அழகிய நம்பிராயர், திருக்குறுங்குடி (வாமன சேத்திரம்)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரியிலிருந்து 12 கி.மீ கடந்து இங்கு வரலாம். மேலும் நாங்குனேரியிலிருந்து களக்காடு போய், மறுபடி பஸ் மாறி திருக்குறுங்குடி வந்தால் விரைவில் வரலாம். நாகர்கோவில் கன்னியாகுமரியிலிருந்து பாபநாசம், செங்கோட்டை வழியில் உள்ளது.
மூலவர் : நின்ற நம்பி
உத்ஸவர் : அழகியநம்பி
தாயார் : குறுங்குடிவல்லி நாச்சியார்
தீர்த்தம் : திருப்பாற்கடல், பஞ்சதுறை, சிந்துநதி
விமானம் : பஞ்சகேதக விமானம்
மங்களாசாசனம்: பெரியாழ்வார் - 1 பாசுரம்
திருமழிசையாழ்வார்- 1 பாசுரம்
திருமங்கையாழ்வார் - 25 பாசுரங்கள்
நம்மாழ்வார் - 13 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர்க்கு குறுங்குடி நம்பி, இருந்த நம்பி, வருக நம்பி, வைஷ்ணவ நம்பி, கிடந்த நம்பி, மலைமேல் நம்பி, திருப்பாற்கடல் நம்பி என்ற நாமங்களும் உள்ளன. நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். நம்மாழ்வார் அவதாரத்தலம், இங்கு திருமங்கையாழ்வார் பரமபதித்த தலம். இங்கே சிவன் சந்நிதியும் இருக்கின்றது. பெருமாளுக்கும், சிவனுக்கும் ஒரே நிவேதனம் தான், மூலவர் யாவரும் மிக அழகிய விசேஷ வண்ணக்கலவையில் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு திருமஞ்சனம் இல்லை.
கோயிலில் சித்திர வேலைப்பாடுகள் மற்றும் பெரிய மணி விசேஷம். தனிக்கோயில் நாச்சியார்களின் உத்ஸவர்கள் பெருமாளுடன் ஏகாசனத்தில் இருப்பதால் தாயார் சந்நிதிகளில் அர்ச்சனை கிடையாது. நின்ற நம்பி, கிடந்த நம்பி இவர்களின் சந்நிதிக்கு நடுவில் சிவன் சந்நிதியும், பைரவர் சந்நிதியும் உள்ளன. பெருமாள் மடைப்பள்ளி பிரசாதங்களே சிவனுக்கும் நிவேதனம் செய்யப்படுகின்றன. “இருந்த நம்பி” சந்நிதியிலுள்ள பெருமாளை வைகுந்தநாதன் என்கிறார்கள். ஸ்ரீமணவாளமாமுனிக்கு சந்நிதி இருக்கிறது. இக்கோயிலிலிருந்து சுமார் ½ கி.மீ தொலைவில் திருப்பாற்கடல் என்ற ஓடையின் கரையில் திருப்பாற்கடல் நம்பி சந்நிதி உள்ளது. இவ்வூரிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ள குன்றின் மேல் மலைமேல் நம்பி சந்நிதி உள்ளது. ஊருக்குக் கிழக்கே ஆற்றின் அருகில் வயல்வெளிகளில் “திருமங்கையாழ்வார் திருவரசு” என்ற சிறிய கோயில் உள்ளது,
நம்பாடுவான் என்ற பாணன் இத்திருக்குறுங்குடி பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டு வருடந்தோறும் கார்த்திகை ஏகாதசியன்று விரதம் இருந்து இத்தலத்துப் பெருமாளைப் பாடி வணங்கி வந்தான். ஒரு முறை காட்டு வழி வரும் பொழுது பிரம்ம ராட்சசன் நம்பாடுபவனைப் பிடித்து உணவாக வேண்டும் என்று கூறினான். நான் பெருமாளை சேவித்து பிறகு, வரும்போது உனக்கு உணவாகிறேன் என்று நம்பாடுவான் உறுதி கூறினார். நம்பாடுவானுக்கு காட்சிதரவே கொடிக் கம்பம் சற்று விலகியது ஏனெனில் அவன் கோயிலின் வெளியிலிருந்து பெருமாளை சேவித்து வந்தான். பெருமாள் காட்சி கொடுத்தார். இதனால் இத்தலத்துக் கொடிக்கம்பம் சிறிது விலகியே காணப்படும். பின் நம்பாடுவான் பிரம்மராட்சசனுக்கு தாம் பெற்ற புண்ணியத்தில் ஒரு பாகத்தை கொடுத்ததாக புராண வரலாறு கூறுகிறது. இன்றும் இந்த ஐதீகம் வேஷங்கள் போட்டு ஒவ்வொரு வருசமும் கைசிக ஏகாதசியன்று ராத்திரி நாடகம் நடக்கிறது. யமபட்டணம் இந்தத் தலத்திலிருந்து மிகஅருகில் இருப்பதாக ஐதீகம்.
ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் திருப்பாற்கடல் ஆற்றின் நடுவில் திருப்பரிவட்டப்பாறை என்ற பாறை மேல் உடையவர் சந்நிதி உள்ளது. விரோதிகள் உடையவரைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தபோது வடுகநம்பி என்ற பெயருடன் பெருமாள், இவரை இந்தப் பாறை மீதுகிடத்திக் காப்பாற்றினாராம். பெருமாள் உடையவருக்கு சிம்ஹாசனமிட்டு தான் அருகில் சீடனாக நின்று திருமந்திரார்த்த உபதேசம் பெற்றதால் ‘வைஷ்ணவ நம்பி’ என்றழைக்கப்படுகிறார்.
ஒரு ராட்சசன் ஒரு பிராமணனைக் கொல்ல வர, கொல்வது பாவம் என்று பிராமணன் சொல்ல, அது என் தொழில் என்று ராட்சசன் சொல்ல, விவாதம் முற்றியதால் பகவான் வேடன் போல் வேடமிட்டு அவர்களுக்கு உபதேசித்தபடி திருப்பாற்கடல் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ரிஷிகள் உபதேசம் பெற்று அகஸ்தியரை வணங்கி இருவரும் துவேஷத்தை விட்டு முக்தியடைந்ததாக தல புராணம்.
சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி, அதனால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டு கபாலம் கையில் ஒட்டிக்கொள்ள பகவான் சொல்லியபடி திருக்குறுங்குடிவல்லியால் சாபம் நீங்கி பகவான் உபதேசித்த சுதர்சன மந்திரத்தை ஜபித்து சுத்தனானார். இந்த சந்நிதியில் புருஷ சேவார்த்திகள் சட்டை அணியக்கூடாது. ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது.
ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார்.
நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார்.
ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம ராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம ராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.திருக்குறுங்குடி நம்பியை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் முக்தியடைந்துள்ளார். ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.
ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரி களிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.
இந்த கோவிலில் தினசரி விஸ்வரூபம், காலசந்தி, உச்சி கால பூஜை. சாயரட்சை, அத்தாழம், அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. அன்றைய தினங்களில் காலை, மதியம் 2 நேரங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும், பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞசனமும், இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருமலை நம்பிக்கு சிறப்பு பூஜைகள், வெகு விமரிசையாக நடைபெறும். பெருமாளுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல், நைவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும். தொடர்ந்து கட்டளைதாரர்களுக்கு சிறப்பு மரியாதை செய்தல் நடைபெறும். மாலை 6 மணிக்கு திருமலை நம்பிக்கு சாயரட்சை பூஜைகள் நடைபெறும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாங்குநேரி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : உண்டு