பத்ரிநாராயணர், திருமணிமாடக் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநாராயணப் பெருமாள் கோயில் என்று பிரசித்தம்.
மூலவர் : நாராயணன் , நந்தா விளக்குப் பெருமாள், பத்ரிநாராயணர்
உற்சவர் : அளத்தற்கரியான்
தாயார் : புண்டரீகவல்லி
தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி
தல விருட்சம் : பலா
விமானம் : ப்ரணவ விமானம்
ப்ரத்யக்ஷம் : இந்திரன் ஏகாதச ருத்ரர்கள்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 12 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மங்களசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 32வது திவ்யதேசம். அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளி யிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர். பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.
மூலவர் பத்ரிநாராயணர் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி அருள் புரிகிறார். அனைத்து நாட்களிலும் இவர் மீது சூரிய ஓளி படுகிறது. இதனால் சுவாமி எப்போதும் . அணையாத (நந்தா ) விளக்கு போல் பிரகாசிக்கிறார். இதன் மூலம் மக்களின் அறியாமையை அகற்றி அவர்களுக்கு ஒளியை அருளுகிறார். திருமங்கையாழ்வாரால் நந்தா விளக்கு என்று மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளார். இந்த திவ்யதேசத்தில் இவர்தான் பிரதான பெருமாள். பெரிய திருமேனி ஒருவராலும் தூண்டா விளக்காகத் திருமங்கையாழ்வார் இங்கே பெருமாளை விளக்குகிறார்.
தல வரலாறு : பார்வதியின் தந்தையாகிய தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு செல்ல வேண்டாம் என பார்வதியை தடுத்தார் சிவன். ஆனாலும் நியாயம் கேட்பதற்காக யாகத்திற்கு சென்றுவிட்டாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது சிவனது திருச்சடை முடி தரையில் பட்ட இடங்களில் எல்லாம் சிவ வடிவங்கள் தோன்றின. இவ்வாறு 11 சிவ வடிவங்கள் தோன்றி அனைவரும் தாண்டவம் ஆடினர்.
இதனால் உலக உயிர்கள் கலக்கமடைந்தன. அச்சம் கொண்ட மகரிஷிகள், தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர் பத்ரி நாராயணராக 11 வடிவங்கள் எடுத்து சிவன் முன்பு வந்தார். நாராயணரைக் கண்ட சிவன் தாண்டவத்தை நிறுத்தினார். பின் அவர் 11 சிவ வடிவங்களையும் ஒன்றாக ஐக்கியப்படுத்தினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என தலவரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு 11 பெருமாள் கோயில்களும், 11 சிவாலயங்களும் இருக்கிறது. 11 பெருமாள்களுக்கும் பத்ரி நாராயணரே பிரதானமானவராக இருக்கிறார். இவர் ஒருவரை தரிசனம் செய்தாலே அனைவரையும் தரிசனம் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார். இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
இங்கு ஒவ்வொரு வருடமும் தை மாதம் அமாவசைக்கு மறுநாள் கருட சேவை நடைபெறுகிறது. திருமங்கையாழ்வார் அனைத்து பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்வார். அமாவசை அன்று திருமங்கையாழ்வார் அதிகாலையில் திருநகரியில் இருந்து புறப்பட்டு திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபால க்ருஷ்ணன் திருமணிமாடக் கோயில், ஸ்ரீநாராயண பெருமாள் ஆகிய பெருமாள்களை காலையில் அந்த அந்த கோயில்களில் மங்களாசாசனம் செய்வார். மாலையில் திருவண்புருடோத்தமம், ஸ்ரீபுருஷோத்தம பெருமாள், திருவைகுந்த விண்ணகரம், ஸ்ரீவைகுந்தநாதன், திருத்தெற்றியம்பலம், ஸ்ரீரங்கநாதர், திரு அரிமேய விண்ணகரம், ஸ்ரீகுடமாடுகூத்தர் (ஸ்ரீசதுர்புஜ கோபாலன்) ஆகிய பெருமாள்களை அந்த அந்த கோயில்களில் மங்களாசாசனம் செய்வார். அனைத்து பெருமாள்களும் தங்கள் கோயில்களில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு நாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருள்வர். அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்து சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும். பின்பு திருவீதிகளில் அனைத்து பெருமாள்களும் திருவீதி உலா வந்து மறுநாள் காலை அனைத்து பெருமாள்களும் அவரவர் திவ்ய தேசங்களுக்கு திரும்புவர் . திருமங்கையாழ்வார் திருநகரிக்கு புறப்படுவார். திருத்தேவனார்த் தொகை, ஸ்ரீமாதவ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்த பின் திருநகரிக்கு சேருவார். பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது.
இந்த ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் 5 திவ்ய தேசங்கள். ஆக மொத்தம், பதினொன்று., பல மலர்கள் சேர்ந்த ஒரு மலர்க் கொத்தாக இந்த திவ்ய தேசங்கள் திகழ்கின்றன. ஒரே பகுதியில் உள்ள திவ்யதேசங்கள்தானென்றாலும், ஒன்றுக்கொன்று நெடிய தொலைவில்தான் அமைந்திருக்கின்றன.
1. திருக்காவளம்பாடி, 2. திரு அரிமேய விண்ணகரம், 3. திருவண்புருடோத்தமம், 4. திருச்செம்பொன்செய் கோயில், 5. திருமணிமாடக் கோயில், 6. திருவைகுந்த விண்ணகரம், 7. திருத்தேவனார்த் தொகை, 8. திருத்தெற்றியம்பலம், 9. திருமணிக்கூடம், 10. திருவெள்ளக்குளம், 11. திருப்பார்த்தன்பள்ளி.
பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இராமானுஜருக்குநாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர்நம்பி இங்கு வந்து சென்றுள்ளார்.
இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமணிமாடக் கோயில் திருத்தலம். திவ்ய தேச விழாக்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, வேறெந்த திவ்ய தேசத்திலும் காணக்கிடைக்காததுமான பதினொரு பெருமாள்கள் தரிசனம் ஒவ்வொரு வருடமும் இங்கே நிகழ்கிறது. ஆமாம், அத்தனைப் பெருமாள்களும் தத்தமது கருட வாகனமேறி இங்கு எழுந்தருளி, பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை அம்மாவாசைக்கு அடுத்த நாள் அந்த அதியற்புத உற்சவம் மேற்கொள்ளப்படுகிறது
இந்த முக்கியத்துவத்தை முன்னிருத்தி, முதலில் இந்த திவ்ய தேசப் பெருமாளை தரிசனம் செய்வோம். ராஜகோபுரத்தைக் கடந்து சற்றுத் தொலைவு நடந்து சென்றுதான் பெருமாளை நாம் சேவிக்க முடியும். ராஜகோபுரம் இந்த இடத்தில் நிலைகொண்டது, பின்னாளில்தான். அப்போதெல்லாம், உள்ளே தள்ளி இருந்திருக்கிறது என்றும், பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களும் ஒன்றாய் இங்கு எழுந்தருள வசதியாக இப்போதைய இடத்தில் ராஜகோபுரத்தை அமைத்ததாகவும் சொல்கிறார்கள். இடது பக்கம் துவாதசி கட்டிடம் காணப்படுகிறது. முந்தின நாள் ஏகாதசி விரதம் ஏற்று, மறுநாள் துவாதசியன்று பாரணை மேற்கொள்ளும் வழக்கத்தில் இங்கே பெரிய அளவில் அன்னதானம் நடைபெற்றிருக்கிறது.
நூற்றுக்கணக்கில் முந்தின நாள் ஏகாதசி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் மறுநாள் இங்கு துவாதசி பாரணை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இப்போது அந்த அன்னதானம் நடைபெறுவதில்லை; ஆனாலும் பழமை வழக்கத்தின் சாட்சியாக மட்டுமே இந்தக் கட்டிடம் நிற்கிறது. இப்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள், எப்போது அன்னதான கைங்கரியத்தை மேற்கொள்கிறார்களோ, அந்த நாட்களில் மட்டும், இந்த துவாதசி கட்டிடத்தில் அதை நிறைவேற்றுகிறார்கள்.
சிவனை சாந்தப்படுத்த பத்ரியில் இருக்கும் நாராயணரே நான்கு வேதங்களை குதிரையாக்கி, பிரம்மாவை தேரோட்டியாக கொண்டு இங்கு வந்தார். இதை உணர்த்தும் விதமாக இக்கோயில் தேர் அமைப்பிலேயே இருக்கிறது. கருவறை மேலுள்ள பிரணவ விமானம் "ஓம்' எனும் வடிவத்தில், தேரின் மேல் பகுதி போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் உள்ள கலசகும்பங்கள் ராஜகோபுரத்தை நோக்கி இருக்கின்றன. சுவாமியின் பீடத்திற்கு கீழே பிரம்மா இருக்கிறார்.சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது, தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. அருகில் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்தில் இருக்கும் உற்சவரை "நரநாராயணர்' எனவும், அமர்ந்த கோலத்தில் உள்ள உற்சவர் "அளத்தற்கரியான்' எனவும் அழைக்கின்றனர். ஒரே கருவறையில் மூன்று கோலங்களில் பெருமாள்கள் இருப்பது விசேஷம்.
நாராயணர் இத்தலத்திற்கு தன் வாகனமான கருடன் மீது வராமல் தேரில் ஏறி வந்தார். எனவே, கருடன் சுவாமியை சுமக்க வாய்ப்பு தரும்படி அவரது பாதம் பணிந்து வேண்டினார். இதனை உணர்த்தும் விதமாக சுவாமியின் திருப்பாதத்திற்கு நேராக இருக்க வேண்டிய கருடன் இங்கு கொடிமரத்திற்கு அருகில் அமர்ந்த கோலத்தில் சுவாமியின் பாதத்திற்கும் கீழே இருக்கிறார். இங்கு தை அமாவாசைக்கு மறுநாளில் கருடசேவை சிறப்பாக நடக்கிறது. இவ்விழாவில் 11 திவ்ய தேசங்களில் இருக்கும் அனைத்து சுவாமிகளும் இங்கு 11 கருடன்கள் மீது எழுந்தருளுகின்றனர். கருடனின் வேண்டுதலுக்காக பெருமாள் 11 மூர்த்திகளாக இருந்து கருடசேவை சாதிப்பதாக சொல்கிறார்கள்.
வடக்கே பத்ரிகாசிரமத்தில் "ஓம் நமோ நாராயணாய' எனும் திருமந்திரத்திற்கு விளக்கம் தந்த நாராயணனே இங்கு அருளுகிறார். இக்கோயில் மாடம் போன்ற அமைப்பில் இருப்பதால் "திருமணிமாடக்கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. தாயார் புண்டரீக வல்லி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருமங்கையாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். நாராயணர் சாந்தப்படுத்திய சிவன், "மதங்கீஸ்வரர் என்ற பெயரில் எதிரே தனிக்கோயிலில் சுவாமியை பார்த்தபடியும் இருக்கிறார்.
காலை 8.30 மணி முதல் பகல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை