கள்ளழகர் அழகர்கோவில் ( திருமாலிருஞ்சோலை )
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகருக்கு வடக்கே 20 கி.மீ தொலைவில், மலையடிவாரத்தில் மிகவும் எழிலோடு அமைந்துள்ளது.
மூலவர் : பரமஸ்வாமி
உற்சவர் : சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : ஜோதி விருட்சம், சந்தனமரம்.
தீர்த்தம் : நூபுர கங்கை
விமானம் : சோமசுந்தர விமானம்
மங்களாசாசனம்: பெரியாழ்வார் - 24 பாசுரங்கள்
ஆண்டாள் - 11 பாசுரங்கள்
திருமங்கையாழ்வார் - 33 பாசுரங்கள்
பூதத்தாழ்வார் - 3 பாசுரங்கள்
பேயாழ்வார் - 1 பாசுரம்
நம்மாழ்வார் - 36 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
தல வரலாறு : எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார். இம்மலை 7 மலைகளை கொண்டது. தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவ) உள்ள கோயில் கட்டப்பட்டது.
அழகர் மலை என்பது மதுரைக்கு வடக்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ்சோலை, உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகரி, விருஷபாத்திரி அல்லது இடபகிரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும், 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலாபக்கமும் பிரிந்து செல்கின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர்கோயில் இருக்கிறது. இம்மலையில் பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சை நிறத்துடன் எழில் மிகுந்து காணப்படுகிறது, கள்ளழகர் பேரழகு வாய்ந்தவர், அபரஞ்சியால் செய்யப்பட்டவர், பஞ்ச ஆயுதங்களுடன் பெரும் புகழ் பெற்று விளங்குகிறார். ஆண்டாள் இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் அருளுகிறார். இங்குள்ள உற்சவ மூர்த்தி அழகர் மலை சுந்தரராஜன். இவருக்கு மலையின் மேல் மூன்று கி.மீ தொலைவிலிருக்கும் நூபுரகங்கையின் நீரால்தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு நீரால் அபிஷேகம் செய்தால் கறுப்பாக மாறிவிடுகிறார். சித்திரா பௌர்ணமியன்று அழகர் வைகையாற்றில் இறங்குவது ஒரு பெரிய திருவிழாவாகும்.
தர்மதேவன் இங்கு ஸ்ரீமந்நாரயணனைக் குறித்துத் தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து இக்கோலத்துடனே இங்கு எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, பெருமாளும் எழுந்தருளினார். உடனே தர்மதேவன் விசுவகர்மாவை அழைத்து பெருமாளுக்குக் கோயில் திருப்பணிகளைச் செய்ய சொன்னார். பெருமாளின் திருவிக்ரம அவதாரத்தில் விண்ணளக்கும் பாதத்தை பிரம்மன் சத்திய லோகத்தில் கண்டு கமண்டல நீரால் பாத பூசை செய்ய, அந்த நீர் பெருமாளின் பாதத்தில் உள்ள பொன்சிலம்பில் பட்டு இவ்விடத்தே தெளிக்க அது சிலம்பாறு ஆகியது. இந்த சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும் இத்தீர்த்தம் தான் உற்சவரின் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் பலர் இப்பெருமாளுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். சித்திரை மாதப் பௌர்ணமி அன்று ஸ்ரீகள்ளழகர் குதிரை வாகனத்தில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வண்ணப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்குவார். எந்த வண்ணப்பட்டு வருகிறதோ, அதைவைத்து நாட்டின் கபிஷத்தை (நிலை) கணிப்பர். ஸ்ரீரெங்கநாதர் அழகராகவே வந்து ஆண்டாளை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். இங்கே ஷேத்திரபாலருக்கு ஒரு சந்நிதி உண்டு. அர்ச்சகர்கள் கோயில் சாவியை இரவில் இவரிடம் ஒப்படைத்துப் போவதாக ஐதீகம்.
கோயில் அமைப்பு : அழகரின் திருக்கோயில் இரண்டு பிரகாரங்களோடும், அழகிய மூன்று மண்டபங்களோடும் அமைந்துள்ளன. இதன் வாயிலை கடந்து சென்றதும் முதலில் காணப்படுவது கல்யாண மண்டபம்; இம்மண்டபத்தில் திருமால், ஆஞ்சநேயர் இரணியன்வதம், கிருஷ்ணர் ஆகியயோர் சிற்பங்கள் காண்பபடுகின்றன.. இரண்டாம் பிரகாரத்தில் தென்பாகத்தில் கல்யாண சுந்தரவல்லித் தாயார், சுதர்சனர் முதலியோருக்கும், மேற்குப் பாகத்தில் யோகநரசிம்மருக்கும் வடபாகத்தில் ஆண்டாளுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. முதற்பிரகாரம் கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியுள்ளது. கர்ப்பகிருகத்திற்கு மேல் உள்ள விமானம் பொன்னால் வேயப்பட்டு சோமசுந்தர விமானம் என்று வழங்கப்படுகிறது.
சிலம்பாறு – ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது. பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் . சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமே, இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, “மண்டூக பவ’ அதாவது “மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ’ என சாபமிட்டார்.
சாபம் பெற்ற சுதபஸ், “”துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்,” என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,” என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.
மண்டூக மகரிஷிக்கு காட்சி கொடுப்பதற்காக அழகர் கோவிலிலிருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சிதரும் சித்திரை திருவிழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.சைவத்திற்கு தனி விழா. வைணவத்திற்கு தனிவிழா என்ற கொண்டாடப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி, சைவ, வைணவ ஒற்றுமை திருவிழா ஆக்கி விட்டார். அழகர்கோவிலில் தான் லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்தாள். அன்றுமுதல் கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை. இந்த திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டது. மக்கள் மனதை கொள்ளையிட்டதால் இவர் “கள்ளழகர்’ ஆனார்.
ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து “”வேண்டியதை கேள்” என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் “அழகு’. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.
புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன. வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு. இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமாளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.
சி்த்திரைத் திருவிழா 10 நாட்கள் ஆடிப் பெருந்திருவிழா 13 நாள் ஐப்பசி தலை அருவி உற்சவம் 3 நாள் இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு