ஸ்ரீ க்ஷீராப்தி நாதன், திருப்பாற்கடல்
திருத்தல இருப்பிடம்: வங்காளவிரிகுடா கடலைத் திருப்பாற்கடலாகக் கொண்டு சேவிக்கலாம். இந்த மானிட உடலோடு போக முடியாத முதல் தலம் இது. விடுதலை பெற்ற ஆன்மாக்கள் விரும்பிச் செல்லும் தலம் இது.
மூலவர் : ராப்தி நாதன் (வயூக நிலை),
தாயார் : ஸ்ரீபூதேவி, கடல்மகள் நாச்சியார்.
தீர்த்தம் : அம்ருத தீர்த்தம்
விமானம் : அஷ்டாங்க விமானம்
மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 5 பாசுரங்கள், ஆண்டாள் - 3 பாசுரங்கள், குலசேகராழ்வார் - 2
பாசுரங்கள் : திருமழிசையாழ்வார் - 13 பாசுரங்கள்
தொண்டரடிபொடியாழ்வார் - 1 பாசுரம்
திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பொய்கையாழ்வார் - 1 பாசுரம்
பூதத்தாழ்வார் - 2 பாசுரங்கள்
பேயாழ்வார் - 4 பாசுரங்கள்
நம்மாழ்வார் - 9 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவர் ஆதிசேஷன் மீது சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இது பிரம்மனின் அவதார தலம் ஆகும். ஸ்ரீவைணவச் செயல்கள் செய்து இவ்வுடல் விட்ட பின்பு இறைவனின் திருவடி எய்தும் போது பக்தன் ஒருவனைப் பெருமாள் திருப்பாற்கடலுக்கு நேரில் அழைத்துச் சென்று சேவை சாதிக்கிறான் என்பது ஐதீகம்.
தல வரலாறு : இதற்கு வெள்ளையந்தீவு என்ற பெயரும் உண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற நாமத்தோடு இவன் யோக நித்திரையில் தன்னைச் சங்கர்ஷணன், ப்ரத்யும்னம், அநிருத்தன் என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும், திருமகளும், திருவடிவருட பள்ளி கொண்ட நிலையே திருப்பாற்கடல் ஆகும். பக்தர் மற்றும் தேவர்களின் அபயக் குரல்கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில் தான். எனவே இவ்வுலகுக்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர். தேவர்கள் தங்கள் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானைப் பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது வழக்கமாகும். பிரளய காலம் வரைதான் திருப்பாற்கடல் வாசம் பின்னர் மீண்டும் பரமபதம் செல்வார் அப்போது திவ்யதேசங்கள் மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன.