ஸ்ரீநிவாசன், திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி)
திருத்தலம் அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் ராகு தலமாக விளங்கும் இந்த தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் 39 கி.மீ தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த இரட்டை திருப்பதி தலத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இரண்டு திருத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் அருகிலே வீடுகள் அதிகம் காணப்படவில்லை.
மூலவர் : ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்) நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுகமண்டலம்
தாயார் : உபயநாச்சியார்கள்
விமானம் : குமுத விமானம்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : இத்தலம் நவதிருப்பதிகளில் இரண்டாகும். அத்திரேய ஸப்ரபர் என்கிற முனி இத்தலத்தில் யாகசாலை ஏற்படுத்தி ரித்விக்குகளுடன் யாகசாலையை சோதித்தபொழுது அவ்விடத்தில் மிகவும் பிரகாசித்த தராசையும் வில்லையும் கண்டு ஆச்சரியப்பட்டு எடுத்தபொழுது தராசு ஒருபெண்ணாகவும் வில் ஒரு புருஷனாகவும் குபேர சாபத்திலிருந்து விடுபட்டதாகவும், அங்கே துலையும் வில்லும் முக்தி அடைந்தபடியால் 'துலைவில்லிமங்கலம்" என்றும் இந்த தலத்திற்குப் பெயர் உண்டானதாகப் புராண வரலாறு. அக்கினி தேவர்களுக்கு பகவான் அருளால் யாகத்தில் பாகம் கொடுத்த தலம். இத்திருக்கோயிலின் கோபுரங்களில் சிவபிரானின் வடிவமான மரத்தின் அடியிலே அமர்ந்து தன் பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கும் தட்சிணாமூர்த்தியும் இருப்பது ஒரு தனிச் சிறப்பு.
தல வரலாறு : திருப்புளியங்குடி என்ற தலத்திற்கு சற்று அருகாமையில் இயற்கையின் வண்ணமும் நிறைந்த ஒரு திருப்பதியாக திருத்தொலைவில்லிமங்கலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் பல காலங்களுக்கு முன்பாக ஆத்திரேய கோத்திரத்தில் தோன்றிய ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். சுப்ரபர் என்ற திருநாமம் கொண்ட அந்த முனிவர் யாத்திரையாக பயணம் செய்து வந்து கொண்டிருந்த வேளையில், இந்த தொலைவில்லிமங்கலம் சேத்திரத்தை அடைந்தவுடன், இவ்விடத்தின் அழகான, எழிலான சூழ்நிலை கண்டு, இந்த இடத்தில் ஒரு யாகம் செய்ய எண்ணினார். அதனால் இந்த இடத்தை யாகம் செய்வதற்காக சுத்தம் செய்து உழுது பண்படுத்தினார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அங்கே ஒரு தராசையும் வில்லையும் கண்டார். இங்கே எப்படி இவை வந்ததென்று எண்ணி வியப்படைந்தார். இவை எக்காலத்தில், யாரால் கொண்டுவரப்பட்டன என்று நினைத்துக்கொண்டே அவற்றை தன் கையால் எடுத்தார். அந்த முனிவரின் கை பட்டதும், அந்த தராசு ஒரு பெண்ணாகவும், அந்த வில் ஒரு ஆணாகவும் உருமாற்றம் பெற்றன. அவர்கள் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து வெளிவந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்து முனிவரும், அவர் கூட இருந்த பக்த கோடிகளும், நீங்கள் எப்போது, எதனால், யாரால் இதுபோல வில்லாகவும் தராசாகவும் உரு மாறினீர்கள் எனக் கேட்டனர். அதற்கு அத்தம்பதியினர், நான் வித்யாதரன், இவள் என் மனைவி, நாங்கள் இருவரும் குபேரனது சாபத்தால் இந்நிலையை அடைந்தோம், அவரிடமே எங்களுக்கு சாப விமோசனம் கேட்டோம், அதற்கு குபேரன், இவ்வாறு நீ வில்லாகவும், உனது பத்தினி தராசாகவும் வெகு காலத்திற்கு நிலத்தில் அழுந்தி இருக்க வேண்டும், சில காலம் சென்றபின் ஆத்ரேயசுப்ரபர் என்ற முனிவர் எந்த இடத்திலும் யாகம் செய்ய மனமில்லாமல் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்து யாகம் நடத்த நிலத்தை உழுவார். அந்த நேரத்தில் நீங்கள் சாபம் நீங்கப் பெறுவீர்கள் என்று கூறினார்.
அன்றிலிருந்து நாங்கள் இந்த உருவத்திலேயே இந்நிலத்தில் புதைந்து கிடக்கிறோம். உங்கள் புண்ணியத்தால் சாபம் நீங்கப் பெற்றோம் என்று அந்த தம்பதியினர் கூறினர். அதன் பிறகு முனிவர்கள் யாகத்தை செய்து முடித்து விஷ்ணு பெருமானை ஆராதனை செய்தனர். அங்கு எழுந்தருளிய பெருமானை வணங்கி, இத்தலத்தில் நீங்கள் தேவர்பிரான் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினர். இந்த தலத்தில் வில்லும், துலை என்னும் தராசும் முக்தி அடைந்த காரணத்தினால், இவ்விடம் திருத்தொலைவில்லிமங்கலம் என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். ஆத்ரேயசுப்ரபர் கேட்ட இந்த வேண்டுகோளை ஏற்று அதனை அங்கீகரித்தார் விஷ்ணு பெருமான்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை
அரவிந்த லோசனர் திருக்கோயில், திருத்தொலைவில்லிமங்கலம்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் கேது தலமாக விளங்கும் இந்த தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் 39 கி.மீ தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மூலவர் : அரவிந்தலோசனன், செந்தாமரைக்கண்ணன்
தாயார் : கருடந்தடங்கண்ணி நாச்சியார்
தீர்த்தம் : வருண தீர்த்தம், தாமிரபரணி ஆறு
தல வரலாறு : தேவர்பிரான் திருக்கோயிலில் யாகம் செய்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்த சுப்ரபர், தினப்படி திருக்கோயிலின் அருகில் அமைந்திருந்த திருக்குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து தேவர்பிரானுக்குச் சூட்டி மகிழ்ந்தார். நம் கையால் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சூடிபார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் அளவே இல்லைதான். அத்தகைய மனநிறைவுடன் தன் வேலைகளை, சுவாமி கைங்கர்யங்களை அன்றாடம் செய்து வந்து கொண்டிருந்தார் சுப்ரபர். தனக்கு மாலை சூட்டி வணங்கும் சுப்ரபரின் பக்தியில் மனம் மகிழ்ந்த தேவர்பிரான், அவர் நாள்தோறும் எங்கிருந்து தனக்கு மலர் மாலை கொண்டுவந்து அணிவிக்கிறார் என்பதை அறிய ஆசைகொண்டு, முனிவர் பெருமான் தோட்டத்தில் உள்ள பொய்கைக்கு செல்லும் நேரம் பார்த்து அவரைப் பின்தொடர்ந்தார்.
அங்கு வந்த தேவர்பிரான், அந்தப் பொய்கையின் வளமையையும், பசுமையையும், குளிர்ச்சியான தோற்றப் பொலிவும் கண்டு, முனிவரை நெருங்கி அவரிடம், முனிவரே, இந்த இடம் மிகவும் குளிர்ச்சி மிகுந்ததாகவும், மலர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது, இங்குள்ள மலர்களைப் பொழியும் மரங்களின் மீது மலையில் இருந்து வீசுகின்ற தென்றல் தவழ்ந்தோடுகிறது. இந்த இடம் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது, அதனால் இந்த சுகந்தமான பொய்கையின் கரையிலேயே நான் வாசம் செய்ய விரும்புகிறேன், உமது யாகசாலையில் தேவநாதனாகவும், இந்தத் தூய்மையான தடாகத்தில் அரவிந்தலோசனாகவும் குடியிருக்கப் போகிறேன். இன்றிலிருந்து தடாகங்களின் கரையோரம் அமைந்துள்ள எனக்கும், எனக்குத் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள தேவர்பிரானையும் தாமரை மலர்களால் பூஜை செய்வீர்களாக, என்று சுப்ரப முனிவரிடம் கூறி அருளினார். அதுமுதல் இரட்டை திருப்பதியில் அமைந்துள்ள இரண்டு திருமாலுக்கும் தாமரை மலர்களால் அன்றாடம் அர்ச்சனை செய்து இறைவனடி சேர்ந்தார் சுப்ரபமுனிவர்.
முன்னொரு காலத்தில் அஸ்வினி தேவர்கள் என இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மக்களுக்கு வைத்தியம் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிரம்மதேவனிடம் சென்று, உலகில் செய்யப்படும் வேள்விகளிலும், யாகங்களிலும் இருந்து தேவர்களுக்கு கிடைப்பதுபோல எங்களுக்கும் பங்கு வேண்டும் எனக் கேட்டனர். மக்களுக்கு வைத்தியம் செய்யும் நீங்கள், உங்களுக்கும் யாகத்தில் பாகம் வேண்டும் என்று விரும்பினால் பூலோகத்திற்குச் சென்று அங்கு திருத்தொலைவில்லிமங்கலம் என்ற இடத்தில் வாசம் செய்யும் தேவநாதன், அரவிந்தலோசனர் என்னும் இரண்டு பெருமாளையும் வணங்கி தவமிருக்க, நீங்கள் வேண்டியது கிடைக்கும், என பிரம்மன் அருளினார்.
அதுபோலவே தொலைவில்லிமங்கலம் வந்த அஸ்வினி தேவர்கள், இத்தல தேவர்பிரானையும், அரவிந்தலோசனரையும் மனதார எண்ணி தவமியற்றினர். அவர்களது அன்பிற்கும், பக்திக்கும் மனமிரங்கிய பெருமான், அஸ்வினி தேவர்கள் முன் தோன்றி, அவர்களிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அஸ்வினி தேவர்கள், யாகங்களில் இருந்து தேவர்களுக்குக் கிடைப்பது போல பாகம் எங்களுக்கும் வேண்டும் எனக் கேட்டனர். உடனே திருமால் தேவர்களைப் பார்த்து இவர்கள் என்மீது கொண்ட பக்தியின் பலனாக இவர்களுக்கும் இன்றிலிருந்து யாகத்தில் பாகம் தரவேண்டும் எனக் கட்டளை இட்டார். அஸ்வினி தேவர்கள் இருவரும் இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி என் மீது தவம் இருந்த காரணத்தால் இன்று முதல் இந்த தீர்த்தம் அஸ்வினி தீர்த்தம் என அழைக்கப்படும் என்றார் பெருமாள்.
பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பாக இமயமலைக்குத் தென் புறமாக, கங்கை நதிக் கரையில் அகளங்கம் என்ற ஊரில் சத்தியசீலர் என்பவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வன்னிசாரன், விபீதகன், சுவர்ணகேது என மூன்று பேரும் ஆவர். இதில் விபீதகன் சரும நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவனது நோய் தீர்ந்தபாடில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த நாரத பெருமானிடம், தனது பிள்ளை விபீதகன் இவ்வாறு நோயால் அவதிப்பட என்ன காரணம் எனக் கேட்டார். அதற்கு நாரதர், இவன் தனது முற்பிறவியில் தனது குருவின் பசுவைத் திருடிவிட்டான், அதனால் அவனது குரு தந்த சாபத்தினால், இப்பிறவியில் விபீதகனுக்கு இந்த சரும நோய் பீடித்துள்ளது எனக் கூறினார். மேலும், தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள தொலைவில்லிமங்கலம் சென்று, அங்குள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடினால் உன் உடல் உபத்திரவம் தீரும் எனவும் கூறி அருளினார் நாரதர். அவ்வாறே விபீதகனும் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி தனது நோயிலிருந்து விடுபட்டான். விபீதகன் அங்கேயே தங்கி தேவர்பிரானுக்கும், அரவிந்தலோசனருக்கும் சேவை புரிந்து முகுந்த பெருமானால் முக்தி பெற்றான்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை