விஜயராகவப் பெருமாள், திருப்புட்குழி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திலிருந்து மேற்கே 11 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலுசெட்டி சத்திரத்திலிருந்து நடக்கும் தொலைவில் தான் உள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டு கோயிலாகும்.
மூலவர் : விஜயராகவப் பெருமாள்
தாயார் : மரகதவல்லி
தல விருட்சம் : பாதிரி
தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்
விமானம் : விஜயகோடி விமானம் (வீரகோடி விமானம்)
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது. இங்கு மூலவர் ஜடாயு வேண்டுதலுக்கு இணங்கி பரமபதத்தில் இருக்கும் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். தாயார் மகிமையால் வறுத்த பயிறு முளைப்பதால் (மரகதவல்லி) என்று திருநாமம் ஏற்பட்டதாகப் புராண வரலாறு. ராமானுஜரின் குருவான யாதவப்ரகாசர் இங்குதான் சிஷ்யர்களுக்கு வேதாந்த பூர்வபங்களைக் கற்பித்தார்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று. தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர். இங்குள்ள தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு : ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.
காலை 7.00 மணி முதல்12.00 மணி வரை, மாலை மணி 4.00 முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
தங்கும் வசதி : உண்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு