இலஞ்சி குமாரர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டம்., தென்காசி நகருக்கு மேற்கே சுமார் 5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்துகள் மூலம் தென்காசி சென்று இறங்கி, அங்கிருந்து நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் ஏறி கோவிலை சென்றடையலாம். இக்கோவிலுக்கு தென்காசியிலிருந்தும், செங்கோட்டையிலிருந்தும் சிற்றுந்து வசதி உள்ளது.
மூலவர் : திரு இலஞ்சி குமாரர் (வரதராசப் பெருமான்)
சிவன் : ஸ்ரீ இருவாலுக நாயகர்
அம்பாள் : ஸ்ரீ இருவாலுக ஈசர்க்கினியாள்
தல விருட்சம் : மகிழமரம் , செண்பகப்பூ
தல தீர்த்தம் : சித்ரா நதி
தலச் சிறப்புகள் :
இங்கு முருகப் பெருமான் அழகிய இளமைக் கோலத்தில் காட்சியளிக்கிறார். இலஞ்சி திருக்கோயிலின் நுழைவு வாயிலில் பத்து தலைகளுடன் முருகன் அமர்ந்துள்ள திருக்காட்சியைக் காணலாம். இங்கு ஈசனே நடுநயமாக காட்சித் தருகிறார். இலஞ்சிக் குமரனே திருக்குற்றாலத்தின் துவார சுப்பிரமணியராகவும், பிரத்யேக பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராகவும் திகழ்வது சிறப்பு. வரதராஜ குமரன் என்று சிறப்பிக்கப்படும் திருவிலஞ்சி குமரன் நான்கு கரங்கள் கொண்டு வேல் தாங்கியும், மயிலை வாகனமாக கொண்டபடியும், நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சியருள்கிறார். இரு என்ற சொல்லுக்கு பெருமை என்று பொருள், வாலுகம் என்ற சொல்லுக்கு வெண் மணல் என்று பொருள். ஆக அகத்தியர் பிரதிஷ்டை செய்த பெருமை மிக்க வெண் மணல் லிங்கம் என்பதால் இத்தல ஈசன் இருவாலுக நாயகர் என்ற பெயரில் கருவறையில் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு மருந்து சாத்தி, குவளை அணிவிக்கப்பட்டுள்ளது. இவர் மணல் லிங்கம் என்பதால் அபிஷேகம் கிடையாது. அம்மை இருவாலுக ஈசர்க்கினியாள் கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை தொங்கவிட்ட படியும், சிரித்த முகத்தவளாக, இடை நெளித்து நின்ற கோலத்தில் தெற்கு திசை நோக்கி காட்சித் தருகிறாள்.
தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார். முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.
அகத்திய முனிவர் பூஜை செய்ததும் அருணகிரிநாதரால் பாடப்பெற்றுதுமான வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இங்கு நடக்கும் கந்த சஷ்டி விழாவைப்பற்றி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடி இருக்கிறார். திருக்குற்றாலத் தலபுராணத்தில் வெற்றிவேற் குமரன் விரும்பி அமர்ந்த தலம் என்றும் , பிரம்மா, இந்திரன் குமரனை அர்ச்சித்து வாழ்ந்த இடம் என்று குறிப்பிடுகிறது. ”திரு இலஞ்சி முருகனுலா”வில் இக் கோவிலை சுற்றி இயற்கை அழகு சூழ்ந்து இருப்பதை பாடுகிறது. சாண்டோ திரு. M.M.A. சின்னப்பாத் தேவர் அவர்கள் சுதை வேலைப்பாடு கொண்ட சண்முக பிரகாரம் கட்டி கொடுத்து இருக்கிறார்.
ஆதி காலத்தில் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், துர்வாச முனிவர், காசிப முனிவர் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் சந்திப்பின் போது பல ஆன்மீக கருத்துக்களை பற்றி உரையாடிக் கொண்டிருக்க, மூம் மூர்த்திகளில் நிமித்த காரண கடவுள் யார் என்ற சந்தேகம் தோன்றுகிறது. காசிப முனிவரோ படைக்கும் கடவுளான பிரம்மனே என்றும், துர்வாச முனிவரோ காக்கும் கடவுளான திருமாலே என்றும், கபில முனிவரோ அழிக்கும் கடவுளான சிவனே என்றும் மாறுபட்ட கருத்துக்களை கூறினார்கள். அப்போது துர்வாச முனிவர் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வணங்கி தங்கள் ஐயம் தீர்த்து வைக்க பணிகிறார். அவரின் வேண்டுகோளை ஏற்ற முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும், ஆடகப் பொன் மேனியும் கொண்ட கட்டிளமை கோலத்தில் தோன்றி பிரம்மாவாகவும், திருமாலாகவும், ருத்திரனாகவும் இணைந்த மும்மூர்த்தி வடிவில் காட்சியருளி தாமே நிமித்த காரண கடவுள் என்பதை தெளிவுபடுத்தியதாகவும், அந்த தரிசனத்தை கண்டு தங்கள் ஐயம் தீர்ந்த முனிவர்கள் தங்களுக்கு காட்சியளித்தது போலவே இத்தலத்தில் எழுந்தருளி இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டதற்கு இணங்க, இங்கு முருகப் பெருமான் வரதராஜ குமரனாக அருள்பாலிப்பதாக இலஞ்சி தல புராணம் கூறுகிறது. முருகக் கடவுள், தன் என்றும் மாறா இளமை அழகுடன் தோன்றி ”தானே மும்மூர்த்தியாகி மூவினையும் செய்வோம் ”என்று கூறி அவர்களது ஐயத்தை தீர்த்தார். மூன்று முனிவர்களும் இங்கேயே எழுந்தருளியிருந்து வழிபடுவோர் யாவருக்கும் ஞானம் அளித்து விரும்பும் வரத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்க அதன்படி குமாரக் கடவுள் இத்தலத்தில் எழுந்தருளினார்.
கோவில் அமைப்பு : இயற்கை எழில் சூழ்ந்த வயல்கள் மற்றும் சோலைகளுக்கு நடுவே, சித்ரா நதியும், ஐந்தருவியாறும் சங்கமிக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ள இத் திருக்கோவிலுக்குள் செல்ல கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இரண்டு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் உள்ளே அழகிய நந்தவனம் நம்மை வரவேற்கிறது. நந்தவனத்தை தாண்டினால் சரவண மண்டபம் என்னும் பெயரில் அழகிய முன் மண்டபம் அமையப் பெற்றுள்ளது. இந்த மண்டபத்தை தாண்டி செல்லும் உள் வாயிலின் தென்புறம் தல விநாயகர் காட்சியளிக்கிறார். அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் நேராக கிழக்கு நோக்கிய இருவாலுக நாயகர் சன்னதி. கருவறையில் உறையும் இருவாலுக நாயகருக்கு எதிராக வெளியே அவருடைய வாகனமான நந்தி, கொடி மரம், பலி பீடம் ஆகியவைகள் அமையப் பெற்றுள்ளன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் தனி சன்னதியில் இருவாலுக நாயகருக்குரிய உற்சவ சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் அருள்பாலிக்கிறார்கள். அதே முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் இத்தல அம்மையான இருவாலுக ஈசர்க்கினியாள் காட்சித் தருகிறாள். சுவாமி இருவாலுக நாயகர் சன்னதிக்கு தெற்கே தனி சன்னதியில் காட்சியளிக்கிறார் இத்தல நாயகனாக விளங்கும் திருவிலஞ்சிக்குமார சுவாமி. அவருக்கு இருபுறமும் முறையே வள்ளியும், தெய்வானை அம்மைகளும் காட்சித் தருகிறார்கள். இவரது சன்னதிக்கு எதிரே இவருடைய வாகனமான மயில் மற்றும் தனி கொடிமரம், பலிபீடம் ஆகியவையும் இருக்கிறது. இந்த இரண்டு சன்னதிகளையும் ஒருங்கிணைத்து விளங்கும் பிரகாரங்களில் முறையே பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், சுரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், கன்னி மூல கணபதி, உற்சவர் திருவிலஞ்சி குமாரர், வேணு கோபாலர், காசி விசுவநாதர் விசாலாட்சி, திருக்குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மை, அய்யனார், அகத்தியர், சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சண்முகப்பெருமான், நடராஜர், பைரவர், சந்திர பகவான் ஆகியோர் காட்சித் தருகிறார்கள்.
இந்த கோவில் மகுட ஆகப்படி முறையே கருவறை, அர்த்த மண்டபம், மணி மண்டபம், மகா மண்டபம் ஆகிய அங்கங்களை கொண்டு அமையப் பெற்றுற்ளது. திருக்கோவிலின் வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது. இந்த நந்தவனத்தில் இத்தல விருட்சமான மகிழ மரம் மற்றும் நாகலிங்க மரம், வில்வ மரம், மா மரம் போன்ற எண்ணற்ற மரங்களும், பூச்செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.
தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது. இங்கு சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி இருவாலுக நாயகரும், இலஞ்சிக் குமரனும் காட்சித் தருவார்கள். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவும் இங்கு விமரிசையாக நடைபெறும். இவ் விழாவின் முதல் நாள் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் சிவனாகவும், நான்காம் நாள் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் சதாசிவனாகவும் காட்சித்தரும் இத்தல குமரன் ஆறாம் நாள் வெள்ளி மயிலேறி சென்று சூரனை சம்காரம் செய்து அருள்பாலிப்பார். தை மாதம் இத்தல குமரன் திருக்குற்றாலம் எழுந்தருள, குற்றாலநாதர் உடன் சித்ர சபை எதிரிலுள்ள திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். மாசி மாதம் மேலகரத்தில் நடைபெறும் நாள் கதிர் கொள்ளும் திருவிழாவுக்கு தென்காசி மற்றும் திருக்குற்றாலம் திருக்கோவில் அஸ்திரதேவருடன் இத்தல அஸ்திரதேவரும் எழுந்தருளி சிறப்பு சேர்ப்பார். இது தவிர திருக்குற்றாலத்தில் நடைபெறும் சித்திரை விசு மற்றும் ஐப்பசி விசு திருவிழாவுக்கு இத்தல திருவிலஞ்சி குமரன் எழுந்தருளி விழாவின் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை பத்து நாட்களும் குற்றாலத்தில் தங்கி இருந்து சிறப்பு சேர்ப்பார்.
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : தென்காசி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு