கதிர்காமம்
திருத்தல அமைவிடம் : இலங்கையின் மோனராகலா மையத்திலிருந்து 93 கி.மீ தூரத்தில் உள்ளது. கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கும் புனித தலம்.
கதிர்காமம் என்பது இவ் ஆலயத்தின் பெயராக அமைந்து, அந்த ஆலயம் அங்கு அமைந்துள்ளமையால் அவ்வூரின் பெயரும் கதிர்காமம் ஆயிற்று. “கதிர்” என்பது ஒளிக் கற்றையைக் குறிக்கும். இந்த ஒளிக் கதிர்களின் உற்பத்தி ஸ்தானம் எங்கே என தேடினால் அது இவ் ஆலய கருவறையில் இருக்கும் ஓம் என பொறிக்கப்பெற்ற சற்கோண யந்திரம்.
மூலவர் : ஆறுமுக சுவாமி (ஓம் என பதியப்பெற்ற சற்கோண யந்திரம்)
பாடியோர் : அருணகிரிநாதர்
தல சிறப்புகள் : இவ்வாலய கருவறையின் வாயில் எப்போதும் திரையினால் மூடப்பெற்றிருக்கும். கருவறையில் உள்ள பேழையில் ஓம் என பதியப்பெற்ற சற்கோண யந்திரம் இருப்பதாகவும், தங்கத்திலான அங்கி அணிவித்த செஞ்சந்தன கட்டையிலான ஆறுமுகமும் பன்னிருகையும் உள்ள ஆறுமுக சுவாமி சிலை திரை மறைவில் உள்ளது என்பதும் ஐதீகம். முருகன் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பிறந்த தீப்பிழம்பில் இருந்து அவதரித்தமையால் இங்குள்ள யந்திரத்தில் இருந்து வெளிவரும் கதிர்களில் முருகன் அருள் பிரகாசிக்கின்றது. கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில்கோவிலுக்கு வெளியில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்தி எழில்மிகு தோற்றத்தில் இருக்கிறாள் வள்ளி.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது.
கோயில் அமைப்பு : ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. மதிலில் யாணை முகங்கள் பதிக்கப் பெற்றுள்ளன. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. ஆலய வெளி மண்டபத்துடன் இணைந்து இலை, குளைகளினால் ஒரு பந்தல் அமைக்கப்பெற்றுள்ளது. இதை பசுமைப் பந்தல் என அழைப்பார்கள். கோவில் யானை கொண்டுவரும் இலை, குளை இதன் மேல் போடப்பட்டு பந்தலாக அமைத்துள்ளனர். அந்த சூரனின் இராசதானியாக விளங்கிய வீரமகேந்திரபுரி இவ் ஆலயம் இருக்கும் இடத்திற்கு தேற்கு திசையில் இருந்தமையால் அதனை நோக்கியே வாயில் உள்ளதாக ஐதீகம். சூரபத்மனை வதஞ்செய்ய புறப்பட்ட முருகப் பெருமானும் அவரின் சேனைகளும் கதிர்காமத்தில்தான் “ஏமகூடம்” என்னும் பாசறை அமைத்து வீர மகேந்திரபுரி என்னும் இராசதானியை அரசாண்ட சூர பத்மனை வதஞ் செய்தார் என கந்தபுராணம் கூறுகின்றது. கணபதிக்கும், தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது.
தென் திசை நோக்கிய கோயில். கோயில் மூலஸ்தானத்திற்கு மேல் தூபியோ, கலசமோ பிரமிட் போன்ற அமைப்போ, சிகரமோ கிடையாது. கூரைமுகட்டில் செம்பால் செய்த இரு குவளைகள் உள்ளன. சுவர்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே நிகழ்ந்த யுத்தக்காட்சிகள் பலவித ரூபங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத்திய அறையின் மேற்பாகம் சித்திரத்திரையினால் மூடப்பட்டுள்ளது. ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகஸ்யமான பவித்திரமான இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, அருவமும் உருவமுமாகி, அநாதியாய், ஒன்றாய், பலவாய், பிரம்மமாய் நின்ற சோதி, பிளம்பதோர் மேனியாகி, மருவுகதிர்காமப் பெருமாளாக யந்திரத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு மூலஸ்தானத்திலிருந்து பக்தகோடிகளை ரட்சிக்கிறான். யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார்.
யானை வந்து மலர் வைத்து வணங்கியதும் கோயில் திறக்கபடுகிறது. விநாயகருக்கு பூசைகள் நடைபெற்ற பின்னரே முருகன் ஆலயத்தில் பூசைகள் ஆரம்பிக்கின்றன. இங்கு பூசைசெய்யும் பூசாரி வாயை துணியினால் கட்டி பூசை செய்கின்றார். பூசையின் போது மணியோசை ஒலிக்கும். அதனை அடுத்து அதற்கென நியமிக்கப் பெற்ற பெண்கள் நடு மண்டபத்தில் நின்று ஆராத்தி எடுக்கின்றனர். மத்திய அறைச் சுவர்களில் சூரசங்கார நிகழ்வுகள் பலவித ரூபங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. திரயிலே ஆறுமுகன்; தெய்வயானை, வள்ளியம்மை சமேதராக மயில் வாகனத்தில் தோன்றும் காட்சி பல வர்ண நிறங்களால் தீட்டப்பெற்றுள்ளன.
செல்லக் கதிர்காமம் : கதிர்காமத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இங்குதான் விநாயகர் யானையாக காட்சிகொடுத்து வள்ளியை முருகனுடன் இணைய வைத்ததாக ஐதீகம். இதனை முன்னர் “வள்ளித்தீவு” என்று அழைத்தார்கள். இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர். இங்கு மாணிக்கக் கங்கையாற்றின் கரையில் மாணிக்க விநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள காட்டில்தான் முருகனுக்கு உதவியாக விநாயகர் யானைவடிவில் வந்து வள்ளியைத் துரத்தியதாகவும் பின்னர் இங்கு தான் வள்ளி திருமணம் நடந்ததாகவும் ஐதீகம். இங்குள்ள ஆலயத்தில் பஞ்சமுக விநாயகர் வீற்றிருக்கின்றார்.
பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.
ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆதிகாலத்தில் இலங்கையும் தென்பாரதமும் ஒன்றாயிருந்தபொழுது இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து, ஏன் வடமேற்கு எல்லையிருந்துங் கூட முருகபக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு கதிர்காமத்திற்கு வந்திருக்கிறார்கள். கடற்பிரிவு ஏற்பட்டபின் கடல்கடந்து யாத்திரை செய்ய முடியாதவர்கள் திருச்செந்துரில் கந்த வழிபாடு செய்தனர்.
தினசரி காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மட்டால ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ,வீரவில்லா விமான நிலையம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : மஹியாங்கனா
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு