காஞ்சிபுரம், சுப்பிரமணியர் கோயில் (குமரகோட்டம்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் நடுப்பகுதியில் மேற்கு இராசவீதியில் உள்ளது. மேலும் சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமாட்சியம்மன் கோவிலின் தென்மேற்கு திசையிலும், இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமி : சுப்பிரமணிசுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
பாடியவர்கள் : அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள்
தலச் சிறப்புகள் : மூலவர் சுப்ரமண்ய சுவாமி ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு தரிசனம் தருகிறார். இடப்புறமும், வலப்புறமும் வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். அனந்தசுப்ரமண்யர் என்கிற நாகசுப்ரமண்யரின் உலாத் திருமேனி இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமாகும். மேலும், இவரது வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றத்துடன் உள்ளது.கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான்.
தீபாவளி நீங்களாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்விக்கப்படுகிறது. முருகன் இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால், வள்ளி-தெய்வானை பிரகாரத்தில் தனித்திருக்கின்றனர். முருகன், கச்சியப்ப சிவாசாரியாரைக் கொண்டு, "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுத பணித்த தலம். கச்சியப்பருக்கு பெருமைசேர்க்கும் பீடம் எதிரே முருகப்பெருமான் தெற்கு நோக்கி காட்சிதருகிறார். நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. வள்ளலாருக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக தேவசேனாபதீச்வரர் எழுந்தருளியுள்ளார். சிவலிங்க ஸ்வரூபமாக மூலத்தானத்து மேல் விமானத்தில், முருகனும், திருமாலும் இவ்விறைவனை வணங்கும் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். குமரக்கோட்டத்துக்குள், உருகும் உள்ளப் பெருமாள் சந்நிதி, முருகப்பெருமானின் பள்ளியறைக்கு அடுத்து அமைந்துள்ளது. இந்த கோயில் மிக விசேஷமானது வழக்கமான கோயில் போல நேராக இல்லாமல் மிக கோணலாக வளைந்து இருக்கிறது. இந்த வடிவில் வேறெங்கும் கோயில் இல்லை என்கிறார்கள். பாம்பன் சுவாமிகள் காஞ்சிபுரம் வந்து விட்டு இந்த கோயிலுக்கு வராமல் சென்று விட்டாராம். அவரை முருகன் சிறுவனாக சென்று இந்த கோயிலுக்கு மறுபடி அழைத்து வந்ததாக புராண கதை உள்ளது. கோயிலுக்கு வெளியே பிரகாரத்தில் கிருபானந்த வாரியாருக்கு சிலை ஒன்று உள்ளது.
நாகசுப்ரமண்யரின் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளதோடு, வள்ளி-தெய்வானை உலாத் திருமேனிகளுக்கு மூன்று தலை நாகம் குடை பிடிப்பது போலும் காட்சிதருகிறது. மேலும், சந்தான கணபதி திருவுருவமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.
தல வரலாறு : மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சிதருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் சண்டை செய்ய, அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது. பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.
முருகப்பெருமானார் தாருகன் முதலாம் அசுரரை அழித்துத் தேவரை வாழ்வித்தபின் திருக்கயிலையில் அம்மை அப்பரை வணங்கி அருள்விளையாடல்களைப் புரிந்துகொண்டிருந்தனர். பிரமன் தேவர் குழாங்களுடன் சிவபிரானை வணங்கச் செல்லும்பொழுதும் மீளும் பொழுதும் முருகப் பெருமானை மதியாது சென்றனன். அவனது அகந்தையை நீக்கக் கருதிய கருணையொடும் குமரப்பிரானார் வேதனை அடைந்து ஒருவாறு வணங்கிய வேதனை ‘வேதம் வல்லையோ’ என வினவினர். ஓம் மொழிப் பொருளின் உண்மைகாணாது மயங்கிய பிரமனைக் குட்டிச் சிறையி லிட்டுப் பிரம கோலத்துடன் படைத்தற்றொழிலை மேற்கொண்டனர் தேவசேனாதிபதி.
தேவர் முறையீட்டிற்குத் திருச்செவி சாத்திய சிவபிரானார் நந்தியை விடுத்தபோது முருகப்பெருமான் பிரமனைச் சிறைவீடு செய்யாமையின் தாமே போந்து பிரமனை விடுவித்தனர். பிரமன் வேற்கடவுள் கருணையால் நல்லறிவு பெற்றேனென வணங்கித் தன் இருக்கை சார்ந்து படைப்புத் தொழிலை மேற்கொண்டனன். சிவபிரான் மடித்தலத்திலிருந்து முருகப்பெருமான் ஓம்மொழிப் பொருளைத் தந்தையார்க்கு வெளிப்படுத்தி அவரருளைப் பெற்றனர். ஆயினும் தந்தையார் பணியாகிய பிரமனைச் சிறைவீடு புரியாமையான் நேர்ந்த பிழைதீரத் தம்பெயரால் தேவசேனாபதீசர் எனச் சிவலிங்கம் இருத்திப் போற்றினர்.
முருகப்பெருமான் மான்தோலுடையும், தருப்பை அரைநாணும், திருக்கரங்களில் உருத்திராக்க வடமும், கமண்டலமும் விளங்க நினைப்பவர் பிறப்பறுதற்கு ஏதுவாகிய குமரக்கோட்டத்துள் முனிவரர் போற்றத் தேவசேனாபதீசர் திருமுன்பு மேற்கு நோக்கிய திருக்கோலத்துடன் நின்றருள் புரிவர். அவர்தம்மை வணங்குவோர் இன்பமுத்தியை எளிதிற் பெறுவர். அடியவரை மயக்கும் குற்றத்தினின்றும் எஞ்ஞான்றும் தவிரவும் மார்க்கண்டேயரை வஞ்சகப் படுத்த முயன்ற பிழை தீரவும் தேவசேனாபதீசப் பெருமானை வணங்கி ‘உருகும் உள்ளக்கோயிலான்’ என்னும் திருப்பெயருடன் திருமால் குமரகோட்டத்தில் முருகப்பெருமான் அருளையும் பெற்று விளங்குகின்றனர்.
ஆண்டுதோறும் வைகாசி 11ம்நாள் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடன் சேர்ந்த சுப்பிரமணியருக்கும், ஐப்பசி கந்த சஷ்டியில் தேவசேனாவுடன் முருகனுக்கும் திருமணம் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோயிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள். வைகாசி விசாகப் பெருவிழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு. இது தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி முதலியன இங்கு சிறப்பான நாட்களாகும். நாக கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும்.பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
காலை 7.00 மணிமுதல் 12.00 வரையிலும்,மாலையில் 3.30 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு