ஸ்ரீமூர்த்தி, திருச்சாளக்ராமம் (முக்திநாத்)
திருத்தல இருப்பிடம் : நேபாள நாட்டில் காட்மாண்டு என்னும் நகருக்கு வடமேற்கு திசையில் 250 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். கண்டகி நதிக்கரையில் அமைந்திருக்கும் திவ்ய தேசம். ராக்ஸால் பாட்னா (ஜோதிர்லிங்கம்) வழியாக காட்மண்டு சென்று பின் சாளக்கிராமம் அடையலாம். போக்ராவிலிருந்து 1 மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் செல்லலாம்.
மூலவர் : ஸ்ரீமூர்த்தி
தாயார் : ஸ்ரீதேவி நாச்சியார்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம், கண்டகி நதி
விமானம் : ககன விமானம்
மங்களாசாசனம் : பெரியாழ்வார் 2 – பாசுரங்கள், திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார். இந்த தலம் இருக்குமிடத்தைப் பற்றி மாறுபாடான கருத்துகள் உள்ளன. எனினும், நேபாள தலைநகரமான காட்மண்டு நகரிலிருந்து 272 கி.மீ தொலைவிலுள்ள முக்திநாராயண (முக்திநாத்) சேத்திரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் சுமார் 600 அடி உயரத்தில் இக்கோயில் உள்ளது. சாளக்ராமம் என்பது வேறு இல்லை. முக்தி நாராயண சேத்ரமேதான், சாளக்ராமம் என்று கூறுவோரும் உண்டு. கண்டகீ நதிக்கரையில் காட்மண்டுவிலிருந்து சுமார் 104 கி.மீ தூரத்தில் உள்ள “தாமோதரகுண்ட” என்னும் இடம்தான் சாளக்ராமம் என்றும் கூறுகிறார்கள்.
நேபாளம் என்பது தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே ஆகும். ஹரிபர்வதம் என்று ஒர் மலை இங்கு இமயத்தின் அடிவாத்தை ஒட்டினால் போல் உள்ளது. இங்கு சக்ர தீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகிறது. இந்தப் பகுதியே சாளக்கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள எல்லா கற்களிலும் (குளிர் காற்று இலைகளில்லாமல் அமைந்துள்ள சைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணிய காலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்கு சாளக்கிராம வடிவத்தில் மூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீராமநுஜர் மங்களாசாஸனம் செய்த இடம். ஆனால் எம்பெருமானின் புனிதமுள்ள சாளக்கிராம மூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதனை மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனை செய்யலாம்.
இமயமலையின் தவளகிரி என்கிற சிகரமான ஸப்த கண்டகியிலிருந்து கண்டகி நதி உற்பத்தியாகிறது. திரிவேணி காட் என்கிற சமபூமியில் (இமயமலையில்) பிரவேசிக்கிறது. இந்த இடம் சாளக்கிராமம் என்ற க்ஷேத்ரத்திற்கு வெகு தொலைவில் இல்லை. இங்கு பல ரிஷி முனிவர்கள் ஆசிரமம் அமைத்து வசித்துவந்தார்கள் என்று கூறப்படுகிறது. முக்தி நாராயணனின் கோயில் சாளக்கிராமத்திற்கு தெற்கில் உள்ளது. ஆதலால் அந்த நதிக்கு “சாளக்கிராமி” என்ற பெயரும் உண்டு. கண்டகி அல்லது கண்டகாவதி என்பது “கண்டக்“என்று அங்கு பேசப்படும் நேபாளி மொழியில் சொல்லப்படுகிறது. இந்த நதியின் “ஹிரண்யவதி” (ஸ்வர்ணமயம்) என்ற பெயருக்கு, கண்டகி நதிப்படுகையில் கிடைக்கும், ஸ்வர்ண ரேகை உள்ள சாளக்கிராம சிலைகள் காரணமாக இருக்கலாம். இவைகளை விஷ்ணு சொரூபமாகப் பூஜை செய்கிறார்கள்.
நேபாள மக்கள் இதை “கண்டஸ்தானம்” என்கிறார்கள். இரண்டு மலைக்குன்றுகளின் பள்ளத்தாக்கிலிருந்து உற்பத்தியாவதால் இதை கண்டகி என்று வழங்குகிறார்கள். இதை விஷ்ணுவின் கோயில் என்றும் கருதுகிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ளபடி இரு மலைக்குன்றுகளின் மத்தியிலிருந்து (சுமார் 15,000அடி உயரம்) உற்பத்தியாகும் கண்டகி நதியின் உற்பத்தி ஸ்தானத்தில், இலட்சுமிநாராயணன் சிலை இருக்குமென்றும், இரு குன்றுகளையும் முறையே “இலட்சுமி” என்றும் “நாராயணன்” என்றும் கருதுகிறார்கள். இந்த இரண்டு குன்றுகளும் தாது வர்க்கங்களுடன் கடினமானவையாயும், அவைகளின் கற்கள் மிகவும் பளபளப்பு உள்ளதாகவும் இருக்கும். எப்பொழுதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு இருப்பதால் அதன் வடிவைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள கருப்பு நிறமுள்ள கற்கள் கூழாங்கல் மாதிரி இருக்கின்றன. பனிக்கட்டிகளாலும், மழையினாலும், உறையப்பட்டு, பின் கண்டகி நதி பிரவாகத்தின் வழியாக வெளிவருகின்றன.
இந்த சாளக்கிராம க்ஷேத்ரத்தில் விசுவாமித்ரரின் புத்திரன் “சாளங்காயனர்” என்ற ரிஷி கண்டகி நதிக்கரையில், விசாலமாக ஓங்கி வளர்ந்த ஒரு சாலமரத்தடியில் அமர்ந்து விஷ்ணுவைக் குறித்து தவம் புரிந்தார் என்றும், அங்கு பகவான் மஹாவிஷ்ணு அவருக்கு தரிசனம் அளித்து அனுக்கிரகித்த அந்த இடமும், அதைச் சார்ந்த மலைக்குன்றுகளும், புனிதமானது என்றும், அங்கு அவர் நித்யவாசம் செய்வதாகவும் கூறப்படுகிறது. அது முதல் அந்த பிரதேசம் “சாளக்கிராம” சேத்திரமென்றும், அந்த மலைச் சாரல் சாளக்கிராம கிரி(மலை) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள கண்டகி நதியும் புனிதமாக கருதப்படுகிறது(வராஹ புராணம்). அங்கு சாலமரங்கள் அடர்ந்திருந்ததால், சாளக்கிராமம் என்ற பெயரும் ஏற்பட்டது.
சாளக்கிராம திவ்யதேசம் நேபாள ராஜ்யத்தின் தலைநகரம் காட்மாண்டு நகரிலிருந்து 272கி.மீ. தொலைவில் இமாலய மலைத் தொடரின் அன்னபூர்ணாமலைத் தொடருக்கு அப்பால் தௌளத்கிரியில் சிகரத்தில் உள்ளது. இந்த இடம் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத கடுங்குளிர் பிரதேசமாகும். இங்கு செல்லும் யாத்ரீகர்களின் வசதிக்காக, இந்த உயர்ந்த மலைப்பிரதேசத்தில் இந் நாட்களில் சிறிய அளவில், பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாளக்கிராம யாத்திரையின் கடைசி கட்டத்தில் பாத யாத்திரையாகவோ அல்லது குதிரை சவாரி மூலமாகவோ, பயணிகள் செல்ல வேண்டி இருக்கிறது. சாளக்கிராமம் முக்தி நாத் முக்தி நாராயணன் இரண்டும் ஒரே க்ஷேத்ரமென்று கருதப்படுகிறது.
பௌத்தர்கள் இதை திபேத் மொழியில் “மோட்சமளிக்கும் பள்ளத் தாக்கு” என்று அழைக்கிறார்கள். சாளக்கிராமம் (முக்திநாத்) யாத்திரை செல்ல அனுகூலமான சமயம். ஏப்ரல் 10தேதிக்கு மேல் மே மாதம் மூன்றாம் வாரம்வரை. மேலும் அக்டோபர் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை. நவம்பர் முதல் இரண்டாவது வாரத்திலிருந்து மார்ச் மாதம் வரை இங்கு கடும் பனிமழை, மேலும் கடுங்குளிர் இருக்கும் ஆதலால் நம்மால் யாத்திரை செய்ய இயலாது.
காலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை, மாலை 6மணிக்கு நீராஜனம் (ஆரத்தி) சேவிக்கலாம். இங்கு நன்கு குனிந்து வணங்கி பெருமாள் திருவடிகளை நெற்றியில் ஒத்திக் கொள்ளலாம். இத்தலத்தில் பெருமாள் தீர்த்த வடிவில் அமைந்திருக்கிறார். போகும் வழியில் எங்கும் தங்குமிடமோ உணவு வசதிகளோ கிடையாது. மலையேறுபவர்கள் சொந்த வசதிகளுடன் கூட்டமாகச் செல்ல வேண்டும்.
அருகிலுள்ள விமானதளம் : காட்மாண்டு
அருகிலுள்ள ரயில் நிலையம் : காட்மாண்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை