ஆரையம்பதி கந்தசுவாமி கோவில்
திருத்தல அமைவிடம் : இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ளது. பெரிய கோயில் என்ற சிறப்பு பெயரால் இக் கோயில் அழைக்கப்படுகிறது. மட்டக்களப்பு, கொழும்பிலிருந்து இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் ஊர்களில் ஒன்றாகும். வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை மண்முனையும் தாழங்குடாவும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது.
மூலவர் : வேல்
தீர்த்தம் : சமுத்திர தீர்த்தம்
தல சிறப்புகள் : 16 ஆம் நுாற்றாண்டின் முற்பகுதியில் காத்தான் என்ற வேடுவத்தலைவன் வழிபட்ட வேல் முகுர்த்தம் கொண்டு உருவான கோயில். கோயில் குளத்தில் அமைந்திருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரையம்பதிக்கு இடம்பெயர்ந்து காத்தானின் வேல் முகூர்த்தத்தை மூலவராக கொண்டும் காசிலிங்கேஸ்வரர் கோயிலின் சிதைவுகளை கொண்டும் பெரிய அளவில் கட்டுவிக்கப்படட கோயில்.
இலங்கையிலே முருகப் பெருமானின் வேலாயுதத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் ஆலயங்கள் இரண்டு. ஒன்று வடக்கே தொண்டைமானாறு செல்வச் சந்நிதி. மற்றையது கிழக்கே ஆரையம்பதி கந்தசுவாமி கோயில். இப்பெயருக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒளவையார் கம்பரைப் பார்த்து, ‘ஆரையடா சொன்னாய் அது’ என்று கூறி அவமானப்படுத்திய ஆரைப் பூண்டுகள் இங்குள்ள நீர் நிலைகளில் பற்றைபற்றையாக வளர்ந்து கிடந்தது ஒரு காரணம். நீரோடும் சிறு வாய்க்கால்களுக்கு ஆரைப்பற்றை என்றும் ஒரு பெயருண்டு. நீரோடும் கேணிகள், ஓடைகள், குளங்கள் பல தற்போதும் இங்குள்ளன.
தல வரலாறு : கி.பி. 3 நூற்றாண்டில் குணசிங்க மன்னன் மட்டக்களப்பை ஆண்டு வந்த காலத்தில், கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த உலக நாச்சி என்னும் இளவரசி மண்முனையை இராசதானியாகக் கொண்டு மண்முனைப் பிரதேசத்தை ஆண்டு வந்தாள். அவள்வரும் போது காசியிலிருந்து பெறப்பட்ட ஒருபடிகலிங்கத்தையும் கொண்டு வந்தாள். இங்கே சிகரகோபுரத்தோடு கூடிய கோயில் கட்டி லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தீர்த்தமாடுவதற்காக ஒரு குளமும் வெட்டு வித்தாள். இவ்விடம் இப்போது கோயில் குளம் எனவும் சிகரம் இருந்த இடம் சிகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விடத்தைச் சுற்றி தன்னுடன் வந்த பிரதானிகள், போர் வீரர்கள், கோயில் தொழும்பர்கள், பல தொழில் துறை சார்ந்த மக்களையும் குடியேற்றி ஆண்டு வந்தாள். இது இவ்வாறிருக்க காத்தான்குடியின் வட கிழக்கே உள்ள தோணாவை அடுத்து வாழ்ந்து வந்த காத்தான் என்னும் வேடன், தான் வணங்கி வந்த முக்கோணக் கல்லையும் எடுத்துக் கொண்டு தெற்குப்புறமாக ஆரைப்பற்றையில் ஒரு அரச மர நிழலில் அக்கல்லை வைத்து வணங்கி வந்தான். சில நூற்றாண்டுகளின் பின் உலக நாச்சி ஆண்டு வந்த மண்முனைப் பிரதேசத்தில் கொடிய வைசூரி நோய் பரவத் தொடங்கி ஏராளமான மக்கள் இறக்கத் தொடங்கினர். இதனால், பயந்த மக்கள் பல ஊர்களுக்கும் இடம்பெயர்ந்தனர். காத்தான், குடியிருந்த ஆரைப்பற்றையில் இந்நோய் பரவாமல் இருப்பதை அறிந்த ஆயிரக் கணக்கான மக்கள் ஆரைப்பற்றையில் குடியேற்றினர். காத்தான் கல் வைத்து வணங்கிய இடத்தில் மடாலய முறைப்படி கல்லால் ஒரு கோயில் கட்டினர். கதிகாமம், மண்டூர் கோயில்களின் வழிபாட்டு முறைப்படி திரை திறக்காமல் பூசைகள் நடைபெற்று வந்தன.
மலையாளத்திலிருந்து வந்த நம்பிமார்களே பூசைகளை நடத்தி வந்தனர். பின்னர் யாழ்ப்பாணம் கெருடாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சின்னத்துரைக் குருக்கள் கோயிலைப் பொறுப்பேற்றதும் ஆகம முறைப்படி திரை திறந்து பூசைகளும் திருவிழாக்களும் விரதங்களும் நடைபெறத் தொடங்கின. தற்போது இக்கோயில் திரிதளத்தோடு கூடிய கோபுரம் அமைக்கப்பட்டு அழகான பெரிய கோயிலாக காட்சியளிக்கிறது. இங்கு திருவிழாக்களைச் செய்யும் பிரிவினர்களை பாகைக்காரர்கள் என அழைப்பார்கள்.
திருவிழாக்கள் : தைப்பூச உற்சவம், மாசி மகத் திதியில் நடேசருக்கு உற்சவம், பங்குனி உத்திரம் , ஆனி உத்திரம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறுகிறது. முருகனுக்கே உரித்தான கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்கள் அனுஷ்டிக்கப்பட்டு இறுதி நாள் சூரன் போர் இடம்பெறும். பின்னர் திருக்கல்யாண உற்சவம் இடம்பெறும். கார்த்திகை குமாராலய தீப உற்சவம் இடம்பெறும். நடேசருக்கு சபையில் மார்கழி திருவாதிரை உற்சவம் பத்து நாட்கள் இடம்பெற்று இறுதியில் அதன் பின்னர் பொன்னுாஞ்சல் திருவிழாவும் இடம்பெறும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மட்டக்களப்பு, கொழும்பு
அருகிலுள்ள ரயில் நிலையம் : மட்டக்களப்பு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு