தெய்வநாயகர், திருத்தேவனார் தொகை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருநாங்கூர்க் கீழ்ச்சாலை என்று வழங்கப்படும் இத்தலம் திருநாங்கூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மணியாற்றின் தென்கரையில் உள்ளது.
மூலவர் : தெய்வநாயகப்பெருமாள்
உற்சவர் : மாதவப்பெருமாள்
தாயார் : கடல் மகள் நாச்சியார்
தீர்த்தம்: சோபன, தேவசபா புஷ்கரிணி
விமானம் : சோபன விமானம்
ப்ரத்ய~ம் : வஸிஷ்டர்
மங்களாசாசனம்: 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 36 வது திவ்ய தேசம். மேற்கு பார்த்த பெருமாள் என்பதால் மிகவும் விசேஷம். கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது சிறப்பு. ஸ்ரீமந் நாராயணன் திருநாங்கூருக்கு வந்தபோது பிரம்மன் முதலிய தேவர்கள் அவன் அழகில் சொக்கி, அவனை சூழ்ந்து நிற்கின்றார்கள். மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திருமகளை, தேவனார் மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த்தொகை என பெயர் ஏற்பட்டது.
திருநாங்கூருக்கு எழுந்தருளியுள்ள 11 எம்பெருமான்களில் இவர் திருவிடவெந்தை எம்பெருமான் எனப் பெயர் பெற்றார். ஊற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப் பெருமாள் கோயில் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது. அத்தலத்து மூலவர் திருநாமம் 108 திவ்ய தேசத்தில் நடுநாட்டுத் திருப்பதியான திருவஹிந்திரபுரத்துக்கும், பாண்டி நாட்டுத்திருப்பதியான வானமாமலைக்கும் உண்டு. இதனால் இத்தலம் உற்சவரின் திருநாமத்திலேயே பெயர் பெறுகின்றது. தேன் சிந்தும் மலர்ப் பொழில் மட்டும் இங்கு இல்லை. அருட் தேன் சிந்தும் மாதவனும் இங்கு இருந்து அருளுகிறான் என்று பாடப்பட்டுள்ளது. இதை உணர்ந்து, ஆனாத பெருஞ்செல்வத்து அருமறையோர், அங்கு தங்கியதாகச் கூறுகிறார். அந்த மறையோர் தங்கியிருக்கும் இடத்தில் பெருமாளும் இருக்கினறான். அவன் விரும்பி இருக்கும் இடம் இதுவே எனக் கூறுகிறார்.
தல வரலாறு : துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், “இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்’, என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.
திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்து பெருமாளை ஒரு முறை தரிசித்து, தாயரையும் பிராத்தனை செய்தால் பலன் நிச்சயம். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
காலை 6.00 மணி முதல்11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும் மேலும், இக்கோயில் அர்ச்சகர் மேலும் பல கோயில்களில் கைங்கர்யம் செய்வதால், சேவிக்கும் நேரத்தை முன் கூட்டியே அமைத்துக்கொள்ள வேண்டும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை