தோத்தாத்ரிநாதன், நாங்குனேரி திருச்சிரீவரமங்கை (நாங்குநேரி)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்;ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலிக்குத் தெற்கே நாகர்கோயில் போகும் பாதையில் 28 கி.மீ தொலைவில் நாங்குநேரி என்ற பெயரில் உள்ளது.
மூலவர் : வானமாமலை என்ற தோதாத்ரி நாதர்
உத்ஸவர் : தெய்வநாயகன்
தாயார் : இருபுறமும் உபநாச்சியார்கள், தவிர சிரீவரமங்கைத்
தாயார் ( இரண்டு தனிக்கோயில்கள் நாச்சியார்களும் உண்டு)
தீர்த்தம் : இந்திர தீர்த்தம், சேற்றுத்தாமரைத் தீர்த்தம்
தல விருட்சம் : மா மரம்
விமானம் : நந்தவர்த்தந விமானம் என்ற ஸ்ரீவைகுண்;ட விமானம்.
மங்களாசாசானம் : நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர். இது தானாகத் தோன்றிய ஸ்தலம் ஆகும். பெருமாளுக்கு தினம் தைல அபிஷேகம் உண்டு. அந்த எண்ணெயை எடுத்து சுமார் 25 அடி நீளமும், 15 அடி அகலமும் உள்ள கிணற்றில் ஊற்றுகிறார்கள். ஆந்த எண்ணெயை நம்பிக்கையுடன் சாப்பிட்டால் எல்லா வியாதிகளும் நீங்கும்.
இது வைணவர்கள் போற்றும் சுயம்வியக்த தலங்கள் எட்டில் ஒன்றாக போற்றப்படுகிறது. இங்கு மூலவர் வீற்றிருந்த கோலம் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு காட்சி தருகிறார். இத்தலத்தில் ஸ்ரீவரமங்கையாக திருமகள் வந்து வளர்ந்து, பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால், ஸ்ரீவரமங்கை எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகனைச் சேரி எனவும் மரங்கள் நிறைந்த வனமும். மயலயம் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்குநேரி எனவும், தோதாத்ரி எனவும் அழைப்பர்.
தல வரலாறு : மது, கைடபன் என்று இரண்டு அரக்கர்கள், பிரம்மனின் நாபிக்கமலத்தில் இருந்து செல்லும் தாமரைத் தண்டினை ஆட்டி அச்சுறுத்த, பிரம்மன் தன்னைக் காக்குமாறு பெருமாளிடம் முறையிட்டார், அவர் அவ்வரக்கர்களை அறுத்தார், அதனால், பூமியெங்கும் துர்நாற்றம் வீசியது. நிலைகுலைந்த பூமிதாய் பெருமாளை வணங்க, பெருமாள் தனது சக்கரத்தை ஏவி அமிர்த மழை பொழியச் செய்து பூமித்தாயின் அழுக்கை போக்கினார். ஊர்வசியும், திலோத்தமையும் இங்கு வந்து அஷ்டாச்சர மந்திரத்தை பெற்று தவமிருக்க இறுதியில் பெருமாள் காட்சி கொடுத்து, தன் அருகில் இருக்கும் பேறு கொடுத்தார். எனவேதான் இத்தலத்தில் தேவமாதர்களான ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீச, ஸ்ரீதேவியும், பூதேவியும் இருமருங்கும் அமர்ந்திருக்க எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
கோவில் அமைப்பு : ராஜகோபுரம் உயர்ந்தோங்கி கம்பீரமாக உள்ளது. கோயிலின் உட்புறம் பந்தல் மண்டபமும், அதனை அடுத்து பெரிய மண்டபமும் உள்ளன. இங்கு தங்கரதம், தங்கசப்பரம் ஆகியன இருப்பதைக் காணலாம். பங்குனி உத்திரத்தன்று தங்கத்தேர் இழுக்கப்படும். செவ்வந்தி நாயக்கர்கள் செய்துள்ள தெய்வத் திருப்பணிகளுள் ஒன்று, இங்குள்ள செவ்வந்தி மண்டபம். திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வீரப்பநாயக்கர் மண்டபம், கண்டுகளிக்க வேண்டிய ஒன்று. அற்புதமான சிற்பங்கள் கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. இந்தக் கலைக்கூடத்திற்கு அப்பால் லட்சுமிவராகர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், மச்ச முதல் கல்கி வரையிலான தசாவதார மூர்த்திகளுக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. கொடிமரம், பின்பு குலசேகரன் மண்டபம். இந்த மண்டபத்தில் பதினோராழ்வார்களைத் தரிசிக்கலாம். நம்மாழ்வார் சடாரியாக உற்சவரின் முன் இருக்கிறார். குலசேகரன் மண்டபத்தில் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார், மணவாள மாமுனிகள், உடையவரான இராமானுஜர் ஆகியவர்களின் சன்னதிகள் உள்ளன. மேலும் இராமர், கண்ணன், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் தனித்தனியே உள்ளன. கர்ப்பகிருகத்தில் தோதாத்ரிநாதன் பிராட்டியர் இருவருடன் பட்டாபிஷேக கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆதிசேஷன் தங்கக்குடை பிடிக்கிறார். இத்தல எம்பெருமான் பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், சந்திரசூரியர், விஷ்வக்ஸேனர், ரம்பை, திலோத்தமை என அனைவரும் ஒருசேர ஏக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய நிலையையும் கருவறையில் கண்டு வியக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தை வலம்வந்தால் அங்கே 32 ரிஷி, முனிவர்கள் தும்பிக்கை ஆழ்வார் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அரசராக அமைந்திருப்பதும் இத்தலத்தில் மட்டுமே. பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடி வைத்து, எவன் தன் பாதத்தில் சரணடைகிறானோ, அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பது போல் ஒரு கையை மடியில் வைத்திருக்கிறார். பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள்.
இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி, “” இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள்,” என கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள்.மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
ராமானுஜ கூடங்கள் மற்றும் வானமாமலை ஜீயர் மடம் தவிர வேறு தங்கும் வசதிகளும் உண்டு. ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணையை உடலில் தேய்த்து, சில சொட்டுக்கள் சாப்பிட்டால் குணமாகி விடும். பெருமாளிடம் பிரார்த்தனை செய்பவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் கோயில் அலுவலகத்திலேயே நல்லெண்ணெய் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்து விடுவார்கள்.
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : உண்டு