குன்றக்குடி சண்முகநாதர்
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இத் திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. இக்கோவிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே, மயில் உருவம் போன்று காட்சியளிப்பது.
சுவாமி : சண்முகநாதர்
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தல தீர்த்தம் : தேனாறு
தலவிருட்சம் : அரசமரம்
பாடியோர் : அருணகிரிநாதர்
தலச் சிறப்புகள் : குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தது நடக்கும்.“குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது” என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது. கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ என்ற பெயர் பெற்று, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீது வீற்றிருப்பது போல் இருக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனுக்கு இருபுறமும் தேவியர் இருவரும் நின்று கொண்டிருப்பார்கள். முருகன், வள்ளி மற்றும் தெய்வானை இங்கு தனித்தனியாக மயில்களில் அமா்ந்து காட்சி தருவது, இந்தக்கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
தல வரலாறு : சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு குன்றக்குடி வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேலவன் இவ்வூருக்கு வந்து மயிலுக்கு சாப விமோசனம் கொடுத்து மலைமேல் குடி கொண்டதாகப் புராணக்கதை சொல்கிறது.
ஒருமுறை பெரிய மருதபாண்டியருக்கு பிளவை என்னும் நோய் ஏற்பட்டு, எவ்வளவு ராஜ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. வலி அதிகமாக இருந்ததால் துடித்துப் போனார். இந்த நிலையில் பெரிய மருதுவைப் பார்க்க வந்த ஒருவர், ‘ஒரு முருக பக்தர் வந்து, பிரார்த்தித்துக் கொண்டு திருநீறு பூசினால் குணமாகும்’ என்று தெரிவித்தார். உப்பு வாணிகம் செய்து கொண்டிருந்த காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்தார்கள். அவர் தனது குலதெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு விபூதி பூசிவிட்டு கூட இருந்து உதவினார். ஓரிரு தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து வலி நீங்கியது.
நோய் குணமான நெகிழ்ச்சியில் இருந்த பெரிய மருது, காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி ஆறுமுகனைப் பார்க்க விரும்பினார். சுற்றிலும் புதர் மண்டி, கவனிப்பின்றி இருந்த குன்றக்குடி மலைக் கோவிலைப் பார்வையிட்டு, திருப்பணிகளை செய்யத் தொடங்கினார். தாம் வந்து தங்கி பணிகளைப் பார்வையிட வசதியாக குன்றக்குடியில் ஒரு சிறிய அரண்மனையையும் நிறுவினார். திரு வீதிக்குத் தென்திசையில் உள்ள தீர்த்தக் குளத்தை செப்பனிட்டு, படித்துறைகள் கட்டி, சுற்றிலும் தென்னை மரங்களை நட்டு வைத்தார். அதற்கு ‘மருதாவூரணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
மூலவரின் பீடத்தின் கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு சாத்தினார். மூலவர் சன்னிதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபம் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டினார். அங்குள்ள ராஜ கோபுரமும் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே ஆகும். அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்று பொறித்து, ஒரு தங்க கவசம் செய்து உற்சவ மூர்த்திக்கு சாத்தினார். தேர் செய்து, தைபூச விழாவினைப் பெரிய அளவில் நடத்தினார். காடன் செட்டியார் பெயரில் மண்டகப்படி ஏற்படுத்தி, அன்னதானச் சத்திரமும் கட்டினார்.
காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரரையே தனது வழிபடு தெய்வமாகக் கருதி, அங்கே ஒன்பது நிலை ராஜகோபுரம் அமைத்திருந்த மருது சகோதரர்கள், குன்றக்குடி சண்முகநாதரிடம் தீராத அன்பு கொண்டு திருப்பணிகள் செய்து உற்சவமூர்த்திக்கு எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தின் இரு தூண்களிலும் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவமாக இன்றும் காட்சி தருவது காலத்தால் அழியாத கலைச் சின்னமாகும். சிலைக்கு கீழே பிளவை நோய் தீர்த்த பெருமை கல்வெட்டில் காணப்படுகிறது. இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது. இதற்குக் காரணம், தொலைவில் நின்று பார்க்கும் போது, குன்றானது நிமிர்ந்து நிற்கும் மயில் போலத் தோற்றமளிப்பதே ஆகும்.
மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார். குன்றக்குடியில், மலைக் கோவில், கீழ் கோவில் என்றும் இருபகுதிகள் உள்ளன. கீழே குடைவரைக் கோவிலில் தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார்கள். அவர்களுக்கு அருகில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் சிலை வடிவங்கள் உள்ளன.
மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகை போல் தோன்றுவதால், அங்கே உள்ள பிள்ளையார் ‘தோகையடி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், மேலே முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைக் கோவில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு நம்மை வரவேற்கிறார். தலைவாசலில் தெற்குநோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. மலை மீது கோவிலில் ஒளி பிரகாரம்தான் உள்ளது. அதில் நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் ஆகியோர் சன்னிதிகளும், சோமாஸ்கந்தர், விசாலாட்சி சன்னிதிகளும் வடகிழக்கில் நவக்கிரக சன்னிதியும் விளங்குகிறது. மலையின் மேற்குப்பகுதியில் மலையடிவாரத்தில், அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று பழங்காலக் குகை கோவில்கள் உள்ளன. பிற்காலத்தில் பல சிலைகள் இந்த கோவில்களில் நிறுவப்பட்டன. இந்த குகைக்கோவில்கள் அனைத்தும், சிவனுக்கு அா்ப்பணிக்கப்பட்டவை. இங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளா்களை கவரக்கூடிய பல கற்கால கல்வெட்டுகள் உள்ளன.
இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது பிரசித்தி பெற்றது. ”தமிழ் புலவா் குன்றக்குடி அடிகளார்” இந்த ஊரில்தான் வாழ்ந்து, தமிலுக்கும் மதத்திற்கும், தொண்டாற்றினார். அவா் இங்குதான் சமாதி அடைந்தார். அருணகிரி நாதா் எழுதிய திருப்புகழில் குன்றக்குடி கோவிலை புகழ்ந்து பாடியுள்ளார். இந்த கோவிலில் சரவணப் பொய்கை, தேனாறு மற்றும் மயில் தீா்த்தம் ஆகிய பொய்கைகள் உள்ளன.
இந்த ஆலயத்தில் விசேஷமாக காவடி வழிபாட்டை சொல்லலாம். இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர். குன்றக்குடி முருகனுக்கு பரிகார பூஜை செய்தால் கோபத்துன்பங்கள் நிவர்த்தியாகும். இங்கு திருமணம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இதனால் இங்கு முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா, தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பத்தூா், காரைக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு