அஷ்டபுஜப்பெருமாள், அஷ்டபுயகரம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர் : ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன், அஷ்டபுஜப் பெருமாள்
தாயார் : அலர் மேல் மங்கை, பத்மாஸினி, புஷ்பவல்லி
தீர்த்தம் : கஜேந்திர புஸ்கரிணி
விமானம் : சக்ராக்ருதி விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள், பேயாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற கோலத்தில் எட்டுக் கரங்களுடன் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். அந்த எட்டு கைகளில் ஆயுதங்களுடன் வலதுபுறம் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு, இடது புறம் சங்கு, வில் கேடயம், கதை என அட்டபுயகரத்தோனாக விளங்குகிறார்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன் மகாசந்தனின் தவத்தை கலைக்க தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் யோகி அசையவில்லை. பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட்டமாக காடுகளில் திரியும் போது, சாளக்கிராமத்தில் நீராடியது. அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது. மிருகண்டு முனிவர் என்பவர் இதன் நிலை கண்டு வருந்தி காஞ்சிக்கு சென்று வரதராஜப்பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும் என்றார். அதன்படியே இந்த யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது. ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது. இவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14,000 மலர்களை பறித்து கொடுத்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது. ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலிருந்த குளத்திற்கு சென்று பூ பறித்தது. அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது. பயந்து போன யானை அஷ்டபுஜ பெருமாள் தன்னை காப்பாற்றும் படி "ஆதிமூலமே' என அபயக்குரல் கொடுத்தது. முன்பொரு முறை கஜேந்திரனை காப்பாற்றிய ஆதிமூலம் இந்த முறையும் கருட வாகனத்தில் ஏறி வந்து தனது சக்கரத்தினால் முதலையின் தலையை வெட்டி யானையை காப்பாற்றினார்.
உற்சவருக்கு நான்கு புஜங்களே உள்ளன. கரையும் வேலும் உண்டு. நரசிம்மனைக் கொல்ல வேண்டும் என்று வந்த சரபம், அஷ்டபுஜத்தானைக் கண்டு பயந்து, விஷ்ணுவை சரணம் அடைந்தது. பகவான் ஆக்ஞைப்படி யாகசாலைக்கு வாயு மூலையில் சரபேசன் என்ற பெயருடன் சிவன் யாகத்தை காப்பதாக ஐதீகம். ஒரு யானை, ஸீக்ருத விசேஷத்தினால் ஆண்டுபுஜக் குளத்தில் தாமரைப்பூ பறித்து எம்பெருமாளை ஆராதித்து வரும்பொழுது ஒரு நாள் யானையை குளத்தில் ஒரு முதலை பிடித்துக் கொள்ள, யானை பகவானை சரணடைய, பகவான் தம் ஸ{தர்சனத்தினால் அந்த முதலையைக் கொன்று யானையை ரட்சித்த ஸ்தலம். ஸ்ரீஸ்வாமி தேசிகனும் மணவாளமாமுனிகளும் மங்களாசாசனம் செய்த இடம்.
அஷ்டபுஜபெருமாள்: ஒரு சமயம் பிரம்மா பூமியில் தனக்கு விக்ரக வழிபாடு இல்லை என்பதற்காக சரஸ்வதியை விட்டுவிட்டுத் தனியாக பிரமாண்டமான யாகம் ஒன்றை இப்பகுதியில் நடத்தினார். இதனால் வருந்திய சரஸ்வதி யாகத்தை அழிக்க, சரபாஸ்வரன் போன்ற கொடிய அரக்கர்களை அனுப்பி வைத்தாள். தன்னை காக்கும்படி பிரம்மனும் பெருமாளை வேண்ட, பெருமாள் 8 திருக்கரங்களுடன் அஷ்டபுஜப் பெரு மாளாகத் தோன்றி, அரக்கர்களையும் பின் வந்த காளியையும் அழித்து யாகம் சிறப்பாக நடைபெறச் செய்தார். ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திருப்பதிகளில் திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் மங்களாசாஸனம் செய்த 44வது திருப்பதி இந்த அஷ்டபுயகரம். பெருமாள் இங்கு அஷ்டபுஜப் பெருமாளாக தோன்றுவதற்கு முன்பே ஆதிகேசவப்பெருமாளாக இத்தலத்தில் அருள்பாலித்து வந்திருக்கிறார் என்றும், மங்களாசாஸனத்திற்கு பின் தான் அஷ்டபுஜப்பெருமாள் எனப் பிரபலமானார் என்றும் கூறுவார்கள். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தாயாரைத் தனியாக பாடல் பாடி மங்களாசாஸனம் செய்துள்ளனர். இந்தப் பெருமாள், வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும் இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள் பாலிக்கிறார். சாதாரணமாகப் பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால் இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பு.
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தலத்துப் பெருமாள் அழித்து அவளைக் காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
தங்கும் வசதி : உண்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு