கிருஷ்ணர், திருத்வாரகை (துவாரபதி)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள குஜராத் என்னும் மாநிலத்தில் ஆமதாபாத்திலிருந்து துவாரகைக்கு பஸ்கள் செல்கின்றன. துவாரகா ரயில் நிலையத்திலிருந்து 4 கி..மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
மூலவர் : கல்யாண நாராயணன், துவாரகாதீசன்
தாயார் : கல்யாண நாச்சியார் (லட்சுமிஸ்ரீ), ருக்மணி, அஷ்டமகிஷ்கள்
தீர்த்தம் : கோமதி நதி, சமுத்திர சங்கமம்
விமானம் : ஹேமகூட விமானம்
மங்களாசாசனம்: பெரியாழ்வார் - 5 பாசுரங்கள்
ஆண்டாள் - 4 பாசுரங்கள்
திருமங்கையாழ்வார் - 2 பாசுரங்கள்
திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
நம்மாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : முக்தி தரும் தலங்களில் இதுவும் ஒன்று. கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்கட்கு இங்கிருந்து கொண்டு மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இத்தலம் உள்ளது. மூலவர் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இந்தப் பெருமாளின் சந்நிதிக்கு எதிராக பெருமாளைப் பார்த்தபடி, தேவகித்தாயின் சந்நிதி உள்ளது. கோயிலுக்கு 4 கி.மீ. தள்ளி ருக்மணி தாயாருக்கு சந்நிதி உள்ளது.
இங்கு கடலுக்குள் தற்போது ஒரு துவாரகை உள்ளது. இதனைத் தீவு துவாரகை என்பர். பேட்துவாரகா என்றும் மக்கள் அழைப்பர். விசைப்படகு மூலம் இத்தலத்தை அடையலாம். இதைக் கிருஷ்ணனின் மாளிகை என்று கூறுகின்றனர். இவருக்கும் துவாரகநாத்ஜி என்றே பெயர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தையைப் போலவும், ராஜாவைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. இப்பெருமாளின் நெஞ்சில் இலட்சுமி சேவை செய்கிறாள். இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். மேலும், கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என்று மொத்தம் 5 சந்நிதிகள் உள்ளன.
வசதிகள் எல்லாம் உள்ள இடமாகும். இங்கிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேச்வர் உள்ளது. மேலும். விராவல் ஸ்டேஷனில் இறங்கி ப்ரபாஸ தீர்த்தம், சலவைக்கல் சிற்பங்களால் அழகு பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த சோமநாதர் ஆலயம், பாலகாவில் கிருஷ்ணர் கோயில், பஞ்சஸ்ரோதா ஹிரண்யா ஸமுத்திர சங்கம ஸ்நான கட்டம் ஆகியவை உள்ளன. கிருஷ்ணர் வைகுண்டம் போவதற்கு முன் சேவை சாதித்த அரச மரத்தடி சயனத் திருக்கோலத்தை பாலகா என்ற இடத்தில் காணலாம்.
கிருஷ்ணனின் மோட்சிபுரிகளான ஏழு நகரங்களில் துவாரகையானது. கிருஷ்ணர் அமைந்து, அலங்கரித்து, அரசோச்சிய அரண்மனை ஆலயம். தனது பன்னிரண்டாம் பிராயத்திலேயே கண்ணன், மாமன் கம்சனை வதம் செய்தான். அதனால் மாறாக் கோபம் கொண்ட கம்சனின் மாமனாரான ஜராசந்தன் மதுராவை ஆண்ட கிருஷ்ணனின் மீது படையெடுத்து ஒவ்வொரு முறையும் தோற்றுப் புறமுதுகிட்டான். ஆயினும் யாதவக் குலத் தோன்றல் கண்ணனால் ஜராசந்தனைக் கொல்வதற்கு முடியவில்லை, அதற்கு ஜராசந்தன் வாங்கி வந்திருந்த வரமே காரணம். ஆயினும் ஒவ்வொரு போரிலும் ஆயிரக்கணக்கான யாதவர்கள் அமர்க்களத்தில் அமரரானார்கள். பதினேழாவது முறையும் ஜராசந்தன் படையெடுத்து வந்தான். தனக்குத்தான் வெற்றி என்று தாமோதரன் அறிந்திருந்தாலும், அடுத்தடுத்து யாதவர்களைப் பலிகொடுக்க அவன் உள்ளம் ஒப்பவில்லை. உலகம் தன்னைப் புறமுதுகிட்ட புருஷோத்தமன் என எள்ளி நகையாடினாலும் பரவாயில்லை என்று தீர்மானித்து, யாதவர்களின் நலவாழ்வு கருதி கண்ணன் போரிடாமல் புறமுதுகு காட்டி ஓடி வந்தான்.
யாதவ மக்களைக் காத்து நல்லாட்சி புரிய நல்லதொரு இடத்தை நாளும் தேடினான். கண்ணனின் வாகனமாக கருடனும் அகிலமெங்கும் அலைந்து முப்புறமும் கடல் சூழ்ந்த குசஸ்தலையே குவலயநாதன் கோலோச்சத் தக்கதொரு புனிதத்தலம் என்றொரு தகவலை தாமோதரனிடம் தெரிவித்தது. குசஸ்தலையானது பலராமனுடைய மாமனாரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அவர் கிருஷ்ணனிடம் குசஸ்தலையின் வாகானதோர் இடத்தில் அரண்மனை அமைத்து அரசோச்சுமாறு அகமகிழ்வுடன் கூறினார்.
கண்ணன் கடற்கரை ஓரமாக ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தான். அங்கே அரண்மனை எழுந்தது. அதுவே இன்று ஆலிலை கண்ணனின் ஆலயமானது. ஆலயத்துள் நுழையும் நுழைவாயிலுக்குச் சொர்க்கத் துவாரம் என்று பெயர். இதனை ஒட்டி இடதுபுறத்தில் சத்திய நாராயணர், பிரத்யுமனன், அநிருத்தர் ஆகியோருக்கு அடுத்தடுத்து சந்நிதிகள். அவர்களை வணங்கி நடந்தால் துவாரகைநாதனின் நெடிந்துயர்ந்த கோபுரம் தரிசனம் ஆகிறது. நுற்று ஐம்பது அடி உயரக் கோபுரத்தின் உச்சியில் பட்டுத்துணிப் பதாகை படபடத்துப் பறக்கிறது.
கண்ணனின் கருவறைக்கு முன்னால் குவிந்த விதானத்துடன் கூடிய பிரம்மாண்ட மண்டபம் உள்ளது. தீப முத்துக்களின் திவ்ய ஒலியில் மிகவும் அழகாக கண்ணன் காட்சி தருகிறார். சங்கும், சக்கரமும், கதையும் ஏந்தி அங்கமெல்லாம் அழகிய ஆபரணங்கள் அணிந்து தலையில் தலைப்பாகை தரித்து அதில் மயிற்பீலி துலங்க, கண்களில் கருணை பொங்க காட்சி தருகிறார். கண்ணன் காலையில் கண்விழித்தவுடன் அன்னையைத் தரிசித்து வணங்குவது வழக்கம். அதனாலேயே தேவகியின் சந்நிதி கண்ணனின் சந்நிதி எதிரே அமைந்துள்ளது. வெள்ளைச் சேலை தரித்த தாய் தேவகி இடது கரத்தில் அட்சய பாத்திரம் ஏந்தி, வலது கையால் அபயம் அளிக்கும் கோலத்துடன் எழுந்தருளியிருக்கிறான்.
கன்னனின் சந்நதிக்கு இடது புறத்தில் பலராமருக்கான தனிக்கோயில் உள்ளது. கருவறையில் பலராமர், பலதேவரும் தலைப்பாகையும், அதில் அலங்காரமாக செருகப்பட்ட மயிலிறகுமாகத் தரிசனம் தருகிறார். அவருக்கு நேர் எதிரே இடது புறத்தில் கருடர். வலதுபுறம் கணேசன் சந்நிதியும் உள்ளன. கண்ணனின் சந்நிதிக்குப் பின்னால் அமைந்திருக்கும் அலங்கார மண்டபம் அவரது அரசியரின் அந்தப்புரம். மையத்தில் முற்றம் கொண்ட நீளமான கூடம். அதன் இடதுபுறம் அமைந்திருக்கும் வரிசையான சந்நிதிகளில் முதல் சந்நிதியை அலங்கரிப்பது ஜாம்புவந்தி. கண்ணனின் இல்லக்கிழத்திகளில் ஒருத்தி. அடுத்த சந்நதியை கண்ணனின் அன்புக் காதலியான ராதிகா அலங்கரிக்கிறாள். ஒவ்வொரு காலையிலும் ஏழு மணிக்கு கோபிகை ராதாவிடம் இருந்து காதலனுக்கு இனிப்பான தயிர் எடுத்துச் செல்லப்படுகிறது.
கூடத்தின் வலதுபுறம் உற்சவர் கிருஷ்ணர். அடுத்தடுத்த சந்நிதிகளில் ல~;மி, சத்தியபாமா, வெண்பளிங்கு வித்தகி சரஸ்வதி. அந்தப்புர மாiளிகை ஒட்டி அதன் பக்கவாட்டில் அமைந்துள்ள படிகள் ஆலயத்தின் மற்றொரு வாயிலான மோட்சத் துவாரத்தை நோக்கிக் கீழிறங்குகின்றன.மோட்சத் துவாரத்துக்கு எதிரே கோமதி நதிக்கரை. கோமதி தீர்த்தத்தின் நீர் கடலோடு சங்கமமாகும் ஆவலுடன் விரைகிறது. நதி கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தில் சமுத்திர நாயணர் கோயில் அமைந்துள்ளது. சமுத்திர நாராயணர் துவாரகை நாதருக்குக் காவலாக நிற்கிறார். அடுத்துப் பரந்து விரிந்திருக்கும் அலை கடல்.
கோமதி தீர்த்தப் படித்துறைகளை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் பெண்கள் அந்தி நேரத்தில் பஜனைப் பாடல்கள் பாடுகிறார்கள். துவாரகை கோமதியில் நீராடி, கிருஷ்ண தரிசனம் செய்பவருக்கு சொர்க்க லோகத்தில் ஓர் இடம் உறுதி செய்யப்பட்டுவிடுவது மட்டுமின்றி, அவரது முன் ஏழு தலைமுறையினரும் மோட்சம் அடைகிறார்கள்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதலம் இரவு 9.00 மணி வரை சேவிக்கலாம்.
அருகிலுள்ள விமானதளம் : அகமதாபாத்
அருகிலுள்ள ரயில் நிலையம் : துவாரகா
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு