விசவத்தனை முருகன் கோயில், பண்ணாகம்
திருத்தல அமைவிடம் : இலங்கையின் விசவத்தனை முருகன் கோயில் பண்ணாகத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து சங்கானை வழியாகக் காரைநகர் போகும் வீதியில் ஒன்பதாவது மைலில் உள்ளது.
மூலவர் : வைரவசுவாமி (ஆதிமூல முருகப்பெருமான்)
தீர்த்தம் : தீர்த்தகேணி
தலவிருட்சம் : கடம்ப மரம்
தல சிறப்புகள் : முருகப்பெருமான் ஆதி மூலவராக அருளாட்சி புரிய கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் பரிவார தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். ஆதிமூல முருகப்பெருமானும், சண்முக பெருமானும் மிகப்பெரியவர்களாக காட்சியளிப்பது அதிசயமானது. விநாயகராக உருவான மாமரமும் சந்நிதான முன்றலில் நிற்பது சிறப்பிற்குரியது. தலவிருட்சம், தீர்த்தகேணி என்பன ஒருங்கே அமையப்பெற்றது முருகப்பெருமானின் திருத்தலமாகும்.
பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக விளங்குகின்றது. இந்த வைரவப்பெருமான் பிரதிட்டை செய்யப்பட்டிருந்த இடத்துக்கு வடக்கு பக்கத்திலே கதிர்காமரின் விசுவநாதர் முருகப்பெருமானை பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தார். அந்நாளில் சிறிய மடாலயமாக இருந்தது. அங்கு கந்த புராணம் படித்து பொருள் கூறி வழிபடும் இடமாக இக்கோவில் இருந்து வந்தது.
தல வரலாறு : ஆதியில் விசவத்தனையில் வைரவசுவாமி ஆலயமே இருந்தது. 200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக்கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.
கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன. 1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.
1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து அதன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வூர் ஆலங்காடு என வழங்கி வந்தது. காரைக்கால் அம்மையார் இறைவனுடைய திருநடனத்தைத் கண்டு தரிசித்துக்கொண்டிருந்த தலம் ஆலங்காடு. அந்த தலத்திலிருந்து வந்து இங்கே குடியேறிய முன்னோர் சிலர் இந்த இடத்துக்கும் தாம் பிறந்த திருவாலங்காடு என்ற பெயரைச் சூட்டியிருக்கலாம். ஏறக்குறைய 3 மைல் சுற்றளவும் ஒரு சதுர மைல் பரப்புமுள்ள இவ்வூரில் வைரவ சுவாமிக்கும் காளி தேவிக்கும் கோயில்கள் பல உள்ளன. எனினும் இவ்வூரார் அனைவரும் விசவத்தனை முருகப்பெருமானையே தமது குலதெய்வமாக கொண்டு வழிபடுவர். மேலே குறிப்பிட்ட ஒன்பதாவது மைல் கல்லின் அருகே வடக்கு திசை நோக்கிச் செல்வது விசவத்தனை முருகமூர்த்தி வீதி, அவ்வீதி வழியாக செல்ல முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள விசவத்தனை தலம். தூல லிங்கமாகிய கோபுரத்தைத் தரிசித்துக் கோவிலின் தெற்கு வீதியால் சென்றால் வயல்கள் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் முகப்பில் கடம்ப மரம் வாசம் செய்ய முருகப்பெருமானின் தேவஸ்தானத்தை தரிசிக்கலாம்.
விளைபொருள்களையோ கால்நடைகளையோ கவர்ந்து செல்ல வரும் கள்வர்களை வைரவப் பெருமான் வெருட்டித் துரத்துவார். பொருள்களுக்கு உரியவர்கள் உறங்கும் போது களவு நடைபெற இருப்பதை அவர்களுக்கு கனவிலே தெரிவிக்க, அவர்கள் உடனே விழித்தெழுந்து தத்தம் தோட்டங்களுக்கு சென்று கையும் மெய்யுமாகத் திருடர்களை பிடிப்பார்கள். ஆளரவம் கேட்டுத் திருடர்கள் களவாடிய பொருள்களை விட்டுவிட்டு ஓட்டமெடுப்பதும் உண்டு. இப்படி எத்தனையோ அருட்செயல்களை வைரவப்பெருமான் செய்ததாக முன்னோர்கள் கூறுவர். அன்னதான சபை இவ் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது அன்னதானம் வழங்குவதற்கென ஸ்ரீ முருகன் அன்னதான சபை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதற்கென ஆலயத்தின் முற்பகுதியில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிர்வகிப்பதற்கென தனியான நிர்வாக கட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது.
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் மகோஸ்சபம் ஆரம்பமாகும். சித்திரை மாத பூரணை, வைகாசி மாத வைரவ பொங்கல், வைகாசி விசாகம், ஆடிச் செவ்வாய், புரட்டாதிச் சனி, ஐப்பசி கந்தசஷ்டி, மார்கழி திருவெம்பாவை, தைப் பூசம், மாசி சிவராத்திரி, மாதம் தோறும் வரும் கார்த்திகைத் திருவிழா, புதுவருடப்பிறப்பு திருவிழா, ஆவணி விநாயக சதுர்த்தி உற்சவம், தீபாவளித் திருவிழா, பிள்ளையார் பெருங்கதை பூசை என்பன வருடந்தோறும் சிறப்புற நடைபெறுவது சிறப்பிற்குரியது.
தினமும் மூன்று காலப்பூசைகள் நடைபெறுகின்றன. காலை 7.00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : யாழ்ப்பாணம் ( பலாலி விமான நிலையம் )
அருகிலுள்ள ரயில் நிலையம் : யாழ்ப்பாணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு