாசமுத்திரப் பெருமாள்
தாயார் : திருமாமகள் நாச்சியார்
உற்சவ தாயார் : தயாநாயகி
தீர்த்தம் : மானஸ புஷ்கரிணி, அனந்தஸரஸ்
தலவிருட்சம் : வில்வம்
விமானம் : நந்தவர்த்தன விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : புஜங்கசயனத்திலேயே மிகச் சிறிய திருவுருவம் இது. தெற்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். மூலவரின் சிறு வடிவைப் பார்க்கக் குறைப்பட்டுக்கொண்ட திருமங்கை ஆழ்வாரைத் தன் பேருருவைத் திருக்கண்ணமங்கையிலே காணும்படி பெருமாள் அவருக்கு அருளினார். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார். ஆதிசேஷன் கருடனிடமிருந்து அபயமளித்த தலம்.
தல வரலாறு : ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டு ஒன்றோடொன்று போரிட தொடங்கின. கருடனுடைய வீரத்தை கண்டு பயந்த ஆதிசேஷன் பல இடங்களில் ஓடித் திரிந்து கடைசியில் இத்தலத்தை அடைந்து புஷ்கரணியில் திருமாலைக் குறித்து தவம் செய்தது. ஆதிசேஷனுக்கு அபயம் தந்து தன்னுடைய திருவனையாகக் உண்டு செய்வித்தார். கருடன், ஆதிசேஷனை தேடி இங்கு வந்தபோது, திருமாலும் சயனமாக ஆதிசேஷன் மாறி இருப்பதை கண்டு ஒன்றும் செய்யாமல் விக்கித்து போனான். அப்போது ஆதிசேஷன், 'கருடா சௌக்கியமா!' என்று கேட்க, ' இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்கியம்' என்று கருடன் சொல்லிவிட்டு சென்றதாக வரலாறு.
சிதம்பரத்திலுள்ள நடராஜப் பெருமானிடம் வியாக்ரபாத முனிவர் தனக்கு மோட்சம் வேண்டும் என்று கேட்க நடராஜப் பெருமான், முனிவரை இந்த திருத்தலத்திற்கு சென்று திருமாலை நோக்கி தவம் செய்தால், ஸ்ரீ வைகுண்ட பதவி கிடைக்கும் என்று சொன்னார். வியாக்ரபாத முனிவரும் இங்கு வந்து தவம் செய்து மோட்ச நிலையை அடைந்தார். அதனால் இத்தலத்திற்கு சிறுபுலியூர் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. சூரியன், அனந்தன், துர்வாசர் மணவாள முனிவர் ஆகியோர் திருமாலை வழிபட்டு தரிசனம் பெற்றவர்கள்.
கோவில் அமைப்பு : அரிசிலாற்றின் கிளை நதிக்கரையில் வடபகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு மேற்காக 142 அடி அகலமும் வடக்கு தெற்காக 225 அடி நீளமும் கொண்டு தெற்கு நோக்கி 72 அடி உயரம் 5 நிலை இராஜகோபுரம் அதோடு இரண்டு பிரகாரங்களுடன் 25 அடி உயரம் கொண்ட மூன்று நிலை கோபுரத்துடன் அற்புதமாக காணப்படுகிறது. திரு நாபியில் பிரம்மன் திருவடிகளில் கன்வ முனிவர் புலிக்கால் முனிவர் அமர்ந்திருக்கிறார்கள். இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. அடுத்து உட்கோபுரமான சிறிய கோபுரம் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பெருமாள், விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்வக்சேனர் உள் திருச்சுற்றில் உள்ளார். மூலவர் சன்னதி முன் வலது புறம் பள்ளியறை உள்ளது. வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, யாகசாலை, திருமடைப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம் ஆகியவை உள்ளன.
தங்கும் வசதிகள் இங்கு ஏதுவும் இல்லை. எனவே மாயவரத்தில் தங்கி சேவிப்பது நல்லது.
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மாயவரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை