வீரராகவர் திருக்கோயில் , திருஎவ்வுள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் அமைந்துள்ளது.. சென்னையில் இருந்து திருப்பதி பஸ்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது இத்தலம். ரயிலடியிலிருந்து கோயில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து பல வெளியூர் பஸ்களில் நேராக கோயில் வாசலுக்கே செல்ல முடியும். காரில் திருப்பதி செல்பவர்கள் வழியில் இந்த ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டுச் செல்வர்.
மூலவர் : எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
உற்சவர்:வைத்திய வீரராகவர்
தாயார் : கனகவல்லி (வசுமதி தேவி)
தீர்த்தம் : ஹ்ருத்தாபநாசினி புஷ்கரிணி
விமானம் : விஜயகோடி விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள், திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.
தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு மூலவர் புஜங்கசயனத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு வலது திருக்கையை சாலிஹோத்ர முனிவரின் தரைமீது வைத்தபடியும் நான்முகனுக்கு வேதங்களை உபதேசிக்கும் வண்ணமாக இடது திருக்கரத்தில் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். அமாவாசையன்று இந்த புஷ்கரிணியில் ஸ்நானம் செய்வது மிகவும் புண்யகரமானது. இது அஹோபிலமடம் ஜீயரின் மேற்பார்வையில் உள்ளது. திருமால் சாலிஹோத்ச மஹரிஷிக்கு ப்ரத்ய~மாகி, “உறைதற்குரிய உள் எவ்வுள்” என்று வினவியதால் இத்தலத்திற்கு திரு எவ்வுள் என்ற திருநாமம் உண்டாயிற்று. மதுகைடபர்களைக் கொன்று வேதியர்களையும் தாபஸர்களையும் ரச்சித்த ஸ்தலம். ஹ்ருத்தாபநாச புஷ்கரிணியில் தீர்த்தமாடி, வீரராகவனையும் விஜயகோடி விமானத்தையும் சேவிப்பதனால் எல்லா நோய்களும் அழியுமாதலால் பகவானுக்கு ‘வைத்ய வீரராகவன்’ என்ற திருநாமமும் உண்டு. ராமலிங்க அடிகளார் தன் தீராத வயிற்றுவலியை நீக்கிய இப்பெருமாள் பேரில் “போற்றி பஞ்சகம்” பாடியுள்ளார். அருகில் ஸ்ரீநிவாஸப் பெருமாள், ஸ்ரீவராஹஸ்வாமி, காக்கவூரில் ஆஞ்சநேயர், மற்றும் வடக்கு குளக்கரையில் தீர்த்தஸ்வரஸ்வாமி கோயில்கள் உள்ளன.
தல வரலாறு : சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். 1 வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார்.பிறகு படுத்துறங்க அந்த கிழவர் “”எவ்வுள்’ என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி “இவ்விடம் படுத்துக் கொள்ளவும்’ என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் “”வரம் கேள்’ என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.
பிரம்மோற்சவம், தைமாதம் 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். சித்திரைமாதம் 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். பவித்ர உற்சவம் 7 நாட்கள் திருவிழா, இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.
பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம் – அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300 .இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது. உருவத்தகடுகளை (வெள்ளி ,தங்கம்) செய்து போடுதல். தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல் , நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.
காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை மணி 4.00 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் காலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல், திருவள்ளூர்
தங்கும் வசதி : உண்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு