வைகுண்டநாதர், திருவைகுந்த விண்ணகரம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருநாங்கூருக்கு வடக்குப் பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது. இதை வைகுந்தநாதர் கோயில் என்று அழைப்பர். சீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருநாங்கூரிலேயே உள்ள தலம்.
மூலவர் : வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன்
தாயார் : வைகுந்த வல்லி
உற்சவர் : வைகுந்த நாதன்
தீர்த்தம் : லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா
விமானம் : அனந்த ஸத்ய வர்த்தக விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : பகவான் வைகுந்தத்தில், வீற்றிருந்த கோலத்தோடு இருப்பது போல இங்கும் இருப்பதால் இந்த தலம் திருவைகுந்த விண்ணகரம் எனப் பெயர் பெற்றது. இங்கு மூலவர் தாமரைக்கண்ணுடைய பிரான் உபய நாச்சிமார்களும் வீற்றிருக்கின்றனர். கிழக்கே திருமுக மண்டலம். உபரிசரவசுவும், உத்தங்க மஹாரிஷி என்பாரும், இத்தலத்துப் பெருமானை வேண்டி மோட்சம் பெற்றனர் என்பது வரலாறு. பரமபதத்திற்குச் சமமான தலம். பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது.
தல வரலாறு : திரேதாயுகத்தில் இட்சுவாகு என்ற குலத்தில் அவதரித்த, சுவேதகேது என்ற ஓர் மன்னன் மிகுந்த திருமால் பக்தனாக விளங்கி வந்தான். நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும்அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். உலக நாடுகள் பலவற்றை ஆண்டு வந்தான். இட்சுவாகு மன்னனுக்கும், அவனது மனைவிக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்குசென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. சுவேதகேது அரசனானதால் தனது ஆட்சிக் கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய முடிவு செய்தான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள்.
நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால், அங்கு யாரை தரிசிக்க தவம் இருந்தார்களோ அந்த வைகுண்ட வாசனைக் காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்தபோது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள். வைகுண்டத்தில் விஷ்ணுவைத் தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு நாரதர், "நீங்கள் இருவரும் கடுமையாகத் தவம் இருந்தாலும், பூமியில் தான தர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை. எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக"பூமியில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி, முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்ட பெருமாளின் தரிசனம் கிடைக்கும்," என்றார்.
சுவேதகேதுவும், தமயந்தியும் ஐராவதேஸ்வரரை வழிபட்டு பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான் "நானும் பெருமாளின் தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். மூவரும் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்கு தவம் இருப்போம்" என்றார். இவர்களுடன் உதங்க முனிவரும் சேர்ந்து தவம் இருந்தார்.
நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஐராவதேஸ்வரர், பெருமாளிடம், "பெருமாளே! நீங்கள் காட்சி கொடுத்த இந்த இடம் இன்று முதல் வைகுண்ட விண்ணகரம் எனவும், உங்கள் திருநாமம் வைகுண்டநாதர் எனவும் அழைக்கப்பட வேண்டும்"' என வேண்டுகோள் விடுத்தார். அதன்படியே, வைகுண்டநாதன் என்ற திருநாமத்துடன் இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தப் பரமபத நாதன் புறப்பட்டு வர அவனைப் பின்பற்றிப் பத்துப் பெருமாள்களும் இவ்விடத்துக்கு (திருநாங்கூர்) வந்தனர். பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய சூரிகடகுக காட்சி கொடுக்கிறாரோ அதை போல் இங்கும் எழுந்தருளியுள்ளார். பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம், பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது. இப்பெருமானும் திருநாங்கூரில் தை அம்மாவசை மறுநாள் நடைபெறும் கருட சேவைக்கு எழுந்தருளுவார். இங்கே உண்மை மிகு நல்ல கலைகள், நிறை பொறைகள், வண்மை மிகு மறையவர்கள் மலிந்திருக்கிறார்கள். மறையவர்கள் சூழத் திருநாங்கூரில் இருக்கின்ற வைகுந்த விண்ணகரப் பெருமானை வணங்கு நெஞ்சே என ஆழ்வார் தம் பாசுரத்தில் தெரிவித்திருக்கிறார்.
காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு