கழுகுமலை, முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி சங்கரன்கோவில் சாலையில் கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார்கள். கழுகு மலை ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் இருக்கும் மலை மீது குடைவரை கோயில்கால பிரமாண்டமாக காட்சி தருகின்றது.
சுவாமி : கழுகாசமூர்த்தி
அம்பாள் : வள்ளி தெய்வானை
பாடியோர் : அருணகிரிநாதர்
தலச் சிறப்புகள் : கழுகாசமூர்த்திக்கு முகம் ஒன்று ,கரம் ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை தொங்கவிட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார். தென்னிந்தியாவிலேயே இம்மாதிரியான திருக்கோலம் கொண்ட முருகன் கோவில் இது மட்டுமே. தாரகாசுரனை வதம் செய்த கார்த்திகேயனே இக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். முருகப் பெருமான் போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். கழுகாசலமூர்த்தியை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம். அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும்பொழுது இத்தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும், அகத்திய முனிவரின் இருப்பிடமான பொதிகை மலையை நோக்கி முருகன் தென்மேற்காக அமர்ந்துள்ளார். 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது இந்த தலம். கழுகாசலமூர்த்தி மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை ஆகும். இக்கோயிலை சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும். இத்தலநாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும், வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
முருகன் மேற்கு முகமாக இருக்கும் சந்நிதானத்தையுடைய மலை "சிவன் ரூபம்' என்றும், கிழக்கு முகமாக இருக்கும் மலை "சக்தி ரூபம்' என்றும் வேதாகம நூல்களில் கூறப்பட்டுள்ளது. மற்ற தல்ங்களில் முருகனுக்கு அசுரன் மயிலாக இருப்பார். இந்த தலத்தில் மட்டும்தான் இந்திரன் மயிலாக இருக்கிறார். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும்.
கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை’ என பெயர் பெற்றது எனவும், மலை கழுகு போன்ற வடிவம் கொண்டிருப்பதாலும், எப்போதும் கழுகுகள் இம்மலையைச் சுற்றிக் கொண்டிருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது. தமிழகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் சிறந்து விளங்கும் முருகத்தலங்களில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தமிழகத்தின் தென்பழனி என்று அழைககப்படுகிறது. கழுகுமலையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதீஸ்வரர் கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார். யானை படுத்திருப்பது போன்ற தோற்றமுடன் குன்றின் முன்பகுதி திகழ்கிறது.
இராவணனால் ஜடாயு கொல்லப்பட, இராமன் ஜடாயுவுக்கு சகல கருமங்களும் செய்து ஜென்ம சாபல்யம் அடையச் செய்தார். இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி இராமபிரானைத் தரிசித்து வணங்கி, "நான் என் சகோதரனுக்கு ஈமக்கிரிகைகள் செய்யாததால் கரும சண்டாளன் ஆகிவிட்டேன். அதற்கு ஒரு வழி கூறவேண்டும்' என்று வேண்ட, இராமன் சம்பாதியை நோக்கி, "நீ கஜமுக பர்வதத்தில் மயில்மீது அமர்ந்திருக்கும் முருகனை- அவ்விடத்திலுள்ள ஆம்பல் தீர்த்தத்தில் முழ்கி பூஜை செய்தால் உன் சண்டாளத்தன்மை நீங்கி மோட்சம் அடைவாய்' என்றார். அதன்படி சம்பாதி வணங்கி மோட்சம் பெற்ற தலம் இது.இந்த சம்பவம் தைப்பூசத் திருநாளன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இத்தலத்தில் தட்சிதணாமூர்த்தி, செவ்வாய் இருப்பது சிறப்பு. எனவே குரு மங்கள ஸ்தலம் என்கிறார்கள். இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும் , சிவபெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிச்சிறப்பாகும். முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார். அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர கஜமுகபர்வதத்தில் ஓய்வு எடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழந்த முருகன் சம்பாதிக்கு முக்திதந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகளை செய்ய முடியாத பாவம் நீங்கியது.
கோயில் அமைப்பு : கழுகாசலமூர்த்தி கோவில் அருகேயுள்ள மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும் கோவிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமண சிற்பத்தொகுதிகளும், அய்யனார் சுனையும் உள்ளன. தெப்பக்குளத்தின் அழகிய தோற்றம் தென்னிந்தியாவின் எல்லோரா என அழைக்கப்படும் வெட்டுவான் கோவிலின் பெரும்பாறையில் 25 அடி ஆழத்தில் சதுரமாகத் தோண்டி வேறெங்கும் காண முடியாத சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கண்கவர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு விமானம் கிடையாது. சுற்றுப் பிராகாரமும் கிடையாது. மலை 300 அடி உயரம் உள்ளது. கர்ப்பக் கிரகமும் அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன. கோவிலில் அர்த்த மண்டபம் உள்ளது. கோவிலில் நான்கு பக்கங்களிலும் உமாமகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா சிற்பங்கள் உள்ளன.
குடைவரை கோயில் திராவிட கட்டிட கோயில் வடிவமைப்பை பயன்படுத்தி சுமார் கிபி 800ல் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் குடைவரை குகைக் கோயில் என்றது ஞாபகம் வருவது எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குகைக் கோயில். அந்த வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள எல்லோரா என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக மலையை குடைந்து குகை கோயிலை பாண்டிய மன்னர்களால் செதுக்கப்படுள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர், பூத கணங்கள் என பல சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல சிலைகள் முழுமைப்பெறாமலும் நிற்கின்றன.
வெட்டுவான் கோயில் : இந்த கோயில் ஒரு டூம் அல்லது தாமரைப் பூ தொங்குவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான கழுகு மலை மீது ஏறி சற்று எட்டிப்பார்த்தால் மிகவும் கலைநயமிக்க வெட்டுவான் கோயில் தென்படுகிறது. ஒரு பெரிய மலையை ‘ப’ வடிவில் செதுக்கி அதில் 7.5 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, கோயிலை மேலிருந்து கீழாக வெட்டி அற்புதமாக உருவாக்கியுள்ளனர். இதில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் மலையை ஒரு மிகச் சிறந்த சிற்பக்கூடமாக காட்சி அளிக்கிறது. கோயிலே ஒரு பகுதி நிறைவடையாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரேபாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது ‘வெட்டுவான் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட இக்கோயிலின் அடிப்பகுதி மட்டும் முழுமை பெறாமல் இருக்கிறது. முற்றுப்பெறவிட்டாலும்கூட, தெய்விகத் தன்மையுடன் பிரம்மா, திருமால், தேவகன்னியர்கள், பூத கணங்கள் என்று பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. சிம்மங்களின் சிற்பங்கள் அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் கோயில் முகப்பில் சிவபெருமானும், உமையவளும் அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிற்பம் பேரெழில் வாய்ந்தது. இப்போது கோயில் கருவறைக்குள் சிவலிங்கத்துக்குப் பதில் பிள்ளையார் சிலை வைத்து வணங்குகிறார்கள். ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட மிருதங்க தட்சிணாமூர்த்தி இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. திருமலை வீரர், பராந்தக வீரர் எனும் பெயர் பெற்ற பாண்டிய நாட்டுப் படைகள் இந்த ஊரில் தங்கியிருந்தது பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.
தல வரலாறு : பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். கல்லுக்கு உயிர் கொடுக்கும் வித்தை அறிந்த வித்தகர் அவர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். அப்போது அவரது மகன் கூட்டத்தில் தொலைந்து போய்விட்டான். தனது மகனைப் பல இடங்களில் தேடியும் சிற்பியால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருடங்கள் பல உருண்டன. மகனை இழந்த துயரத்தில் 'அரைமலை' என்று அழைக்கப்படும் இந்தக் கழுகுமலைக்கு வந்த சிற்பி இங்கேயே தங்கிவிட்டார். சமணத் துறவிகளுக்கு வேண்டிய சிலைகளைச் செதுக்கிக் கொடுத்து வந்தார்.
அப்போது சிற்பியிடம் வந்த மக்கள், “இளஞ்சிற்பி ஒருவன் கற்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறான். நீ என்ன செதுக்குகிறாய்? அவன் எவ்வளவு நேர்த்தியாக சிலைகளைச் செய்கிறான் தெரியுமா என்று கூறினர். வருகிறவர், போகிறவர்கள் அனைவரும் அந்த இளஞ்சிற்பியைப் பற்றிப் பாராட்டிச் சொல்லவே, அவருக்குக் கோபம் தலைக்கேறியது. இளஞ்சிற்பி மீது வெறுப்பும், ஆத்திரமும் அதிகமாகியது. ஒருநாள் கோபத்துடன் இளஞ்சிற்பியை நோக்கிச் சென்ற சிற்பி, தன் கையில் வைத்திருந்த உளியால் அவரைத் தலையில் தாக்கினார். உடனே இளஞ்சிற்பி வலி தாங்கமுடியாமல், “அப்பா...” என்று அலறியபடி கீழே விழுந்தான். குரல் கேட்டதும் நடுங்கிப் போன சிற்பி ஓடிச் சென்று கீழே விழுந்தவனைத் தாங்கிக் கொண்டார். அப்போதுதான் இளஞ்சிற்பியின் முகத்தைப் பார்த்தார். ஒருகணம் துடித்துப்போனார். காரணம், திருவிழாவில் காணாமல் போன தனது மகன் தலையைத்தான் உளியால் வெட்டியிருந்தார். தனது மகன் செதுக்கியச் சிற்பங்களையும், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கோயிலையும் பார்த்து மலைத்துப் போனார் சிற்பி. தலை வெட்டப்பட்டு இறந்த தனது மகனைத் தூக்கித் தனது மடியில் போட்டுப் புலம்பினார். இதனால்தான் இந்தக் கோயில் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன என்று கூறுகிறார்கள். அழகான சிற்பங்களையும், தந்தை மகன் பாசத்தையும் தாங்கி இன்றும் உயிரோவியமாகப் பாறைமீது கம்பீரமாக நிற்கிறது இந்தக் கோயில். கழுகுமலையில் வெட்டுவான் கோயில் மட்டும் இல்லாமல் சமணச் சிற்பங்கள் நிறைந்த சமணப் படுகைகளும், முருகன் கோயிலும் இருக்கின்றன. இங்கிருக்கும் சமணப் படுகைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு பல்வேறு சமணச் சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சியளிக்கின்றன. மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கழுகுமலை முழுவதும் நிறைந்திருக்கின்றன.
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரை உலகறியச் செய்த அருமையும் இந்த கழுகாசல மூர்த்திக்கே சாரும். பாட்டுக்கொரு பாரதி இங்கு வந்து பாடியதும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதராலும், சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதராலும், கழுகுமலைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயராலும், நாடக உலகில் புகழ்பெற்ற எம்.ஆர். கோவிந்தசாமி அவர்களாலும், ஏனைய புலவர்களாலும் புகழ்பெற்றது கழுகுமலையாகும்.
இந்த ஆலயத்தில் தைப்பூச திருவிழா, பங்குனி உத்தரம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலய மூர்த்தியை வணங்கினால் செவ்வாய் தோஷம்,திருமணத்தடை போன்றவை நீங்குவது மட்டுமல்லாமல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாகும்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோவில்பட்டி,சங்கரன்கோவில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு