தென்சேரி மலை, மந்திரகிரி வேலாயுத சுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில். மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சூலூரில் இருந்து சுல்தான்பேட்டை வழியாகவும் இந்த மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு.
சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை
தலவிருட்சம் : கடம்ப மரம்
‘தென்சேரி கிரி’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. இது ஒரு மலைக்கோவில் என்பது குறிப்பிடதக்கது.
தலச் சிறப்புகள் : கோவிலின் உள்ளே மூலவர் அழகுத் திருக்கோலமாய் விளங்ககிறார். ஆறுமுகத்துடன் வள்ளி தெய்வானை சமேதராய்க் காட்சி இங்கேயுள்ள தனிச்சிறப்பு. இவரின் ஆறுமுகங்களையும் ஒருசேர நாம் காணமுடிகின்றது. தமிழ்நாட்டில் உள்ள முருகப் பெருமான் திருத்தலங்களில் சிலவற்றில் மட்டுமே இந்த தனித்துவத்தை நாம் காண இயலும். இடது பக்கத்து கரத்தில் சேவற்கொடிக்கு பதிலாக, சேவலையே கொண்டுள்ளவர் இந்த செஞ்சேரி மலை. அருணகிரியார் தனது பயணத்தின்பாது இங்கு வழிபாட்டை முடித்த பின்னர் மேற்குத்திசையிலுள்ள பொன்மலைக்கு சென்றிருக்கிறார் என்றும் அறியப்படுகிறது. மந்திரகிரிவேலாயுத சுவாமி ஆறுமுகங்களுடன், பன்னிரு கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடனும், மயிலுடனும் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார். இடது கையில் சேவலே ஒரு கருவி போல இருக்கிறது. இது முருகன் தவம் செய்த இடம்.
தல வரலாறு : குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த திருக்குமரன், பிரணவ மந்திரத்தை தனது தந்தைக்கு உபதேசித்த திருத்தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவன் உபதேசித்த திருத்தலம் எது என்றால், பலரும் திசை தெரியாதவர் போல் முழிக்கத் தான் செய்வார்கள். அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலம் சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவன் உபதேசித்த திருத்தலம் இது என்பதால் மிகவும் பழமையான திருத்தலம்.
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானை தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் கூறினார் பார்வதிதேவி.
'சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து, 'குமரா. சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவனின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க.. 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
தேவர்களைக் காப்பதற்காக, சூரபத்மனையும், அவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் அசுரர்களையும் அழிக்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காகவே முருகக்கடவுள் தோன்றினார் என்பது பரவலாக அறியப்பட்டிருக்கும் வரலாறு. இந்த முருகனுக்குத் துணையாக பரமசிவன், வீரபாகுவை அனுப்பினார். பார்வதியோ சக்திவேலினைத் தந்தார். ஒரு கைக்கு சக்திவேலும், மீதமுள்ள பதினோரு கைகளுக்குப் பதினோரு ஆயுதங்களும் முருகப் பெருமானுக்கு தன் தாயாரால் இவ்விதம் வழங்கப்பட்ட பிறகு சூரபத்மனின் மாயச் சக்திகளில் இருந்து மீண்டு வர மந்திர உபதேசமும் செய்து வைக்கப்பட்டது. பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கேற்ப, பரமசிவனார் முருகப் பெருமானை நோக்கி ‘‘நீ போகிற வழியில் பேரருளால் மலையின் வடிவமாக யாம் உள்ளோம். உன் தாயின் வடிவமாக சக்திகிரி அங்கே தென்படும். அந்தக் கிரியில் சென்று ஒரு தினம் சிவந்தனையோடு தவம் செய்வாயா அங்கே வந்து மந்திர உபதேசத்தை உனக்குப் செய்தருளுகிறோம்’’ எனக் கூறினார். அதன்படியே தவத்தை மேற்கொண்ட முருகனின் திருச்செவிகளில் மூந்திரத்தை உரைத்து சூரபத்மனை வென்றுவர தந்தையார் கட்டளையிட்டார். அப்படி அவர் கட்டளையிட்டது இந்த மலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பொருட்டே இந்த மலை ‘மந்திராசலம்’ எனப் பெயர் பெற்றது.
இந்த மலையின் குகையன்றில் யோக நிலையில் போகர் சிலகாலம் இருந்தார். அகத்தியர், வாமதேவர் முதலானோர் ஆசிரமம் அமைத்து அடிவாரத்தில் தங்கியிருந்தனர். பிரம்மன் தனது பாவம் நீங்க இங்கே நோன்பு மேற்கொண்டிருந்தான். போர் முடிந்து சூரனை வெற்றி கொண்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை மணம் முடித்துக் கொண்டு திரும்பி வரும்பொழுது முருகப் பெருமான் இங்கே தங்கினார்.
கோவில் அமைப்பு : கர்ப்பக்கிரக முன்வாசல் மண்டபத்தின் இருபுறமும் கல்வெட்டுக்கள் சில உள்ளன. கர்ப்பக் கிரகத்தின் வெளியே உள்ள அர்த்த மண்டபத்தில் கிழக்கு நோக்கி வலதுபுறத்தில் வினாயகரும், பிரகநாயகியம்மையும், இடது புறத்தில் கைலாயநாதரும் காட்சி அளிக்கின்றனர். திருக்கோவிலின் வடபக்கத்தில் ‘சயிலோதகம்’ எனப்படும் ஞானதீர்த்தம், சுனை வடிவத்தில் காணப்படுகிறது. எந்த சூழலிலும் இந்த சுனை வற்றாமலிருப்பது சிறப்புக்குரியது. அபிஷேகத்திற்கும், பூஜைக்கும் இந்த நீரையே பயன்படுத்துகின்றனர்.
அடிவாரத்தில் மலைப்பாளையம் என்னும் ஊர் உள்ளது. 150 அடி உயரத்தில்தான் கோயில் அமைந்துள்ளது என்பதால் மிக எளிதில் சென்று விடலாம். அடிவாரத்திற்கு மேலே சந்தன வினாயகர் காட்சி தருகிறார். படி ஏறமுடியாதவர்களுக்கு வாகனங்களில் செல்ல மலையின் பின்புறம் மேற்கில் வாகனப் பாதை உள்ளது வசதியாக இருக்கிறது. வளைந்து வளைந்து செங்குத்தாய் சாலை கோவிலின் அருகில் முடிகிறது. வடமேற்குப் பிரகாரகத்தின் மூலையில் உள்ளே நுழையும் வழி உள்ளது. படி வழியாகச் சென்றால் சந்திதிக்கு நேரே கிழக்கு பார்த்த மூன்று நுழைவாயில்கள் உள்ளன. நுழைவாயில் மூன்றாக இருந்தாலும் அம்மன், ஸ்வாமி, முருகன் மூவரையும் ஒரே மண்டபத்தில் அடுத்து அடுத்துக் காணலாம். அம்மன் பெரியநாயகி அம்மன், சுவாமி கைலாசநாதர், தெற்கில் நடராஜர் சன்னதி உள்ளது. முருகன் மந்திரகிரி வேலாயுத சுவாமி இருக்கும் சந்நதி பெரியது. முருகன் சூரசம்கார காலத்திற்கு முந்தியது என்பதால் மயில் முருகனது இடதுபுறம் நோக்கி இருக்கிறது.
சுற்று வட்டாரத்து மக்கள் தங்களின் எதிர்காலப் பலன்கள் குறித்தும், துவங்கவிருக்கும் காரியங்கள் செவ்வனே நிறைவேற வேண்டும் என்பது குறித்தும் இந்த செவ்வேள் கந்தனின் கோயிலில் ‘பூக்கேட்டல்’ என்னும்ட வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆறுமுகப் பெருமானின் திருக்கரங்களில் வலக்கையில் ஒன்றும், இடக்கையில் ஒன்றும் என பூக்களை வைக்கின்றனர். ஐந்து நிமிடங்களுக்குள் வலக்கையில் இருந்து பூ விழுமாயின், எண்ணி வந்த காரியம் ஜெயமாகும் எனவும் இடக்கையில் இருந்து பூவிழுமாயின் அந்த காரியத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் நேரம் கடந்தும் பூ விழவில்லை என்றால் காலதாமதமாகும் எனவும் அர்த்தங்கள் இதற்கு இருக்கின்றன.
இந்த ஊரில் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு மந்திரகிரி என்று பெயர் வைப்பது வழக்கம் எந்த வீட்டில் பசு, கன்றை ஈன்றாலும் முதலில் கறந்த பாலை முருகனுக்கு கொடுத்து விடுவார்களாம். கோவையில் இருந்து குருக்கள் வருகிறார்கள் 15 நாளுக்கு ஒருவர் என்று முறை போட்டு வருகிறார்களாம். தினமும் நான்கு காலப் பூஜைகளும், வைகாசி விசாகம், ஐப்பசி கந்தர்சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற சமயங்களில் சிறப்பு பூஜைகளும், விழாக்களுமாக இங்கு நிகழ்கின்றன. தையில் பிரம்மோற்சவமும், தேர்த் திருவிழாவும் மிகுதியான பக்தர்களை இங்கு வரவழைக்கின்றன. செஞ்சேரி மலைக்கு மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் விண்டுமலை உள்ளது. இதனை சக்தியின் வடிவமாகக்கருதி ‘சக்திகிரி’ என்று அழைக்கின்றனர். திருமால் நினற திருக்கோளத்தில் இங்கு விளங்குகிறார். இங்குள்ள தல மரத்தை 12 முறை சுற்றி வந்து சன்னதியில் தீபம் ஏற்றுவதன் மூலம் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள்நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு அடைவார்கள்.
காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு