இரும்பறை, ஓதிமலையாண்டவர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயம்புத்தூரில் இருந்து 48 கி.மீ தூரத்தில் புளியம்பட்டி உள்ளது. அங்கிருந்து 10 கி.மீ சென்றால் இரும்பறையை அடையலாம். சத்தியமங்கலம் அருகே 25 கி.மீ தொலைவில் ஓதி மலை பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .
மூலவர் : ஓதிமலையாண்டவர்
உற்சவர் : கல்யாணசுப்ரமணியர்
தல தீர்த்தம் : சுனை தீர்த்தம்
தல விருட்சம் : ஓதிமரம்
தலச் சிறப்புகள் : ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும், எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார். ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முக முருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சிவனுக்கு ஐந்துமுகங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவை அவை. இந்த முகங்களின் மூலமே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார். அதனடிப்படையில், அவரது பிள்ளையான முருகனுக்கும் முதலில் ஐந்து முகங்களே இருந்தது. இதை மனதில் கொண்டு, இங்குள்ள சிலை வடிக்கப்பட்டது. படைப்பின் ஆதாரமான "ஓம்' என்ற பிரணவத்தின் பொருள் பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டார். தானே படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். தனது தந்தைக்கும் அந்த பிரணவத்தின் பொருளை ஓதினார். எனவே, இவருக்கு "ஓதிமலையாண்டவர்' என்ற பெயர் ஏற்பட்டது.
ஐந்து முகமும், ஆயுதங்களும் கொண்ட முருகனை "கவுஞ்ச வேதமூர்த்தி' என்று அழைப்பர். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். ஓதிமலை அடிவாரத்தில் சுயம்பு விநாயகர் உள்ளார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதிகளுக்கு நடுவே முருகன் இருக்கும்படியாக, சோமாஸ்கந்த அமைப்பில் இக்கோயில் உள்ளது. இடும்பன், சப்தகன்னியர் சந்நிதிகளும் உள்ளன. பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் "இரும்பறை' எனப்படுகிறது.
தல வரலாறு : பிரம்மதேவன் ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக கைலாயத்திற்கு சென்றார். வழியில் இருக்கும் விநாயகரை மட்டும் தரிசனம் செய்துவிட்டு, முருகப்பெருமானை வணங்கிகாமலே சென்றுவிட்டார். பிரம்மதேவனை விட்டுவிடுவாரா முருகர்! பிரம்மாவை அழைத்து பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். வகையாக மாட்டிக் கொண்டார் பிரம்மதேவர். பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியவில்லை. ‘பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியாத நீ படைக்கும் தொழிலை செய்யக்கூடாது’ என்று கூறிய முருகப்பெருமான், பிரம்மாவை சிறையில் அடைத்துவிட்டு, படைக்கும் தொழிலை முருகப்பெருமானே ஏற்றுக்கொண்டார். முருகப் பெருமானின் இந்த படைப்பு ‘ஆதிபிரம்மசொரூபம்’ என்று அழைக்கப்பட்டது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தது. இதனால் அவர்களுக்கு இறப்பு இல்லாமல் பூமியில் பாரம்தாங்க முடியவில்லை. பூமாதேவி தவித்து போய்விட்டாள். இதனால் படைப்புத் தொழிலை முருகப்பெருமானிடம் திரும்பவும் பெற்று, பிரம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பூமா தேவி சிவபெருமானிடம் வைத்தார்கள். பூமாதேவியின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் முருகப் பெருமானிடம் சென்று, பிரம்மாவை விடுவித்து அவருக்கே படைக்கும் தொழிலை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் செய்ததால் இத்தலம் ‘ஓதிமலை’ என்ற பெயரை பெற்றதாக கூறுகிறது வரலாறு. இந்த சம்பவத்திற்குப் பின்பு பிரம்மாவிற்கும் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கூறி, சிறையில் இருந்து விடுவித்து படைக்கும் தொழிலை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் முருகப்பெருமான்.
பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டார். படைக்கும் தொழிலை செய்து வந்த முருகப்பெருமானுக்கு அந்த சமயம் ஐந்து முகங்களும், எட்டு கரங்களும் இருந்தது. முருகன், சிவபெருமானின் அம்சம் அல்லவா? அதனால்தான் எம்பெருமானை போலவே, முருகனும் இத்தலத்தில் ஐந்து முகத்துடன் காட்சி தருகின்றார். முருகப்பெருமான், படைக்கும் தொழிலில் ஈடுபட்டபோது இருந்த இந்த உருவத்தில் தான் ஓதிமலையாண்டவராக இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இந்த உருவத்தில் முருகனை வேறு எந்த கோவிலிலும் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முருகனுக்கு ‘கவுஞ்சவேதமூர்த்தி’ என்ற மற்றொரு பெயரும் உள்ளது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, இக்கோவிலின் மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு ரூபமாக காட்சி தரும் விநாயகரை வழிபட்ட பின்பே, முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். முருகன், ‘பிரம்மாவிடம் இருந்து பெற்ற படைக்கும் தொழிலை, திரும்பவும் பிரம்மா இடமே கொடுக்க வேண்டும்’ என்பதை கூறுவதற்காக கைலாயத்திலிருந்து சிவபெருமான் மட்டும்தான் இந்த இடத்திற்கு வந்தார். இதனால் இத்தலத்தில் அம்பிகைக்கு என்ற எந்த தனி சந்நிதியும் இல்லை. சிவபெருமானுக்கு மட்டும் மலை அடிவாரத்தில் ஒரு தனிக் கோவில் இருக்கின்றது. பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டு பிரம்மாவை இரும்பு சிறையில் அடைத்து விட்டார்.
போகர் சித்தர் ஒரு முறை பழனி முருகரை தரிசிப்பதற்காக இந்த வழியில் வந்தார். அப்போது அவருக்கு பழனிக்கு செல்ல சரியான பாதை தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் முருகப் பெருமானை நினைத்து தவமிருந்தார். அப்போது இத்தலத்தில் உள்ள ஐந்து தலை முருகப்பெருமான், ஒரு தலை முருகனாக மாறி போகர் சித்தருக்கு பழனி மலைக்கு வழியை காட்டினார். ஒருமுகமாக அவதாரமெடுத்த முருகப்பெருமான் இத்தலத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறுமுக அவதாரத்தில் இருக்கும் முருகப்பெருமான், தன் உருவத்தை ஒரு முகத்துடன் மாற்றி போகருக்கு வழிகாட்ட சென்றதால், ஓதி மலையில் ஐந்து முகத்துடன் இருக்கின்றார் என்றும், மீதமுள்ள ஒரு முகத்தோடு குமாரபாளையத்தில் இருக்கின்றார் என்று வரலாறு கூறுகின்றது.
கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும். வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும். இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் "விபூதிக்காடு - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது.
எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே தொடங்குவார்கள். இது தொழிலுக்கு மட்டுமல்ல. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்தாலும் இந்த முருகப்பெருமானிடம் வரத்தைக் கேட்டு விட்டுத்தான், தங்களது வீட்டில் நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் இந்த ஊர் மக்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும் இந்த முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளலாம்.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு உள்ள கல்யாண சுப்பிரமணியரை வழிபடுகிறார்கள். பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன், ஒரு வெள்ளைப் பூவையும், சிவப்பு பூவையும் தனித்தனி இலைகளில் வைத்துக் கட்டி முருகன் முன்னிலையில் வைக்கிறார்கள். அர்ச்சகர் அல்லது குழந்தைகள் மனதில் நினைத்த பூ பொட்டலத்தை எடுத்துத் தந்தால், அந்தச் செயலைத் தொடங்கலாம் என முடிவெடுக்கின்றனர். இந்த சடங்கிற்கு "வரம் கேட்டல்' என்று பெயர். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறவும், அறியாமல் செய்த தவறால் ஏற்பட்ட பாவம் நீங்கவும் சுவாமிக்கு பாலபிஷேகமும், சந்தனக்காப்பும் செய்கிறார்கள்.
திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். சஷ்டி, கார்த்திகை, அமாவாசை, தினங்களில் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். மார்கழி மாதத்திலும் இந்த நேரத்தில் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர், ஈரோடு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு