பத்ரி நாராயணன், திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் திருவதரியாஸ்ரமம் என்னும் பத்ரிநாத் ஹரித்துவாரிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். இமய மலையில் பேருந்து பயணம் செய்து பத்ரிநாத்தை அடையலாம். அலகாநந்தா நதிக்கரையில் பத்ரிநாராயணனின் கோயில் அமைந்திருக்கிறது. பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் ஸ்ரீபத்ரிநாராயணன் கோயில் உள்ளது.
மூலவர் : பத்ரி நாராயணன்
தாயார் : அரவிந்தவல்லி
தீர்த்தம் : தப்தகுண்டம் (வெந்நீர் ஊற்றாகும்)
விமானம் : தப்தகாஞ்சந விமானம்
தல விருட்சம் : பதரீ (இலந்தை)
மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவர் ஜடாமுடியோடு, சதுர் புஜனாய் சங்கும் சக்கரமும் ஏந்தி யோக முத்திரைகள் காட்டி பத்மாஸனத்தில் வீற்றிருந்து தவக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அரவிந்தவல்லிக்கு தனிக்கோயில் உள்ளது. பனி பிரதேசமாகையால் இத்தலம் தொடர்ந்து 6 மாத காலம் மூடியிருக்கும். மேலும், மழை இல்லாத காலமாகிய மே முதல் செப்டம்பர் வரை சேவிக்க செல்வது நல்லது. கடுங்குளிர் காரணமாக கம்பளி உடைகளை எடுத்து செல்வது அவசியம். இங்கு தங்கும் வசதிகளும் மற்றும் பல வசதிகளும் உண்டு. இங்கு குளிர்காலத்தில் கோயிலை பனி மூடுவதால் ஜோஷிமட்டில் உள்ள நரசிம்மர் கோவிலில் பத்ரிநாராயணனை வைத்து வழிபடுகின்றனர்.
பத்ரி நாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் இருக்கிறது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தின் படிகள் ஏறிச் சென்றால் கருடாழ்வார் நமக்கு காட்சி தர அவரை தரிசித்த ப்pன்பு பத்ரிநாராயணன் கோயிலுக்குள் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர் நரநாராயணர்கள், உத்தவர், குபேரன் ஆகியவர்கள் மிக அழகாக நின்றும், அமர்ந்தும் இருக்கின்றனர். இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளார். பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது திரையிடுவதில்லை, நேரில் காணலாம். திருவஷ்டா~ர மந்திரத்தின் வேதார தலம் இந்த பதி. இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும், இருந்து திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். மகாலெட்சுமிக்கு மிகவும் விருப்பமான இடம் பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே பெருமாள் அமர்ந்ததால் பத்ரிகா ஆஸ்ரமம் என்று ஆயிற்று. இங்கு பெருமாள் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய தலமாகும். இங்கு ஆதிசங்கரர், கண்டாக்ர்ணன் சந்நிதிகள் உள்ளன.
இமாலய மலைப்பிரதேசங்கள் அனைத்துமே இந்துக்களின் இதிகாசத்திலே குறிப்பிட்டபடி தியானம் செய்ய மிகவும் உகந்த இடங்கள் ஆகும். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக புனிதமான பத்ரிநாதன் சேத்திரமானது இந்தச் சாரலிலே அமைந்துள்ளது. ரிஷிகங்காவும் அலக்நந்தா நதிகளும் ஆராவாரமில்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டு இயற்கையான தென்றல் காற்றும் இயற்கை சூழலும் அமைதியுமுள்ள பிரதேசம். கடலுக்கு மேல் 3110 கி.மீ உயரத்தில் உள்ளது. 3050 லிருந்து 3060மீ உயரத்தில் கங்கோத்ரி, யமுனோத்திரி, கேதார்நாத் அமைந்த எழில் நிறைந்த சுற்றுப் புறச் சூழல் பாதிக்காத இடம் ஆகும். இலந்தை மரங்கள் அடங்கிய காடுகள் சுற்றி இருந்ததால் இதற்கு பத்ரிவனம் என்றும் பெயர்.
சூர்ய குண்டம், நாரதகுண்டம் என்ற சூடான நீரூற்றுக்களில் யாத்திரிகள் ஸ்நானம் செய்வது சாலச்சிறந்தது. அதிக உயரத்திலிருந்து விழும் வசுதரா நீர்வீழ்ச்சி பத்ரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோவில் பின்பக்கம் உள்ள பள்ளத்தாக்கிலிருநு;து நீலகண்டம் உச்சியைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக காணப்படும். நீலகண்டம் என்ற உச்சியின் அருகிலே நரநாராயணர்கள் காத்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். வெண்பனி மலையும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்படும். ஈசனை நேரில் தரிசித்தால் எப்படியிருக்குமோ அந்தமாதிரி ஒரு எண்ணம் பார்ப்பவர் மனதில் நிச்சயம் உண்டாகும். காலை வேளையில் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். மனதில் ஒரு புனிதத்தன்மை தோன்றும்.
சாதரணமாக ஏப்ரல் கடைசியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் கோவிலானது பொதுமக்கள் தரிசனத்திற்குத் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக கோவில் திறக்கும் நாளன்று அகண்ற ஜோதி தரிசன நாளாக இருக்கும். இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, அதுபோலவே இக்கோயிலை மூடுவதற்கும் அதாவது பனிக்காலம் ஆரம்பிக்கும் முன்னால் இதே முறை பின்பற்றப்படுகிறது. கோவில் மூடும் நாள் கூட நவம்பர் மாதம் 2 வது வாரமாகவே இருக்கும். கோவிலை மூடுவதற்கான சம்பிரதாய சடங்குகளை பூசாரி தான் செய்வார். பின்பு மற்ற ஊழியர்களுடன் பத்ரிநாத்திலிருந்து இறங்கி ஜோஷிமட்டிற்குச் சென்று பனிக்காலம் முழுவதும் அங்கேயே இருப்பார். இது தலைமுறை தலைமுறையாக செயலாற்றப்பட்டு வருகிறது.
இமய மலை யாத்திரை செல்வதற்கு முன்னாட்களில் மிகவும் கடினமாக இருந்தது. பல மிருகங்களின் நடமாட்டம் யாத்திரிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. இருப்பினும் அவைகளை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்து பத்ரிநாதத்திற்கு வந்து கொண்டுதான் இருந்தார்கள். இக்கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதற்கு சரித்திர பூர்வமாக எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால் சில வேதங்களில் பத்ரிநாதனைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. இக்கோயில் அலக்நந்தா நதியின் கரையில் நாராயண பர்வதத்தின் மடியில் அமைந்திருக்கிறது. இதற்குப் பக்கத்தில் “தப்த குண்டம்” எனப்படும் ஒரு வென்னீருற்று இருக்கிறது. இந்த கோவிலானது அசோக சக்கரவர்த்தி காலத்தில் பௌத்தர்களால் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஸ்கந்த புராணத்தின்படி பத்ரிநாதர் விக்ரகமானது ஆதி சங்கரரால் நாரதகுண்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டு மறுபடியும் 8-வது நூற்றாண்டிலே மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பத்ரிநாதரின் விக்ரஹமானது கருப்பு நிற சாளக்கிராமத்தில் பத்மாசனத்தில் வீற்றிருப்பது போல அமைந்துள்ளது.
இந்த பத்ரிநாதரை வழிபடும் பக்தர்கள் இந்த இறைவனை பிரம்மா, சிவன், ஹனுமன், காளி என எந்த வடிவில் மனக்கண்ணில் காண்கிறார்களோ அதே உருவிலே அவர்களுக்கு காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இக்கோயிலை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். ஒன்று பத்ரிநாதர் குடிகொண்டுள்ள மூலஸ்தானம் கர்ப்பக்கிரகம் பொன் தகடுகளால் வேயப்பட்ட மேல் கூரையோடு சேர்ந்தது. இரண்டாவது ‘தரிசன மண்டபம்’ இங்கே தான் பூஜை மற்றும் இதர சடங்குகள் நடைபெறுகின்றன. ஆனால் இம்மண்டபம் மகிச் சிறியதாகையால் ஒரு சிலரே இருக்க முடியும். மூன்றாவது ‘சபா மண்டபம்’ என்பது இங்கு தான் காலையில் 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். மங்கல மணியோசையுடன் கூடிய வேதகோஷம், கோயிலை சொர்கத்திற்கு இணையாக மாற்றுகிறது. பக்தர்கள் ‘தப்த குண்ட’த்தில் நீராடி பின் கோவில் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். காலையில் பூஜைகள் மஹாபிஷேகம், கீதாபாதம் பகவத்பாதம் என்றும் மாலைப் பூஜைகள் கீதாகோவிந்தம், ஆரத்தி என்றும் சொல்லப்படுகின்றன.
பத்ரிநாதனை, விசால் பத்ரி, யோகத்யான்பத்ரி, பவிஷ்யபத்ரி, ப்ரிதபத்ரி, ஆதிபத்ரி என்ற பெயர்களில் ஐந்து இடங்களில் தரிசிக்கின்றனர்.
1. விஷால்பத்ரி : பத்ரிநாதருடைய பிரதான ஸ்தலமான இது “பத்ரிவிஷால்” எனப்படும். இத்தலத்தில் கோயில் பூஜையின் போது “ஜெய் பத்ரி விஷால் கி” என்று கோஷமிடுவார்கள்.
2. யோகத்யான் பத்ரி : புராணகாலத்தில் பாண்டு மகாராஜா, பாண்டுகேஷ்வரை குறித்து இங்கு தியானம் செய்தார். அது முதல் இந்த இடம் “யோகத்யான் பத்ரி” என்று அழைக்கப்படுகிறது. இது பத்ரிநாத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், ஜோஷிமட்டிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் உள்ளது,
3. பவிஷ்ய பத்ரி : 2744 மீட்டர் உயரத்திலும் ஜோஷிமட்டிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் உள்ள பவிஷ்ய பத்ரி ஒரு சிறிய ஊராகும்.
4. ப்ரித பத்ரி : ஜோஷிமட்டிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் உள்ள ப்ரித பத்ரியில் “அனிமத்” என்ற இடத்தில் வீற்றிருக்கும் பத்ரிநாதனை ஆதி குரு சங்கராச்சார்யார் வழிபட்டு வந்திருக்கிறார். இது “பிப்பல் கோட்” போகும் வழியில் உள்ளது,
5. ஆதி பத்ரி : குப்தர்கள் கால கோவில் பல ஆதிபத்ரியில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றுள் மிக பிரசித்தி பெற்ற நாராயணன் கோயில் மக்களை கவர்ந்துள்ளது, இங்குள்ள நாராயணனின் உருவம் கருங்கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதிபத்ரி கர்ண பிரயாகையிலிருந்து 16 கி.மீ தூரத்தில் “ராணி தேத்” பாதையில் அமைந்துள்ளது. உண்மையான பக்தி சிரத்தையோடு மனமாரச் செல்லும் யாத்திரிகளுக்கு நிச்சயம் முக்தி கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மனத்திடமும், உறுதியும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் எல்லாப்பாவங்களும் நீங்கும். இந்த நம்பிக்கையும், இன்பமும் யாத்திரை முடிந்த பின் தான் கிடைக்கும் என்று உணர வேண்டும்.
பத்ரி என்றால் இலந்தை என்று பெருள் ரிஷிகேஷத்தில் ஆந்திரா ஆஸ்ரமம் உள்ளது. இங்கு தங்கலாம். நல்ல தமிழ் பேசுபவர்கள் உள்ளார்கள், மேலும், தென்னிந்திய உணவும் கிடைக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு